சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 7

"இது போட்டி உலகம்; போட்டிபோட்டு படிக்க வேண்டும்; அப்போதுதான் சாதிக்க முடியும்," என்று தன்னம்பிக்கை பிரச்சாரம் என்கிற பெயரில் நடைபெறும் பிரச்சாரங்களை இக்காலகட்டத்தில் பள்ளிகளில் நாம் பார்க்கிறோம். ஈஷாவினுடைய பள்ளி எப்படிப்பட்டது?! சேகர் கபூர் இந்தக் கேள்வியைக் கேட்க, இங்கே சத்குரு பதில் சொல்கிறார்...

Question: சேகர் கபூர்: சத்குரு, குழந்தைப்பருவம் பற்றியும், ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றியும் பேசுவோம். உண்மையில் ஈஷா ஹோம் ஸ்கூல் எதற்காக உருவாக்கப்பட்டது?

சத்குரு:

அடிப்படையில் கல்வி என்பது மனிதனின் புரிதலை அதிகப்படுத்துவதாகத்தான் இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் கல்வி என்பது தகவல்களைத் திணிப்பதாக மாறிவிட்டது. தகவல்களும் நல்லதுதான், ஒரு வழியில் பயனுள்ளதுதான், ஆனால் அது பொருளீட்ட மட்டுமே உதவும்.

உங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் இந்த கல்விமுறை எந்த விதத்திலும் உதவாது. இந்த பிரபஞ்சத்தில் பெரும்பாலான கல்விமுறைகள் பொருளீட்ட மட்டுமே உதவுவதாக உள்ளன, உங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள உதவுவதில்லை. இங்கு, ஈஷா ஹோம் ஸ்கூலில், உங்கள் எல்லைகளை விரிவுபடுத்த உதவுவதாகத்தான் கல்வியை அமைத்திருக்கிறோம்.

எப்போதும் எதையும் தெரிந்து கொள்ளத் துடிக்கும் உங்கள் புத்திசாலித்தனத்தை தூண்டிவிடுவதாகவும், எதையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல் அனைத்து சாத்தியங்களைப் பார்க்கும்படியாகவும் அமைத்திருக்கிறோம். மேலும் ஒவ்வொன்றுக்கும் ரெடிமேடு பதில்களை அள்ளித் தெளிக்காமல் வாழ்க்கை பற்றிய இரகசியங்களை நீங்களே அறிவதற்கான ஆவலை தூண்டிவிடுவதாக அமைத்திருக்கிறோம். ரெடிமேடு பதில்கள் என்பது மதங்களுக்கே உரித்தானது. வாழ்க்கையை இந்த பதில்கள் உதவாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இவர்கள் மிகவும் பின்தங்கிவிட மாட்டார்களா என்னும் கேள்வி எழுகிறதே... அல்லது நீங்கள் அமைத்திருக்கும் இந்த கல்வி முறையால் போட்டிகள் நிறைந்த இந்த உலகை சந்திக்கும் அவர்களுடைய திறன் மேம்படும் என்று நினைக்கிறீர்களா?

சத்குரு:

இப்போது நீங்களும் நானும் நடந்து போய்க் கொண்டு இருக்கிறோம். நீங்கள் என்னுடன் போட்டியில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று என்னைவிட சிறிது வேகமாக நடப்பீர்கள் அல்லது அப்படி முடியவில்லை என்றால் என்னைவிட மெதுவாக நடக்கும் அதே நேரத்தில் அந்த வருத்தத்திலும் இருப்பீர்கள்.

நீங்கள் என்னை விட வேகமாக நடக்க முடிந்தால், வாழ்க்கையின் உச்சத்திற்கு போய்விட்டதாக நினைப்பீர்கள். முடியவில்லை என்றால் அந்த சோகத்தில் மனவலியுடன் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் என்னுடன் போட்டியிலேயே இல்லை என்றால் வெவ்வேறு சாத்தியங்களை எல்லாம் முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள்.

ஒரு வேளை பறப்பதற்குக் கூட நீங்கள் வழி கண்டுபிடித்திருக்கலாம். நான் வேகமாக நடந்து கொண்டிருப்பேன், ஆனால் நீங்களோ பறந்து கொண்டிருப்பீர்கள். என்னுடன் போட்டி போடுவதிலேயே குறியாக இருந்தால் ஒரு வேளை பறப்பதற்கான வாய்ப்பையே நீங்கள் இழந்துவிடக்கூடும்.

எனவே இந்த போட்டிகளின் காரணமாக மனிதனின் திறமைகளே தாறுமாறாக ஆகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், போட்டியில் இருக்கும்போதுதான் மக்கள் தங்கள் முழுமையான திறமையை அடைய முடியும் என்று தற்சமயம் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். ஆனால் இது மிகவும் தவறான கருத்து. மிகமிகத் தவறான கருத்து.

உண்மையாகப் பார்த்தால், எப்போது ஒருவர் அதிக நேரம் மகிழ்ச்சியில் திளைக்கிறாரோ, ஆனந்தத்தில் இருக்கிறாரோ, அப்போதுதான் அவரிடமிருந்து முழுத் திறமையும் வெளிப்படும். ஆனால் போட்டியில் இருக்கும்போது, தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இருக்கும்போது, முழுத் திறமை வெளிப்படாது. வேண்டுமானால் மற்றவர்களைவிட சிறிது அதிகமாக செய்து காட்ட முடியும், அவ்வளவுதான்.

இத்தகைய போட்டிகள் காரணமாகத்தான் மனிதனின் அறிவாற்றல் தற்போது முழுவதுமாக மறைந்து வருகிறது. கல்வி, போட்டி என்று சொல்லி மனிதனின் நுண்ணிய அறிவாற்றலை, திறமையை அழித்து வருகிறீர்கள். தற்போது சிறுவர்களுடைய வாழ்க்கையே தனக்கு அடுத்துள்ளவரை விட 2 மார்க்குகள் அதிகமாக வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது.

சேகர் கபூர்: ஆம்.

சத்குரு: இதுபோன்ற போட்டியில் ஒருவர் மட்டும்தான் ஜெயிக்கமுடியும். மற்றவர்கள் எல்லாம் தோற்றுததான் போவார்கள்.

சேகர் கபூர்: ஆமாம்.

சத்குரு: அப்படித்தானே? இதன்மூலம் ஒரு மோசமான சமூகம் மட்டுமே உருவாக முடியும். நான் சொல்ல வருவது என்னவென்றால், இந்தப் பள்ளியின் முதல்வர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு இந்தப் பள்ளியின் தோட்டக்காரரும் முக்கியம் என்று சொல்கிறேன். எதையும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்கு கற்றுத்தரும் சத்குரு எவ்வளவு முக்கியமோ அல்லது நமக்கு பாடங்கள் சொல்லித்தரும் ஆசிரியர் எவ்வளவு முக்கியமோ அதோ போல நமக்காக பள்ளியைக் கூட்டுபவரும் முக்கியமானவர்தான் என்று இங்குள்ள சூழ்நிலையை வைத்து சிறுவர்கள் அவர்களாகவே புரிந்து கொள்கிறார்கள்.

இதை நாம் ஒரு தத்துவம் போல மாணவர்களுக்கு சொல்வதில்லை. அவர்கள் அப்படி புரிந்துகொள்வது போல இங்கு சூழ்நிலையை உருவாக்குகிறோம்.

சேகர் கபூர்: ஓ, சரி.

சத்குரு: ஒரு முறை, இப்பள்ளிச் சிறுவன், 12 வயதிருக்கும், புத்திசாலிப் பையன். எனக்கு 4 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தான். அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்த சரளமான மொழி, அவன் மனதில் ஓடிய எண்ணங்கள் மற்றும் அந்த எண்ணங்களை அவன் தெரிவித்திருந்த விதம் இவை அனைத்தும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தன. "ஓ, இப்படி ஒரு சிறுவன் இங்கிருக்கிறானா? நான் அவனை சந்திக்க வேண்டும்," என்று நான் சொன்னேன்...


அடுத்த வாரம்...

ஈஷா ஹோம் ஸ்கூலின் அந்த புத்திசாலிப் பையனை சத்குரு சந்தித்தாரா? இருவரிடையே நிகழ்ந்த உரையாடல் என்ன? அடுத்த வாரப் பகுதியில் காணலாம்.