அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் ஜே.கே. என்கிற ஜே.கிருஷ்ணமூர்த்தி தனது உணவு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்...

திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி

தயாரிப்பாளர், அபிநயா கிரியேஷன்ஸ்

சீரியல் தயாரிப்பாளர் என்பதால் அதிக வேலை, டென்ஷன். ஒருநாள் கொஞ்சம் அசந்தாலும் சீரியல் பாதிக்கப்படும். தினம் தினம் சீரியல்களைச் சுவை குன்றாமல், டி.ஆர்.பி. ரேட்டிங் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்கிற பதற்றம், மன அழுத்தம். விளைவு, சுகர் ஏறி ஃபாஸ்டிங்கில் 400 என்கிற அளவுக்குப் போய்விட்டது.
எத்தனை மருந்து சாப்பிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்துவது ஒன்றே உடல்நிலையைச் சரிசெய்யும் என்ற விஷயம் புரிந்தது. விரதத்துக்கு நோ. விருந்துக்கும் நோ. அழகு எத்தனை ஆபத்தோ, அதேபோல் நாக்கின் ருசியும் ஆபத்தானது!

அதனால், கட்டுப்பாடான உணவுக்கு மாறினேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  • காலையில் இரண்டு இட்லி, வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகள்- ஒரு கப்.
  • மதியம் கம்மியான சாதம், 400 கிராம் காய்கறிகள்.
  • மாலை - வேகவைத்த பயறு, சுண்டல்.
  • இரவு - எளிமையான மோர் சாதம்.

காய்கறி சாப்பிட்டதில் சுகர் 400-ல் இருந்து 80-க்கு வந்தது.

வீட்டில் எண்ணெய், நெய்க்குத் தடா. சிற்றுண்டிகள் அனைத்தும் வேகவைத்ததே! மிளகு, காய்கறி, சாலட், சுண்டல் என அனைத்திலும் உப்பு, மிளகுப் பொடி லேசாகத் தூவி சாப்பிட்டதில், ரத்த ஓட்டம் சீராகி, பி.பி குறைந்தது. காய்கறி சாப்பிட்டதில் சுகர் 400-ல் இருந்து 80-க்கு வந்தது.

வீட்டில் புதுமை போய் பழைமை புகுந்தால் - சாதம் வெங்கலப் பானையில் வடித்து, சிப்பைத் தட்டில் வடித்து சாப்பிடுகிறோம். கஞ்சியில் மோர் சேர்த்து, சாத்தேர்த்தம் என அருந்துகிறேன். உடம்புக்குள் சக்தி எங்கிருந்து வந்தது எனப் புரியவில்லை.

அந்நாளில் கும்பகோணத்தில் நாங்கள் விரும்பிச் சாப்பிட்ட கேழ்வரகுக் கஞ்சியும், வேகவைத்த பிடிகொழுக்கட்டை, இட்லி இவைதான் என் இப்போதைய சாய்ஸ். இப்படிச் சாப்பிட்டதினால்தானோ என்னவோ, அந்தக் காலத்தில் கும்பகோணம் முழுவதும் இரண்டே மெடிக்கல் ஷாப். நான்கே டாக்டர்கள்!

பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி: 200 கிராம்
கடலைப் பருப்பு: 1 ஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு: 1 ஸ்பூன்
வர மிளகாய்: 2
தேங்காய் துருவல்: 1 மேஜைக்கரண்டி
இஞ்சி: 1 துண்டு
கறிவேப்பிலை: 1 கொத்து
எண்ணெய்: 1 ஸ்பூன்
உப்பு: தேவைக்கேற்ப

செய்முறை:

  • புழுங்கலரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, ரவையாக அரைத்துக்கொள்ளவும்.
  • மிளகாய், இஞ்சியைப் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறவும்.
  • தண்ணீர் கொதி வந்ததும், ரவையைத் தூவிக் கிளறி இறக்கவும்.
  • கிளறிய மாவை சற்றே பெரிய உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
  • தக்காளிச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்!

சாத்தேர்த்தம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி: ½ கப்
உப்பு: தேவையான அளவு
கடைந்தெடுத்த மோர்: 2 கப்

தாளிக்க
கடுகு: ½ ஸ்பூன்
வரமிளகாய்: 1
கறிவேப்பிலை: 1 கொத்து
எண்ணெய்: 1 ஸ்பூன்

செய்முறை:

  • அரிசியைக் களைந்து, (குக்கரில் வைக்காமல்) வெங்கலப் பானை அல்லது அடி கனமான பாத்திரத்தில் நான்கு பங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றவும்.
  • அரிசி, சாதமாக நன்கு வேகும் வரை கிளறவும்.
  • வெந்ததும், கஞ்சியை வடித்தெடுக்கவும். சாதத்தைத் தனியே வைக்கவும்.
  • கஞ்சியை ஆற வைத்து, உப்பு, மோர் சேர்த்துக் கலக்கவும்.
  • தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணெயில் தாளித்துச் சேர்த்துப் பருகவும்.

சாதத்தில் தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், அடுத்த நாள் காலையில் சாதத்தைப் பிழிந்தெடுத்துவிட்டு, தண்ணீரில் உப்பு, மோர், சேர்த்துச் சாப்பிட்டால் வெயிலுக்கு மிகவும் இதமாக இருக்கும். விஞ்ஞானத்தின்படி, ஈஸ்ட் என்னும் பொருள் உருவாகிவிடுவதால் இதில் சத்து பல மடங்காகிவிடும்!