இப்போது கூட உலகின் எங்கோ ஒரு மூலையில் போர்ச்சூழல் நிலவிக்கொண்டு தான் இருக்கிறது. எத்தனை எத்தனையோ போர்கள் தனது கொடூரக் கால்தடங்களை பூமியில் பதித்துவிட்டுச் சென்றிருந்தாலும், போர் அபாயம் இன்னும் நீங்கியதாக தெரியவில்லை. இதற்கு என்னதான் வழி?! போர் குறித்த சத்குருவின் பார்வை நமக்கு பதில் தருவதாக அமைகிறது!

சத்குரு:

நான் யாருடனும் போரிட்டது இல்லை. போர்களில் கலந்து கொண்டதும் இல்லை. ஆனால், போர்களைக் கவனித்து வந்திருக்கிறேன்.

இன்றைக்கும் போர்களில் இறப்பவர்கள் எண்ணிக்கை, எங்கோ உட்கார்ந்திருக்கும் சிலரால் தீர்மானிக்கப்படுகிறது.

போர்கள் இந்தப் பூமிக்குப் புதிதல்ல. இனத்துக்கும் இனத்துக்கும், சமூகத்துக்கும் சமூகத்துக்கும், நாட்டுக்கும் நாட்டுக்கும் போர் நடந்திருக்கிறது. தன்னால் முடிந்தவரை கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு மனிதனிடத்தில் இருக்கும்வரை, போர்கள் இருக்கும். தன் தலைமை, தன் மதம், தன் கொள்கைகள் இவற்றை மற்றவர் மீது திணிக்க மனிதன் பேராசைப்படும் வரை, போர்கள் ஓயாது.

போர்களால் எத்தனை இளைஞர்கள் முடமானார்கள்? எத்தனை பெண்கள் விதவையானார்கள். எண்ணிக்கையற்று எத்தனை குழந்தைகள் அநாதையானார்கள்? போர் கொண்டு வந்த உடல்ரீதியான, மனரீதியான வலி என்ன? இந்தப் பூமியின் ஆரோக்கியம் அல்லவா அழிக்கப்பட்டிருக்கிறது!

இரண்டாவது உலகப்போரின் இழப்புகளைப் பார்த்து கலங்கிப்போன தேசங்கள், இனி போர்களே வேண்டாம் என்று அறைகூவல் விடுத்தன. ஐக்கிய நாடுகள் சபை உருக்கொண்டது. ஆனால் எந்த நாடாவது தன் ஆயுதங்களைக் குறைத்துக் கொண்டதா? இல்லை, ஆயுதங்களைத் தயாரிக்கும் நாடுகள் அவற்றை விற்பதற்காகப் போர்களை மறைமுகமாக ஆதரிக்கின்றன. சகமனிதனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று தெரிந்தே ஒன்றை வியாபாரம் செய்வது, மனிதகுலத்தையே அவமானம் செய்வது போல் அல்லவா?

ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியைப் பார்த்தால், மலைப்பாக இருக்கிறது. போரைவிட போருக்குத் தயாராவதற்கே இந்த தேசங்கள் பெருமளவு செலவழிக்கின்றன. இந்த நிதியில் சிறு பகுதி மனித ஆரோக்கியத்துக்காகவும், கல்விக்காகவும், குழந்தைகள் நலத்துக்காகவும் திசை திருப்பப்பட்டால் போதும். மனிதகுலம் எவ்வளவோ மேம்பட்டுவிடும். எல்லா நாடுகளும் இதற்குச் சம்மதித்தால், இன்னும் 50 ஆண்டுகளுக்குள் போர்கள் என்பதே இல்லாமல் போய்விடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் தேசத்தில், முன்பெல்லாம் போர்களின்போது ஒரு தர்மம் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு போர் நிறுத்தப்படும். அந்தந்த அணிகளில் காயமானவர்களையும், மரணமடைந்தவர்களையும் கவனிக்க பின் மாலை நேரம் கிடைக்கும்.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் நடந்தபோது, உடுப்பியைச் சேர்ந்த மன்னர், இரண்டு அணிகளுக்கும் தேவையான உணவை வழங்கும் பொறுப்பேற்றார். தினம் மாலையில் போர் நிறுத்தப்பட்டதும், இரண்டு அணி வீரர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு புசித்தனர். ஒவ்வொரு நாளும் கச்சிதமான அளவு உணவு சமைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் ஒரு தளபதி.

"மன்னா, பகலில் போர் நடக்கும் நேரத்திலேயே உணவு தயாராக ஆரம்பித்துவிடுகிறது. போரில் எவ்வளவு பேர் மரணமடைவார்கள், மிச்சம் எவ்வளவு பேர் சாப்பிட வருவார்கள் என்று எப்படி இவ்வளவு சரியாக உங்களால் கணிக்க முடிகிறது?"

இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தினம்தோறும் 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டால் போதும். போர்கள் முற்றிலுமாக ஓய்ந்துவிடும்!

உடுப்பி மன்னர் சொன்னார், "அது எனக்கும், கிருஷ்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஒவ்வோர் இரவிலும் கிருஷ்ணனைக் கவனிப்பேன். அவன் எவ்வளவு வேர்க்கடலைகளை வாயில் போட்டு மெல்கிறானோ, அவ்வளவுபேர் அடுத்த நாள் போரில் இறப்பார்கள்" என்றார்.

இன்றைக்கும் போர்களில் இறப்பவர்கள் எண்ணிக்கை, எங்கோ உட்கார்ந்திருக்கும் சிலரால் தீர்மானிக்கப்படுகிறது.

இப்போது இருக்கும் ஆயுதங்களின் உதவியுடன் பலகோடிப் பேரை நிமிடத்தில் ஆவியாக்கிவிட முடியும். மனிதனாகப் பிறந்தவன் என்றாவது ஒருநாள் உலகில் மரிக்க வேண்டியவன்தான். ஆனால், இறப்பவர்களில் பெரும்பான்மையானோர் தங்கள் சக்தி என்ன என்பதை உணராமலேயே அறியாமையோடு இந்தப் பூமியைவிட்டு மறைவார்களே என்பதுதான் என் வருத்தம்.

விஷப் புகையைக் கக்கும் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதாகச் சொல்கிறார்கள். மக்களுக்குத் தீராத நோய்களைக் கொண்டு வரும் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக மிரட்டுகிறார்கள்.

ஒரு வெடிகுண்டு போட்டால், அது வெடிக்கும் இடத்தைச் சுற்றியுள்ளவர்களை ஆனந்தமாக்கும், அமைதியாக்கும் என்றால், அப்படிப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரியுங்களேன். வரவேற்கிறேன். ஆனால், நீங்கள் வெடிக்கும் வெடிகுண்டுகள் கோபத்தையும், அகங்காரத்தையும், ஆத்திரத்தையும், காழ்ப்பையும், வெறுப்பையும் அல்லவா அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன?

என் வகுப்புக்கு வந்திருந்த ஒருவர் சொன்னார், "போர்களால் வேதனையும், வலியும் அனுபவித்தால்தான், மக்கள் மனம் மாறுவார்கள்."

"அப்படியென்றால், அத்தனை பேரையும் கூப்பிட்டு ஒரு கையையோ, காலையோ வெட்டிப் போடுங்கள். வேதனை அவர்களுடைய மனதை மாற்றட்டும்" என்றேன்.

உலகப்போரில் இறந்தவர்கள் எத்தனை லட்சம் பேர்! இன்றுவரை போரில்லாத நாளை இந்தப் பூமி சந்திக்கவில்லையே?

மற்றவர் மீது கொண்ட கருணையினால், அன்பினால், இந்த உலகம் வழிநடத்தப்பட வேண்டாமா? அதை விடுத்து, ஏதோ சில மனிதர்களின் எண்ணங்களை, நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது ஊன்றுவதற்காக இந்தப் பூமி போர்களால் காயப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனித மனதின் அடியில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் பகை உணர்வுதான் போராக வெடிக்கிறது.

இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்கள், ஜெர்மனியின் தாக்குதலால் திணறிக் கொண்டு இருந்த நேரம். இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பலர், "ஆங்கிலேயர்களை ஒடுக்க இதுதான் சரியான சமயம்" என்று சொன்னார்கள்.

"கூடாது" என்று மகாத்மா காந்தி மறுத்தார். "இப்போது அவர்கள் கடினமான சூழலைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் சேர்ந்து தாக்கக்கூடாது. போர் முடியும்வரை காத்திருப்போம்" என்றார்.

எதிரி பலவீனமாக இருக்கும்போது தாக்க விரும்பாத மகாத்மாவைப் பலர் தூற்றினார்கள். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மகாத்மா காந்தி யாருடனும் போர் புரிய விரும்பவில்லை. அவர் தர்மத்தைக் கோரினாரே தவிர, ஆங்கிலேயர்களை எதிரிகளாக நினைக்கவில்லை.

இதுபோன்ற ஆன்மீக ஞானம் கொண்ட தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் போர்கள் நிறுத்தத்துக்கு வரும்.

போரிட வேண்டும் என்ற எண்ணமே, மனிதனிடம் இருந்து மறைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அவனை ஆன்மீகப் பாதையில் வழிநடத்திச் செல்வதால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தினம்தோறும் 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டால் போதும். போர்கள் முற்றிலுமாக ஓய்ந்துவிடும்!