பெற்றோருடன் ஒத்திசைவில் இருக்க முடியாத இளையதலைமுறை… என்ன காரணம்?

பெற்றோருடன் ஒத்திசைவில் இருக்க முடியாத இளையதலைமுறை... என்ன காரணம்?, Petrorudan othisaivil irukka mudiyatha ilaiya thalaimurai

சத்குரு:

வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளி அதிகரித்திருக்கிறதே என்று ஒருவர் என்னைக் கேட்டார். இப்போது என்றில்லை, எப்போதுமே அந்த இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், வயதானவர்கள் தங்களுக்கு இன்னும் அவ்வளவாக வயதாகவில்லை என்று கருதுகிறார்கள். இளைஞர்களோ தங்களுக்கு போதிய வயதாகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அடிப்படையில் பார்த்தால், நீங்கள் கைப்பற்ற விரும்பும் இடத்தை இன்னொருவர் கைப்பற்றி வைத்திருக்கிறார். எனவே, இந்தப் போராட்டம்.

உங்களைப் பிரிந்து தூரத்தில் வாழ்கிற உங்கள் குழந்தைகள் உங்களை மிகவும் நேசிப்பார்கள். உங்களுடனேயே இருக்கும் குழந்தைகளுக்கு உங்களுடன் ஏதேனும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருக்கும்.
நீங்கள் ஆழமாகப் பார்த்தால், இந்தப் போராட்டம் மனிதர்கள் மத்தியில் மட்டுமில்லை, வனவிலங்குகள் மத்தியிலும் உண்டு. குறிப்பாக, காட்டு யானைகளிடம் நீங்கள் இதைக் காணலாம். ஒரு யானை கோபத்துடன் எல்லாவற்றையும் துவம்சம் செய்து கொண்டிருந்தால், தன் குழுவில் உள்ள மூத்த ஆண் யானையுடன் ஏதோ சண்டை போட்டு வந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அந்த யானை தன் இடத்தை விட்டுத்தர விரும்பாததால் இந்த மோதல் ஏற்பட்டிருக்கும். போதிய வலிமையும் இல்லாததால் பதின் வயதுக்காரர்கள்போல் இந்த யானை ரகளையில் ஈடுபடுகிறது.

அதனால்தான், பாரதக் கலாச்சாரத்தில் வர்ணாசிரம தர்மம் என்ற ஒன்றை ஏற்படுத்தினார்கள். முதல் பன்னிரண்டு வருடங்கள் பாலபருவம். உடலும் மூளையும் நன்கு வளரும் விதமாக விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். 12 முதல் 24 வரை பிரம்மச்சர்யம். உடல் மனம் ஆகியவற்றில் ஒழுக்கங்களைக் கொண்டு வந்து சக்திநிலைகளை மேம்படுத்தி, அதன்மூலம் சக்திமிக்க மனிதராகத் திகழ இந்தப் பருவம் துணை செய்கிறது.

24 வயதில் ஒருவர் தன் தன்மைகளை நன்கு அவதானித்து திருமண வாழ்வையோ சந்நியாசத்தையோ தேர்ந்தெடுக்கிறார். 24 வயதில் ஒருவர் திருமண வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் இரண்டு சூரிய சுழற்சிகளுக்குப் பிறகு 48-வது வயதில் உங்கள் குழந்தைகள் இளம் காளைகளாக வளர்ந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு இடம் தேவைப்படுகிறது. ஆனால், உங்களிடம் சொல்வதில்லை.

இந்த நிலையில்தான் கணவனும் மனைவியும் இருவேறு வழிகளில் செல்கிறார்கள். ஆளுக்கோர் ஆன்மீக மையத்தைத் தேர்ந்தெடுத்து 12 ஆண்டுகள் ஆன்மீக சாதனையில் ஈடுபடுகிறார்கள். பின்னர் 60-வது வயதில் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

முதல்முறை திருமணம் செய்தபோது உடல் சார்ந்த நிர்ப்பந்தங்களோ மனம் சார்ந்த நிர்ப்பந்தங்களோ ஆளுமை செய்திருக்கும். இப்போது, 12 ஆண்டுகால ஆன்மீக சாதனைக்குப் பின் முற்றிலும் வேறு தன்மையில் இருவரும் வனப்பிரஸ்தம் எனும் வாழ்வை வாழ வனங்களுக்கு செல்கிறார்கள்.

இன்று பெற்றோர் போவதில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகள் போக வேண்டுமென்று விரும்புகிறார்கள். தங்களுக்கென்று ஒரு வாழ்வைத் தேடிக்கொண்ட குழந்தைகள், போகவும் செய்கிறார்கள். அப்படித் தேடிக்கொள்ளாத சூழலில் மோதல்கள் உருவாகின்றன.

வயதானவர்கள் தங்களுக்கு இன்னும் அவ்வளவாக வயதாகவில்லை என்று கருதுகிறார்கள். இளைஞர்களோ தங்களுக்கு போதிய வயதாகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அடிப்படையில் பார்த்தால், நீங்கள் கைப்பற்ற விரும்பும் இடத்தை இன்னொருவர் கைப்பற்றி வைத்திருக்கிறார். எனவே, இந்தப் போராட்டம்.
மனிதர்கள் தங்களை பெற்றோர் என்றும் பிள்ளைகள் என்றும் உணர்வதற்கு உணர்ச்சிகளே காரணம். ஆனால், இடத்தை ஆக்கிரமிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் இரண்டு விலங்குகள் நடுவே நிகழும் போராட்டமே மனிதர்களுக்கு நடுவிலும் நிகழ்கிறது. ஆண்கள் மத்தியில் ஒருவிதமாகவும் பெண்கள் மத்தியில் வேறுவிதமாகவும் இந்தப் போராட்டம் நிகழ்ந்தாலும் அடிப்படை என்னவோ ஒன்றுதான்.

உங்களைப் பிரிந்து தூரத்தில் வாழ்கிற உங்கள் குழந்தைகள் உங்களை மிகவும் நேசிப்பார்கள். உங்களுடனேயே இருக்கும் குழந்தைகளுக்கு உங்களுடன் ஏதேனும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருக்கும்.

இதற்குக் காரணம் நீங்கள் கெட்டவர் என்பதோ அவர்கள் கெட்டவர்கள் என்பதோ இல்லை. அவர்களுக்கு அவர்களுடைய இடம் தேவைப்படுகிறது. இருவரும் அதே இடத்தில் இருந்தால் அங்கே உஷ்ணம் தோன்றுகிறது. சில குழந்தைகள் மனமுதிர்ச்சி காரணமாக பெற்றோருடன் ஒத்துப் போவார்கள். அல்லது பெற்றோர் நோய்வாய்ப்பட்டிருந்தால் பராமரிக்கும் அக்கறை வெளிப்படும். இல்லையேல் மோதல்கள் இருக்கும்.

இந்தச் சிக்கல் புதியதில்லை. குகை மனிதர்களாக இருந்தபோதே முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நடுவில் இதுபோன்ற மோதல்கள் இருந்திருக்கும். இதை எப்படிக் கையாள்வது? பெரியவர்கள் கொஞ்சம் பின் நகரக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடங்களை நோக்கி இளைஞர்கள் இயல்பாக நகர்வார்கள். முதியவர்கள் தங்கள் ஞானத்தையும் அனுபவத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவில் வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையென்றால், இளைஞர்கள் இலக்கற்றுச் செல்லவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பெற்ற அனுபவங்களை இளைஞர்கள் பெறாத நிலையில், அவர்களுக்கு இடமும் கொடுத்து அவர்கள் உங்களை அணுகி ஆலோசனை பெறவும் வாய்ப்பளிக்க வேண்டும். உதாரணமாக, அவர்கள் தரைத்தளத்தில் இருந்தால் நீங்கள் முதல் தளத்திற்கு நகர்ந்து விடுங்கள். உங்களை அவர்கள் உயரத்திலேயே வைத்திருப்பார்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert