பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 8

இனக்கவர்ச்சிப் பொறி அமைப்பது மற்றும் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ், நூற்புழுக்கள் ஆகியவற்றைப் பற்றியும், நூற்புழுக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது பற்றியும் கூறும் இப்பதிவு, இவற்றுள் நன்மை செய்பவையும் இருக்கின்றன என்பதை சொல்லத் தவறவில்லை! பூச்சிகளைப் பற்றி புதிய தகவல்களை உள்ளடக்கிய இந்த கட்டுரையைத் தொடர்ந்து படித்தறியலாம்!

இனக்கவர்ச்சிப் பொறி

Petbottle Trap

பலவகையான இனக்கவர்ச்சிப் பொறிகள் சந்தையில் கிடைக்கின்றன, பொதுவாக மாம்பழங்களில் காணப்படும் பழ ஈக்களைக் கவர்வதற்கு நாமே எளிமையான இனக்கவர்ச்சி பொறிகளைத் தயார் செய்துகொள்ள முடியும். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் (1 liter pet bottle) எடுத்துக்கொண்டு அதில் மேலிருந்து இரண்டு அங்குலம் விட்டு, ஒரு அங்குல நீள அகலத்தில் ஒரு துளை எடுக்கவேண்டும். இது பூச்சிகள் செல்வதற்கான வழியாகும்.

பூச்சிகளைக் கவர்தல்

மீத்தைல் யூஜினால் 40 சதம் + ஈத்தை ஆல்கஹால் 50 சதம் + வேப்பெண்ணை 10 சதம் கலந்து ஒரு சிறிய பருத்தித் துணியில் முக்கி எடுத்து மூடியின் கீழே கட்டிவிடவேண்டும். பாதி பாட்டில் வரை ஏதேனும் ஒரு ஆயிலை ஊற்றி வைக்கவேண்டும்.

மேற்கண்ட வேதிப்பொருட்கள் இனக்கவர்ச்சிப் பொறியாக செயல்புரிந்து பழப்பூச்சிகளை ஈர்க்கிறது. உள்ளே வந்த பூச்சிகள் ஆயிலில் ஒட்டிக் கொள்கிறது.

பழ ஈக்களின் தாக்குதல் பூக்கும் நேரத்தில்தான் அதிகம் இருக்கும். பூக்கள் பூப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே இந்த இனக்கவர்ச்சிப் பொறியை பயன்படுத்தும்போது பூச்சிகளை நன்கு கட்டுப்படுத்த முடியும், பூக்கள் பூத்தபின்பும், பிஞ்சு விட்ட பின்பும் இதை செய்வதால் பலன் ஏதுமில்லை.

தாவர நோயியல் அறிமுகம்

plant disease triangle

பயிர்களை நோய்கள், பூச்சிகள் மற்றும் நூற்புழுக்கள் போன்றவை தாக்கி சேதத்தை உண்டாக்குகின்றன. மேலும் நுண் ஊட்டம் பற்றாக்குறையும் பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

நோய் மற்றும் பூச்சித் தாக்குதலின் பாதிப்பு எந்த அளவிற்கு ஏற்படும் என்பதை நோய்க்கிருமி அல்லது பூச்சியின் வீரியம், பயிரின் நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் பருவநிலை போன்றவற்றைப் பொறுத்தே அமைகிறது. நோய் அல்லது பூச்சிகள் பரவுவதற்கு சாதகமான பருவகாலம் இருந்து, பயிருக்கும் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும்போது நோய் வேகமாகப் பரவும்.

பூச்சித் தாக்குதலை கண்காணிப்பதை விட நோய்த் தாக்குதலை கண்காணிப்பது மிக அவசியம். பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி 15 முதல் 30 நாட்கள் வரை என்பதால் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், பூஞ்சை அல்லது பாக்டீரியாவின் வாழ்க்கை சுழற்சி மிகக் குறுகியது. இவை ஒரு பயிரைத் தாக்கியவுடன் அதிகமாக இனப்பெருக்கம் செய்து வேகமாக, 2 அல்லது 3 நாட்களிலேயே அதிக எண்ணிக்கையில் பயிர்களைத் தாக்கி பெரிய அளவிற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

நோய் தாக்குதல் (Disease)

கண்களுக்குத் தெரியாத நுண் உயிர்களால் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் நோய் என்று கூறப்படுகிறது. நோய்களை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நூற்புழுக்கள் போன்ற நுண் உயிரிகள் ஏற்படுத்துகின்றன.

வைரஸ்

வைரஸ்களினால் ஏற்படக்கூடிய தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை எற்படுத்தக்கூடியது, வைரஸ் தாக்குதலின் தீவிரம் அதிகம் என்பதால் விளைந்த எல்லாப் பயிரையும் தாக்கி பெரிய இழப்பை ஏற்படுத்தும், எனினும் வைரஸ் நோய்களின் எண்ணிக்கை குறைவானது.

உதாரணமாக வெண்டையில் காணப்படும் மஞ்சள் நரம்பு நோய் வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. உளுந்தில் ஏற்படும் மஞ்சள் தேமல் நோயும் வைரஸ்ஸினால் ஏற்படக்கூடியதே. வெள்ளை ஈ அல்லது பச்சை தத்துப்பூச்சிகளினால் இந்த வைரஸ் நோய் பரவுதல் அடைகிறது.

நோய் வந்த பிறகு வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துவது கடினம். நோயைப்பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், நோய் ஏற்பட்ட செடிகளை உடனடியாக மண்ணில் இட்டுப் புதைத்து அழிப்பதும் வைரஸ் நோய் பரவாமல் தடுக்கக்கூடிய முக்கிய வழிமுறைகளாகும்.

பூஞ்சைகள்

தாவரங்களில் பெரும்பாலான நோய்கள் பூஞ்சைகளால் (Fungus) ஏற்படுகிறது. பல்வேறு வகையான பூஞ்சைகள் பல்வேறு விதமாக பயிர்களைத் தாக்குகிறது. பூஞ்சைத் தாக்குதலினால் மிகப்பெரிய சேதம் ஏற்படாவிடினும், ஓரளவு சேதம் ஏற்படுகிறது. இலைப்புள்ளி நோய், வாடல் நோய் (Wilt), துருநோய் (Rust), தண்டழுகல் (Stem rot) மற்றும் வேர் அழுகல் (Root rot) போன்ற பல நோய்கள் பூஞ்சைகளினால் ஏற்படுகிறது.

உதாரணமாக நெல்லில் ஏற்படும் குலைநோய் பூஞ்சையினால் ஏற்படுகிறது. நெற்கதிரின் தண்டுப்பகுதியைத் தாக்குவதால் நெல் கதிர்கள் சாய்ந்துவிடும். நோய்க்குச் சாதகமான பருவகாலத்தில் மிக அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிலக்கடலையில் காணப்படும் டிக்கா இலைப்புள்ளி நோய் (Tikka disease) செர்க்கோஸ்போரா என்ற பூஞ்சையினால் ஏற்படுகிறது. நோய் அதிகரிக்கும்போது பெருமளவு இலையை உதிர்த்து மகசூல் இழப்பிற்குக் காரணமாகிறது. எனினும் நன்மை செய்யும் பூஞ்சைகள் பல உள்ளன. (உதாரணம் - டிரைகோடெர்மா விரிடி)

பாக்டீரியா

இலைப்புள்ளி நோய் மற்றும் கருகல் நோய்கள் பாக்டீரியாவினால் வருகின்றது.

உதாரணமாக எலுமிச்சையில் காணப்படும் சிட்ரஸ் கேன்கர் (Citrus Canker) பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்களில் பழுப்பு நிறத்தில் சொரசொரப்பான புள்ளிகள் காணப்படும். நோய் தீவிரமாக இருப்பின் இலை முழுக்க பரவியிருக்கும், இலைகள் பச்சையத்தை இழந்து உதிர்ந்து விழும், ஒளிச்சேர்க்கை குறைவதால் மகசூல் குறையும். பழங்கள் சொரசொரப்பாக இருப்பதால் குறைந்த விலையே கிடைக்கும்.

நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் பல உள்ளன (உதாரணம் - சூடோமோனாஸ்)

நூற்புழுக்கள்

Nematodes

Nematode life cycle

நூற்புழுக்கள் வேர்களைத் தாக்கி வேர்களில் முடிச்சுகளை ஏற்படுத்துகின்றன. வேரில் மட்டுமல்லாமல் வேரின் மையத் தண்டையும் பருக்கச் செய்து வேரை வளைவு சுளிவாக மாற்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வேர்கள் படிப்படியாக அழுகி இறுதியாக வாடல் நோய்க்குக் காரணமாகிறது.

உதாரணமாக வாழையில் நூற்புழுக்கள் வேரினைத் தாக்கி பின் படிப்படியாக நகர்ந்து கிழங்கையும் பாதிக்கிறது. இதனால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சிறிய காய்களை மட்டுமே தருகிறது. நூற்புழுக்கள் தாக்கிய இடத்தில் பூஞ்சைத் தாக்குதலும் சேர்ந்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்விதம் நூற்புழுத்தாக்குதல் மற்றும் பூஞ்சைத் தாக்குதல் இணையும்போது மரத்தின் கிழுங்குப் பகுதி முற்றிலும் அழுகி வேர் பலமற்று இருக்கும். இத்தகைய மரங்கள் காற்றடிக்கும்போது எளிதாக சாய்ந்து விடுகிறது.

எலுமிச்சை, கத்தரி, கொய்யா, தக்காளி, மஞ்சள், கேரட் போன்ற பயிர்களை நூற்புழுக்கள் தாக்குகின்றன.

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் செண்டு மல்லி (சாமந்தி)

துலுக்க சாமந்தி (செவ்வந்தி-Mary gold) செடிகளின் வேர்கள் நெமட்டோஸ் என்ற வேதிப்பொருளைச் சுரக்கிறது. இந்த நெமட்டோஸ் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் திறனுடையது. இந்தத் திரவம் சாமந்தி செடியின் ஒரு மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் பரவக்கூடியது, அதனால் பயிரின் அரை மீட்டர் சுற்றளவுக்கு உள்ளே ஒரு துலுக்க சாமந்திச் செடியை நடும் பொழுது நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.

வேம் (VAM) பூஞ்சணம் பயன்படுத்தும்போது, பயிர்களின் வேர்களில் வேம் நன்கு பரவிக்கொள்வதால் நூற்புழுக்களால் பயிரின் வேரைத் தாக்க முடியாது. வாழைக்கு நடுவே மஞ்சள் ஊடுபயிர் செய்யும்போது நூற்புழுத் தாக்குதல் இரண்டுக்கும் ஏற்படுவதில்லை.

நூற்புழுக்களின் முட்டைகள் ஒரு வருடத்திற்கு மண்ணில் இருக்கக் கூடியவை. எனவே நூற்புழுத் தாக்குதல் அதிகம் காணப்படும்போது கோடை உழவு செய்வது அவசியம் அல்லது அடியுரமாக வேப்பங்கொட்டைத் தூளைப் பயன்படுத்த வேண்டும்.

நன்மை செய்யும் நூற்புழுக்கள்

நன்மை செய்யக் கூடிய நூற்புழுக்களும் இருக்கின்றன. சாதாரணமாக காணப்படும் குப்பைமேனிச் செடியை பிடுங்கிப்பார்த்தால் அதன் வேர்களில் வேர்முடிச்சுகள் காணப்படும். இவை நூற்புழுவினால் ஏற்பட்ட வேர் முடிச்சாகும். இது நன்மை செய்யக்கூடிய வகையைச் சேர்ந்தது.

பயிர்களில் ஏற்படும் சத்து பற்றாக்குறை நோய்கள் (Dificiency symptom)

பயிர்கள் ஆரோக்கியமாக வளருவதற்கும் சரியான நேரத்தில் பூத்து மகசூலைத் தருவதற்கும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் மண்ணில் இருக்க வேண்டும். அந்த சத்துக்கள் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். இத்தகைய அத்தியாவசிய சத்துக்களை பேரூட்டம் என்றும் நுண் ஊட்டம் என்றும் பிரிக்கலாம்.

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் (NPK), கால்சியம் மற்றும் மெக்னீசியம் இவை ஐந்தும் பேரூட்டமாகும் (Macro nutrients)

போரான், துத்தநாகம், மேக்னீஸ், இரும்பு, தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவை நுண்ஊட்டங்கள் (Micro nutrients) ஆகும். நுண்ணூட்டங்களின் பங்களிப்பு ஒரு சதவீதம் மட்டுமே என்றாலும், பயிர்களின் வளர்ச்சி, பூக்கும் தன்மை, தண்ணீரை உள்ளிழுத்தல் போன்ற அத்தியாவசிய செயல்களுக்கு மிக முக்கியமாகும்.
பயிர்களில் நோய்க்கான அறிகுறிகளைக் கண்டால், அந்த நோய்க்குறிகள் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் கவனமாகப் பார்த்து கண்டறிய வேண்டும். அதற்கேற்ப பாதுகாப்பு முறைகளைத் தீர்மானிக்க வேண்டும்.

நோய்கள் பரவும் விதம்

தாவர நோய்கள் விதைகள், மண், காற்று, தண்ணீர் மற்றும் பூச்சிகள் மூலமாக பரவுகின்றன.

நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உப்புக்கரைசல் மூலம் விதை நேர்த்தி செய்வதினாலும் விதைகளின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த இயலும்.

ட்ரைகோடெர்மா விரிடி பூஞ்சையால் விதை நேர்த்தி செய்வதால் மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப் படுகிறது.

ஜீவாமிர்தத்தைத் தண்ணீருடன் கலந்து விடும்போது நீர் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படுகிறது, ஏனெனில் ஜீவாமிர்தத்தில் இருக்கும் எண்ணற்ற நன்மை செய்யும் நுண் உயிர்கள், நோய் உண்டாக்கும் நுண் உயிர்களுடன் போட்டியிட்டு அவற்றை அழிகிறது.

காற்று மூலம் பரவும் நோய்களைத் தடுக்க உயிர் வேலி அவசியம். உயிர் வேலிகள் மூலிகை மரங்களாகவோ, மற்ற எந்த வகையான மரங்களாகவோ இருக்கலாம். இயற்கை பூச்சி விரட்டிக்கு தேவையான மரங்களான வேம்பு, புங்கன், சீதா போன்ற மரங்களை வளர்ப்பது நல்லது.

பூச்சிகள் மூலமாக நோய் பரவுதல்

பூச்சிகள் பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துவதுடன், வைரஸ்கள் பரவுவதற்கு மிக முக்கியக் காரணமாகிறது.

சாறு உறிஞ்சும் பூச்சிகளே வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன. அசுவினி, வெள்ளை ஈக்கள், மாவுப்பூச்சி, இலைப்பேன், தத்துப்பூச்சி, செதில் பூச்சி போன்றவை மிக முக்கியமானவை.

நோயுற்ற தாவரத்தின் சாற்றை ஒரு பூச்சி குடிக்கும்போது பூச்சியின் உடலில் செல்லும் வைரஸ் எண்ணிக்கையில் பல மடங்கு பெருகுகிறது. பூச்சிகள் பறந்து பல இடங்களுக்கு செல்லும்போது, அவை எந்தெந்த செடியில் சாற்றை உறிஞ்சுமோ அந்தப் பயிரில் எல்லாம் வைரஸ் பரப்பப்படுகிறது.

உதாரணமாக நெல்லின் துங்குரோ வைரஸ் நோய் பச்சைத்தத்துப் பூச்சிகளால் பரவுகிறது. எனவே வைரஸ் நோய்கள் ஏற்படும்போது, அந்த வைரஸை பரப்பக்கூடிய பூச்சி எது என்பதைக் கண்டறிந்து, அந்தப் பூச்சியையும் கட்டுப்படுத்த வேண்டும்.

பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவை சாதகமான சூழ்நிலையில் மட்டும் அதிகமாகப் பரவும். சாதகமான சூழ்நிலை இல்லையென்றால் குறுகிய அளவில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

திரு. செல்வம் அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பூச்சிகளைப் பற்றிய அடிப்படையான புரிதலை நமக்கு உருவாக்கியுள்ளது, இதை அடிப்படையாகக் கொண்டு பூச்சிகளைத் தொடர்ந்து கவனித்து அடுத்த படிக்கு நாம் முன்னேறுவோம்.

தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம்

பூச்சிகள் பற்றி மேலும் தகவல்கள் அறிய:

திரு. நீ. செல்வம் (பூச்சியியல் நிபுணர்) - 94435 38356
திரு. ஹரிபுத்திரன் (வேளாண் அதிகாரி) - 90423 49709

திரு. நீ. செல்வம் அவர்கள் எழுதியுள்ள நூல்கள்:
1. விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி
2. Friends of Cotton farmers by Dr.D.Praveen, N.Selvam, V.Veeraiya

பூச்சிகளைப் பற்றிய மற்ற நூல்கள்:
வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு -
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்