கொல்லைப்புற இரகசியம் - பகுதி 32

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வார்கள்! சில ‘ஹேர் ஸ்டைல்’ விரும்பிகளுக்கு அவர்களின் தலைமுடியே பிரதானமாக பார்க்கப்படுகிறது. “அட தலைமுடியில என்னப்பா இருக்குது? தலைக்கு உள்ள எதாவது இருக்குதாங்குறதுதான் முக்கியம்” என்று உமையாள் பாட்டி அடிக்கடி என்னை பகடி செய்வார். நான் சில நாட்களாக வேலை விஷயமாக வெளியூர்களுக்கு பயணம் செய்ததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் எனது தலையில் பொடுகு தொல்லை அதிகரித்தது. இதன் காரணமாக தலைமுடி உதிர்வதை கவனிக்க முடிந்தது.

பொடுதலை இலை மற்றும் காய்களின் சாறெடுத்து, அதனுடன் மிளகு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் வைத்து சாறை சுண்டவிட வேண்டும். பின்னர் எஞ்சியிருக்கும் எண்ணெயையை தலையில் தேய்த்து தலைமூழ்கி வந்தால், பொடுகு தொல்லை தீரும்.

வீடு திரும்பியதும் பாட்டியை முதல்வேலையாக சந்தித்து ஆலோசனை பெற நினைத்தேன்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தான் வளர்த்த காளையை யாரும் பிடிக்கமுடியாததால் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு பரிசைப் பார்த்துப் பார்த்து, பாட்டி புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்த வேளையில் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தேன்.

“என்ன பாட்டி... உங்க காளை ஜெயிச்சிருச்சு போல?!” நானும் பாட்டியின் சந்தோஷத்தில் உந்தப்பட்டவனாய், பரிசாக வழங்கப்பட்டிருந்த செல்ஃபோனை வாங்கிப் பார்த்தேன்.

“ஏம் பாட்டி காளைக்கு எதுக்கு செல்ஃபோன்?”

“காளைக்கு இல்லப்பா காளைய வளத்த இந்த சேலைக்கு...!” என்று பாட்டி கவி நடையில் விடைதந்தார்.

அந்த கொண்டாட்ட சூழலை அனுபவித்த பிறகு, மெதுவாக என்னுடைய கேச பிரச்சனை குறித்து பாட்டியிடம் தெரிவித்தேன். உடனே, பாட்டி தனக்கு பரிசாக வழங்கப்பட்ட அந்த செல்ஃபோனை எடுத்து கூகுலுக்குள் சென்றாள்.

என்னிடம் அந்த ஸ்கீரனைக் காட்டி இதைப் படித்துக்கொண்டிரு, நான் வருகிறேன் என்று சொல்லி வீட்டின் உட்கூடத்திற்கு சென்றாள்.

பொடுதலை எனும் செடியின் மருத்துவ பயன்கள் குறித்து அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உள்ளே சென்ற பாட்டி பிரத்யேகமாக தயாரித்து வைத்திருந்த ஒரு எண்ணெயை வழங்கி, தலையில் தேய்த்துக்கொள்ளும்படி கூறினார்.

பொடுதலை இலை மற்றும் காய்களின் சாறெடுத்து, அதனுடன் மிளகு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் வைத்து சாறை சுண்டவிட வேண்டும். பின்னர் எஞ்சியிருக்கும் எண்ணெயையை தலையில் தேய்த்து தலைமூழ்கி வந்தால், பொடுகு தொல்லை தீரும். இந்த எண்ணெயைத்தான் பாட்டி எனக்கு தந்திருக்கிறார்.

என் தலைமுடி பிரச்சனைக்கு இப்படியொரு அற்புத தீர்வை கொடுத்த உமையாள் பாட்டிக்கு மகிழ்ச்சிபொங்க நன்றி கூறினேன்.

“என்னப்பா... முகத்துல சந்தோஷம் 1000 வாட்ஸ் அளவுக்கு இருக்கு? முடி உதிர்றது அவ்வளவு பெரிய பிரச்சனையா உனக்கு?”

“பின்ன... நாங்கள்ளாம் கவரிமான் பரம்பரை இல்லையா பாட்டி?! ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர் துறப்போம்ல?!” நான் வேடிக்கையாகச் சொல்லியதைக் கேட்டதும், பாட்டி என் தலைமுடியை பிடித்து கையை காட்டினார். அவர் கைகளில் சிலமுடிகள் வந்திருந்தன.

“பாட்டி இந்த டயலாக்கெல்லாம் ஒரு பேச்சுக்கு சொல்றதுதான் அதுக்காக உண்மையிலேயே உயிர் துறக்க சொல்லுவீங்க போல?!” என்று சொல்லி பாட்டியிடம் நான் சரண்டர் ஆனேன்.

பொடுதலை குறித்த பிற மருத்துவ பயன்கள் குறித்தும் பாட்டியின் வார்த்தைகளில் கேட்டு தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்த, பாட்டியிடம் கேட்டேன்! பாட்டி பொடுதலை பற்றி பேசத்துவங்கினாள்.

“பொடுதலை இலைய வதக்கி நீர் சேத்து கொதிக்க வைக்கணும். அந்த நீரை இறுத்து குடிச்சு வந்தா (30மிலி) வாதம் சம்பந்தமான நோய்கள் தீரும். இலைய வதக்கி, வறுத்தெடுத்த ஓமத்துடன் சேத்து அரைச்சு, அதுகூட நீர் விட்டு கொதிக்க வச்சு வடிகட்டி எடுத்துக்கணும். அந்த நீர 30மிலி அளவுக்கு கொடுத்தா குழந்தைகளுக்கு உண்டாகும் பேதி குணமாகும்.

இலையோடு சீரகம் சேத்து அரைச்சு சுண்டைக்காய் அளவு பெண்கள் எடுத்து வந்தா வெள்ளைப்படுதல் குணமாகும்.

இந்த இலைய துவையல் செஞ்சும் சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டு வந்தா உள்மூலம் குணமாகும். அப்புறம்... இலைய அரைச்சு அக்கிப்புண், நெறிகட்டி, வீக்கங்கள்ல பூசி வந்தா நல்ல குணம் உண்டாகும். கட்டி, கொப்புளம் இருந்தா இலைய அரைச்சு பத்து போட்டோம்னா பழுத்து உடையும்!”

பாட்டி பொடுதலையின் மருத்துவ பயன்களை சொல்லும் நேரத்தில் என்னுடைய தலையில் தேய்க்கப்பட்டிருந்த எண்ணெய் நன்கு ஊறியிருந்தது. நான் தலைமூழ்கி வர வீட்டிற்கு கிளம்பினேன்.

கடைசியாக ஒரு சந்தேகம் மீதமிருந்தது...

“தலையில இருக்குற பொடுக நீக்குறதுனால்தான் இத பொடுதலை’னு சொல்றாங்களா பாட்டி?” என் சந்தேகத்தை கேட்டேன்.

“பரவாயில்லயே சரியா சொல்லிட்டயே! நீ உன் தலைமுடிய பத்திமட்டும் கவல படாம, தலைக்கு உள்ள இருக்குறதையும் வளர்ச்சி அடைய செய்யணும். அதுக்கு நீ ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிய தொடர்ந்து செய்!”

பாட்டியின் அறிவுரையை ஏற்று வீட்டிற்கு வந்து குளித்ததும் பயிற்சியை துவங்கினேன்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்