முன்காலத்தில், நாள்காட்டியை பார்க்காமலே "இன்று பௌர்ணமி, இன்று அமாவாசை" என்று தங்கள் உள் உணர்வில் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய ஃபேஸ்புக் காலத்தில் பௌர்ணமி நாளெல்லாம் நம் கவனத்திலேயே இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இந்த பௌர்ணமி நாளுக்கு என்னதான் மகத்துவம்? விளக்குகிறது இக்கட்டுரை...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். காரணம், அந்நாளில் நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாய் இருக்கும். நீங்கள் காணும் எந்த ஒரு பொருளும், அழகாய் இருந்தால் அதன்பால் உங்கள் கவனம் சற்றே அதிகமாகும் அல்லவா? இதுவே அசிங்கமாய் இருக்கும் ஒரு பொருளின் மீது நீங்கள் ஈர்க்கப்படுவது கிடையாது என்பதை கவனித்திருக்கிறீர்களா? நிலவிற்கு நம்மைச் சுண்டியிழுக்கும் குணமிருக்கும் அதே சமயத்தில், அதனால் நம் உள்வாங்கும் தன்மையையும் அதிகரிக்க முடியும். மற்றொரு விஷயம், இந்தப் பூமி, நிலவின் நிலையோடு ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும்.

பௌர்ணமி இரவில் தியானம் செய்யும் பொழுது, இயற்கையாய் இருப்பதை விட அதிகமாகவே உங்கள் சக்திநிலை உயரும்.

நிலவின் வேறு எந்த நிலையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போதும், முழுநிலவாய் அது இருக்கும் தருணத்தில் அது வெளிப்படுத்தும் அதிர்வும், சக்தியும் மிக வித்தியாசமாய் இருக்கிறது. அதன் காந்த ஈர்ப்பு சக்தியும் மிக வித்தியாசமாய் உள்ளது. நிலவு, பூமியின் மேல்மட்ட பகுதிகள் நிலவிற்கு திறந்தநிலையில் இருப்பதால், நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் மேல் பகுதிகளின் மேல் தீவிர தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இயற்கையிலேயே இது போன்ற 'இழுக்கும்' சக்தி வேலை செய்யும்போது, உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், உங்களுக்குள் இருக்கும் சக்தி, இயல்பாகவே மேல்நோக்கி பயணம் செய்யும். உங்கள் ரத்தஓட்டமும் சரி, பிராண சக்தியும் சரி, வெளிஅதிர்வுகள் மாறியிருப்பதால், எப்போதும் போலன்றி வேறுவகையில் ஓடத் துவங்கும். எப்படி நீர்மட்டத்தில் வழக்கத்தை விட பௌர்ணமி அன்று நிலவின் தாக்கம் அதிகமாய் இருக்கிறதோ, அதனால் கடலின் அலைகள் அதிகமாக மேலெழும்புகிறதோ, அதே போல் உங்கள் ரத்தமும் மேல் இழுக்கப்பட்டு, மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

இந்த மேலெழும்புதல் நடைபெறும்போது, உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது மேம்படும். சிறிது புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பௌர்ணமி அன்று இன்னும் அதிக தடுமாற்றத்துடன் இருப்பார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே? அன்றைய தினம் ஏற்படும் சக்தி ஓட்ட அதிகரிப்பால், உங்கள் குணம் எதுவோ அது மேம்படுகிறது. நீங்கள் சமநிலை இல்லாமல் இருந்தால், அன்று சமநிலையின்மை அதிகரிக்கும். உங்களுக்குள் உள்ள பிற பண்புகளும்கூட இதனால் மேன்மையடையும். ஆனால், அதனை உணரும் நுண்ணுணர்வு பலரிடம் இருப்பதில்லை. நீங்கள் தியானநிலையில் இருந்தால், அன்று உங்கள் தியானநிலை ஆழமாகிறது. நீங்கள் அன்பு நிறைந்தவர் என்றால், அன்று அன்பு பெருக்கெடுக்கும். நீங்கள் பயம் நிறைந்தவராய் இருந்தால், உங்கள் பயவுணர்வு இன்னும் அதிகரிக்கும். உங்கள் குணம் எதுவோ, அதனை அந்நாள் மேம்படுத்தும்.

ஆகவே ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக தியானம் செய்பவர்களுக்கு, பௌர்ணமி இரவு மிக உகந்ததாய் இருக்கும். ஏனென்றால் பௌர்ணமி இரவில் தியானம் செய்யும் பொழுது, இயற்கையாய் இருப்பதை விட அதிகமாகவே உங்கள் சக்திநிலை உயரும். அப்படி சக்திநிலை உயரும் போது, விழிப்புணர்வு ஆழமாகிறது. சக்திநிலை மேம்படாமல், விழிப்புணர்வைப் பற்றி நாம் பேசவே இயலாது. அதனால், இந்த இரவில் தோற்றத்துவத்தில் ஏற்படும் இந்தப் பிரம்மாண்ட மாற்றத்தை, நாம் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இலவசமாய் கிடைக்கும் சவாரிபோல், இந்நாள் உங்களுக்கு அளப்பரிய சக்தியையும் விழிப்புணர்வையும் வழங்கும்.

  • ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்க வளாகத்தில், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளன்று தியானலிங்கத்திற்கு பாலும் நீரும் உங்கள் கைகளாலேயே நீங்கள் அர்ப்பணிக்கலாம்.
  • லிங்கபைரவியில் பௌர்ணமி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
  • பௌர்ணமி அன்று தியானலிங்க வளாகமும், லிங்கபைரவியும் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும். இந்த வளாகத்தில் அன்பர்கள் தியானம் செய்யலாம். பௌர்ணமி அன்று பெண்களும், அமாவாசை அன்று ஆண்களும் தியானலிங்கத்தில் தியானம் செய்ய முடியும்.
  • மேலும் ஈஷாவில் புத்த பௌர்ணமியும், குரு பௌர்ணமியும் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.