சத்குரு சொல்லும் குட்டிக் கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானதாகவும், நம்மை சிந்திக்க வைப்பதாகவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இங்கே இரண்டு குட்டிக் கதைகள் படித்து மகிழுங்கள்...

சத்குரு:

பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு!

ஒரு பெண் தனக்கு வரன் தேடுவதற்காக திருமணத் தரகர் ஒருவரிடம் சென்றார். திருமணத் தகவல் மையத்திற்குள் நுழைந்து மேசையில் தரகருக்கு எதிரில் அமர்ந்தார். தரகர், ‘உங்களுக்கு எப்படிப்பட்ட வரன் வேண்டும்?’ என்று கேட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்தப் பெண், “வெளிப்படையானவராக, தெளிவானவராக, எது தேவையோ அதை மட்டும் பேசக் கூடியவராக இருக்க வேண்டும். தேவை இருக்கும்போது மட்டுமே பேச வேண்டும், தேவை இல்லாதபோது பேசக் கூடாது. நான் தனியாக வெளியே செல்ல விரும்பினால், மறுப்பேதும் கூறாமல் விட்டுவிட வேண்டும். அவர் எனக்குத் தேவைப்படும் நேரமெல்லாம் என்னருகில் இருக்க வேண்டும். எனக்குத் தேவைப்படாத போது அவர் இருக்கக் கூடாது,” இப்படி ஒரு பெரிய பட்டியல் போட்டுக்கொண்டே போனார்.

அந்தத் தரகர் அவர் சொன்ன எல்லாவற்றையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு, பின் அவரிடம் “நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், நீங்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி வைத்துகொண்டால் போதும் என்று நினைக்கிறேன்” என்றார்.

யார் முட்டாள்?

யார் முட்டாள்?, Yar muttal

ஒரு பல்கலைக்கழகத்தில், தலைமை ஆசிரியரின் அறைக்குள் கூடைப்பந்து பயிற்சியாளர் வேகமாக நுழைந்தார்.

"எனக்கு உடனடியா சம்பள உயர்வு வேணும்"

"உனக்கு எதற்கு சம்பள உயர்வு, நீ பந்தை தரையில் தட்டுறத தவிர வேறென்ன செய்ற? ஏற்கெனவே, இங்கிலீஷ் துறையைவிட உனக்கு 10 மடங்கு சம்பளம், மூங்கில் மரம் மாதிரி உசரமா இருக்குற யார் வேணாலும் கூடைப்பந்து விளையாடலாம். நீ பந்து விளையாடறதுக்கு உனக்கெதுக்குப்பா சம்பள உயர்வு?"

"கொஞ்சம் இருங்க, நான் எதுக்குன்னு காட்டுறேன்" என்றவர் வெளியே சென்று, கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த பையன்களில் ஒருவனை அழைத்து, "என் ஆபீசுக்குப் போய் நான் அங்க இருக்குறேனா இல்லையான்னு பார்த்துட்டு வாப்பா!" என்றார். அந்தப் பையன், ஓடிச் சென்று 10 நிமிடங்கள் கழித்து மூச்சிரைக்க திரும்பி வந்தான்...

"இல்லை சார், நீங்கள் அங்கே இல்லை"

"சரி, நீ போ!"

கூடைப்பந்து ஆசிரியர், தலைமை ஆசிரியரைப் பார்த்து... "பாத்தீங்களா, நான் எந்த மாதிரியான முட்டாள்களோட வேலை செய்றேன்னு, இதுக்காகத்தான் சம்பள உயர்வு கேட்டேன்!" என்றார்.

அதற்கு தலைமை ஆசிரியர், "ஓ, உன் கஷ்டம் எனக்குப் புரியுது. இதுவே நானா இருந்தா, அவனை மாதிரி ஓடி உன் அறைக்கு போய் பார்க்காம, ஃபோன் பண்ணியிருப்பேன்" என்றார்.