சத்குரு:

பிரச்னைகளை விரும்பும் மனிதரை நான் எப்போதும் விரும்புவதில்லை. பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் மனிதரையே நான் விரும்புகிறேன்.

மக்கள் எப்போதும் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். பிரச்னைகளைத் தவிர்க்கும்படி நான் சொல்லவில்லை. நீங்கள் கண்களை மூடிக்கொண்டால் பிரச்னைகள் தானாக ஓடிவிடும் என்றும் நான் சொல்லவில்லை. பிரச்னைகள் அப்படி ஓடாது. ஆனால், அந்த பிரச்னைக்குள் நீங்கள் சிக்கிப் போய்விடக் கூடாது. சிக்கிப் போகும்போது நீங்களே ஒரு பிரச்னையாக மாறிவிடுவீர்கள். ஏனெனில், பிரச்னை தீர நீங்கள் விடமாட்டீர்கள். உங்கள் திருப்தி அந்தப் பிரச்னையைச் சார்ந்தே இருக்கிறது, உங்கள் இன்பம் அந்த பிரச்னையைச் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் கரைந்து போவதுகூட அந்தப் பிரச்னையைச் சார்ந்தே இருக்கிறது. எனவே, பிரச்னைகளை விரும்பும் மனிதரை நான் எப்போதும் விரும்புவதில்லை. பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் மனிதரையே நான் விரும்புகிறேன். இல்லை, நான் தீர்வைத்தான் விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்லலாம்.

நீங்கள் சொல்ல வருவதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் தீர்வை அடைய நீங்கள் வெளிப்படுத்தும் அதிகப்படியான சந்தோஷத்திலேயே, எங்கோ, அந்த பிரச்னையையும் அனுபவிக்க ஆரம்பிக்கிறீர்கள். பிரச்னைகளை ஒருமுறை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு இந்த உலகில் பிரச்னைகள் இருப்பதையே எப்போதும் விரும்புவீர்கள்.

ஒவ்வொரு பிரச்னைக்கும் அவ்வப்போது சிறுசிறு தீர்வு என்பது அவசியமற்றது. ஆமாம், யாராவது ஒருவர் ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டால், அதில் இருந்து அவரை வெளிக்கொணர்வது முக்கியம்தான். ஆனால், உண்மையில் நிகழ வேண்டியது அதுவல்ல. ஒவ்வொரு மனிதரும் தனக்குள் ஒளிர்ந்து விட்டால், ஒவ்வொரு மனிதரும் தன்னையே ஒரு தீர்வாக்கிக்கொண்டால், பிறகு அவர் தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்த மாட்டார். எனவே, பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய அவசியமே நமக்கு வராது. ஓ, இது ஒரு கனவு என நினைக்கிறீர்களா? அப்படிக் கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒளிர்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது. இதுவரை சிறிய அளவில் மட்டுமே இதற்கான வாய்ப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், தற்போது அந்த வாய்ப்பு பெரிய அளவில் வழங்கப்படுகிறது. அந்த வாய்ப்பை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.