‘உலகில் இத்தனை பேர் துயரத்தில் இருக்க, நான் மட்டும் எப்படி சந்தோஷத்தில் இருக்கமுடியும்?’ இந்த எண்ணம் பலரின் மனதை உறுத்துவது அவர்களின் மனிதாபிமானத்தை குறிக்கிறது! ஆனாலும், இது துன்பத்தில் இருப்பவருக்கு எந்தவிதத்தில் உதவிடக்கூடும்? அடுத்தவருக்கு உதவ நினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது என்ன? சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: ‘முதலாளித்துவம்’ நிறைந்த நமது சமூகத்தில், இலாப நோக்குடன் தான் செயல்பட வேண்டியிருக்கிறது. கடையில் பொருள்களைக் குறைந்த விலையில் வாங்கினால், என் சுயநலத்திற்காக, மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவதாக எண்ணுகிறேன். இதுபோன்ற சமூகங்கள்தான் ஏதோ ஒரு வகையில் உலகில் வன்முறையைத் தூண்டுகின்றன என்று எண்ணுகிறேன். இப்படி நினைக்கும்போது, என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எனவே நான் என்னைப் பற்றி மட்டும் நினைக்கவும் உலகில் உள்ள மற்ற துயரங்களைப் புறக்கணிக்கவும் என்ன செய்வது?

சத்குரு:

ஒரு மனிதன், மனிதனாக ‘ஆக’ வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு பிறக்கும்போதே ஒருவர் மனிதராகப் பிறப்பதில்லை. மெதுமெதுவாக பண்பட்டு, அவர் மனிதனாக ‘ஆகிறார்’. மனித கருவில் இருந்து பிறப்பதால் மட்டும் நீங்கள் மனிதராவதில்லை. ‘மனிதன்’ என்பது மிக சிக்கலான ஆனால் அழகான ஒன்று. அதை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. உங்கள் தாய் உங்களை அற்புதமான மனிதனாக பெற்றெடுப்பதில்லை. வெறும் ஒரு மூலப்பொருளாகத்தான் பெற்றெடுக்கிறாள். நீங்கள் எவ்வளவு அற்புதமான மனிதராக மாறுகிறீர்கள் என்பது, இந்த உயிரை நீங்கள் எப்படி நடத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. ஆக, அடுத்தவரின் துயரத்தை உணர ஆரம்பித்து இருக்கிறீர்கள். இது நல்லது தான். ‘மனிதனாகும்’ பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

பாதி உலகம் இன்று துயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வைத்துக் கொள்வது என்ன, அதுதான் உண்மையான நிலை. இப்போது நீங்களும் சந்தோஷமாக இல்லை என்றால், நீங்கள் இருக்கும் பிரச்சினையை அதிகரிக்கிறீர்களா, குறைக்கிறீர்களா?

பாதி உலகம் இன்று துயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வைத்துக் கொள்வது என்ன, அதுதான் உண்மையான நிலை. இப்போது நீங்களும் சந்தோஷமாக இல்லை என்றால், நீங்கள் இருக்கும் பிரச்சினையை அதிகரிக்கிறீர்களா, குறைக்கிறீர்களா? மற்றவர்கள் ஒரு காரணத்திற்காக துயரத்தில் இருந்தால், நீங்கள் வேறொரு காரணத்திற்காக துயரத்தில் இருக்கிறீர்கள். இது இருக்கும் பிரச்சினைக்கான தீர்வல்ல. நீங்கள் பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறீர்கள். நீங்கள் ஆனந்தமாய் இருந்து, அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்தவராய் இருந்தால்தானே, அடுத்தவருக்கும் அதை அமைத்துக் கொடுக்க முடியும்? உங்களுக்கே ‘சந்தோஷம் என்றால் என்ன’ என்று தெரியாவிட்டால், அதை அடுத்தவருக்கு எப்படி வழங்குவீர்கள்? உங்களை சுற்றி இருக்கும் உயிர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால், முதலில் உங்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவேண்டும். உங்கள் உயிர், உங்கள் வாழ்க்கையை உங்களால் சரியாக பார்த்துக் கொள்ளமுடியவில்லை என்றால், அடுத்தவரை நீங்கள் எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள்? உங்களை மிகச் சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிந்திருந்தால், அடுத்தவரை எப்படி நன்றாக வாழவைக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லையெனில், உங்கள் நல்ல எண்ணங்களைக் கொண்டு, பிறருக்கு இன்னும் பாதிப்பை தான் உண்டு செய்வீர்கள். கெட்ட எண்ணத்தை விட நல்ல எண்ணங்கள் தான் இவ்வுலகிற்கு பெருமளவில் தீங்கு இழைத்திருக்கின்றன.

உலகில் வாழும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்றால், இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும், இவற்றில் எது சிறந்தது: அவர்களையும் உங்களாகவே நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொள்வதா? அவர்களை ‘மற்றவர்’களாக எண்ணி விட்டுவிடுவதா? உங்கள் மீது நீங்கள் எப்படி அக்கறை கொள்கிறீர்களோ, அதேவிதமாக எல்லோர் மீதும் அக்கறை கொள்வது தானே சிறந்தது? அப்படியென்றால் இந்த உயிரை (உங்களை) முதலில் சரிசெய்து கொள்ளாமல், அந்த உயிரை (மற்றவரை) நீங்கள் சரி செய்யச்சென்றால், அது உங்களுக்கு புத்தி சொல்லும், ‘முதலில் உன்னை நீ சரியாக வைத்துக்கொள். நீ இப்படி இருந்து கொண்டு, எனக்கு என்ன முட்டாள்தனத்தை செய்ய நினைக்கிறாய்’ என்று.

எங்கு எதை செய்ய நினைத்தாலும், உடலளவிலும், மனதளவிலும் எந்த நிலையில் இருக்க நீங்கள் விரும்புவீர்கள்? ஆப்பிரிக்க நாட்டின் ஸியரா லியோன் பகுதியில் நாம் சில சமூகநல செயல்கள் செய்து வருகிறோம். உங்களை அவ்விடத்தில் விட்டு, இரண்டு ஆண்டுகள் நேரமும் கொடுத்து, அங்கிருக்கும் நிலையை சரி செய்யுங்கள் என்று சொன்னால், அங்கிருக்கும் பிரச்சினைகளில் நீங்கள் தொலைந்தே போவீர்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்கென்றே, நான்கு ஐந்து வருடங்கள் பயிற்சி மேற்கொண்டு, தங்களை தயார் செய்து கொண்டவர்களை அங்கே சமூகப் பணியில் ஈடுபட அனுப்பியிருக்கிறோம். அங்கு சென்ற மூன்றே மாதங்களில், அவர்கள் அங்கு பெருமளவில் மாற்றம் ஏற்படுத்தினர். ஏனெனில் அவர்களுக்கு தங்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரியும், அங்கிருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியும். இந்த அளவிற்கு உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இப்படி இல்லாமல், அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, இருக்கும் சூழ்நிலையை சரிசெய்யப் பார்த்தால், அந்தப் பிரச்சினையில் நீங்கள் தொலைந்து போவீர்கள்.

ஒரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால், நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை நிகழ்த்துவதற்குத் தேவையான திறனும் வேண்டும். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

ஒரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால், நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை நிகழ்த்துவதற்குத் தேவையான திறனும் வேண்டும். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டியது தான். உண்மையிலேயே ஏதோ ஒன்று செய்ய நினைத்தால், முதலில் உங்கள் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது எனப் பார்த்து, உங்கள் வாழ்வை நல்ல நிலையில் நீங்கள் நடத்திக் கொள்ளவேண்டும். உங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கு நீங்கள் என்ன நல்லது செய்துவிட முடியும்? ஒவ்வொரு டீக்கடையிலும் அமர்ந்துகொண்டு, இந்நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று பேசுகிறவர்கள் ஏராளம். அவர்கள் பிரதமருக்கு ஆலோசனை சொல்கிறார்கள், டென்டுல்கர் எப்படி மட்டை பிடித்து ஆட வேண்டும் என்று அவருக்கு பயிற்சியாளராகவும் ஆகிவிடுகிறார்கள். அங்கேயே, அந்த டீக்கடையிலேயே, புரட்சிகள் பல செய்து உலகத்தை மாற்றுகிறார்கள்... என்ன, டீ முடிந்தவுடன், புரட்சிகளும் அங்கேயே, அக்கணமே முடிந்து போகிறது. வெறும் அக்கறையும், உணர்ச்சிவசப் படுவதும் மட்டும் போதாது. நம் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் நேரம் ஒதுக்காவிட்டால், இவ்வுலகின் நிலை மேன்மேலும் மோசமாகிக் கொண்டே தான் இருக்கும்.

மனித இனத்தின் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால், முதலில் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களை எந்த மாதிரியான கடினமான சூழ்நிலையில் வைத்தாலும், நீங்கள் உடைந்து போக மாட்டீர்கள், தூள் தூளாக நொறுங்கிப் போக மாட்டீர்கள் என்ற அளவிற்கு உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முழுத் திறனிற்கு நீங்கள் செயல்படுவீர்கள். அதனால், முதலில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தான் யோகா - உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வதற்கான தொழில்நுட்பம்.