பெண்களிடம் எப்போதும் 'இது என்னுடையது' என்று பற்றிக் கொள்ளும் தன்மை (possessiveness) இயற்கையாகவே அமைந்துள்ளது. அதனால்தான் ஒரு பெண்ணால் தன் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க முடிகிறது. ஆனால் இந்தத் தன்மையைத் தாண்டி ஒரு பெண், துறவியாக மாறுவதென்பது உண்மையில் உன்னதமானது. அப்படிப்பட்ட பெண்களுக்காக, இந்தப் பெண்கள் தினக் கட்டுரை சமர்ப்பணம்...

ராஜி குமாரசாமி:

துறவற பாதையை தேர்ந்தெடுத்த என் அத்தனை தோழிகளுக்கும் "பெண்கள் தின" வாழ்த்துக்கள் :) மிகச் சில பெண்களே தேர்ந்தெடுக்கும் இந்த பாதையை துணிந்து தேர்ந்தெடுத்து, அன்போடும் வலிமையோடும் பயணிக்கும் பொக்கிஷங்கள் நீங்கள்.

துறவு: பரிபூரண அன்பு, பரிபூரண கருணை, பரிபூரண வலிமை, பரிபூரண விடுதலை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உண்மை துறவை நான் மிக அருகில் இருந்து கண்டிருக்கிறேன். பெண் துறவிகள் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அன்னை தெரசாவும், கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளும் தான். மறுக்க, மறக்க முடியாத சேவையை ஆற்றின, ஆற்றும் ஒரு குழுமம் அது. நாம் ஒவ்வொருவரும் யாரவது ஒரு கன்னியாஸ்திரியின் கருணை மற்றும் வழிகாட்டுதலை கடந்தே வந்திருப்போம்.

பூ பூக்கும் ஓசையை மட்டும் அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றையும் நேசிக்கும் பெண்ணே துறவு கொள்ள முடியும்.

நம் கலாச்சாரத்தில் இருக்கும் புத்த, ஜைன மற்றும் இந்து பெண் துறவிகள், மறைந்து வாழும் பிறவிகள். இருந்தும் இல்லாமல் இருப்பவர்கள். இந்த மண்ணில் எங்களுக்கு (பெண்கள்) துறவு என்பது ஒரு சலுகையாகவும், அச்சத்தோடும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை யாரும் கொடுக்காமல் துணிந்து தாமாகவே எடுத்து கொண்ட பெண்கள் சிலர் இருக்கிறாகள்.

ஆனால் என் சக பெண்களுக்கும் இந்த பாதை அமையட்டும் என்று ராஜபாட்டை போட்டுக் கொடுத்தவர் கௌதம சித்தார்த்தர் மற்றும் வெகு காலம் கழித்து வந்த விவேகானந்தர். சத்குருவை பற்றி சொல்ல எனக்கு மன வலிமையோ, ஞானமோ இல்லை.

என் மிக நெருங்கிய தோழிகள் சிலர் துறவு பூண்டிருக்கிறார்கள். சுப மங்களா என்கிற, என்னோடு படித்த கன்னட பெண், பேரழகி. தன்னையே சுற்றி வந்த காதலனிடம், "என் அழகு தானே தேவை, அது நாளையே அழிந்துவிடும், அப்போதும் நான் வேண்டுமாயின், உன்னிடம் வருகிறேன்," என்றாள். அவனுக்கோ, அருகில் இருந்து கவனித்த எனக்கோ ஒன்றும் புரியவில்லை. சில நாட்களுக்குள் அவள் உடம்பெல்லாம் ஒருவித ஒவ்வாமை வந்து, தோல் கருத்து வேறு ஒரு பெண்ணாய் காட்சி அளித்தாள்.

அவன் வரவே இல்லை... அவள் வெளி-அழகற்றவள் ஆகிவிட்டாள் என்பதால் மட்டும் அல்ல, தான் விரும்பிய ஒன்று தனக்கானது மட்டும் அல்ல என்கிற தெளிவும் அவனுக்கு வந்ததால். எல்லாவற்றையும் நேசித்த, எல்லோரும் நேசித்த ஒரு பெண் அவள். புனிதவதி என்கிற காரைக்கால் அம்மை ஏன் பேயுருவம் கொண்டாள் என்று அப்போது விளங்கிற்று. சுப மங்களா படித்த பின்பு, ராமகிருஷ்ண மடத்தில் துறவி ஆனாள்.

மின்சார கனவு திரைப்பட விமர்சனம் ஆனந்த விகடனில் படிக்க நேர்ந்த பொழுது, நான் அதே கல்லூரியில் தான் இருந்தேன். "பூ பூக்கும் ஓசையை நேசிக்கும் ஒரு பெண் எப்படி கன்னியாஸ்திரி ஆக விரும்புவாள்," என்று ஒரு கேள்வி அதில் இருந்தது. மனதினுள் சிரித்துக் கொண்டேன், பூ பூக்கும் ஓசையை மட்டும் அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றையும் நேசிக்கும் பெண்ணே துறவு கொள்ள முடியும்.

மனித காதலில், இல்லறத்தில் இருக்கும் பெண்கள் நாங்கள், எல்லோரும் எங்களுக்கு வேண்டும் என்று இறுக்கி கொள்பவர்கள், பெண் துறவிகள் எல்லோருக்கும் நான் இருக்கிறேன் என்று இறுக்கி கொள்பவர்கள். என் ஈஷா குடும்பத்தின் பெண் துறவிகளை பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும், அறிவும் இல்லை... :), விட்டு விடுகிறேன், வணங்குகிறேன்.

 

akka mahadevi, women, ascetic, shiva, devotee

 

இந்த படம் அக்கா மஹாதேவியின் படம். சிவனின் தீவிர பக்தை. சிவனா உனக்கு இந்த ஆடைகளை கொடுத்தான், நான் கொடுத்தது தானே என்று சொன்ன குறுநில மன்னனான தன் கணவனின் மற்றும் அவையினர் முன் அத்தனை ஆடைகளையும் அவிழ்த்து, அரண்மனையை விட்டு வெளியேறிய பெண்.

பின் அவள் உடைகளை உடுத்தவே இல்லை! அவளின் நிர்வாணம் காமத்தையோ, அச்சத்தையோ தரவில்லை... மாறாக அவள் அத்தனை ஆண்களாலும் அக்கா என்று அழைக்கப்பட்டாள். அதே காலத்தில் ஐரோப்பாவில் இது நடந்திருந்தால், அவள் சூனியக்காரி (விட்ச்) என்று அழைக்கப்பட்டு எரி கம்பத்தில் கொல்லப்பட்டிருப்பாள்.

புரிதல் இருக்கிறது இந்த மண்ணில், நமக்கு நம்பிக்கையும் தான்!