பெண்ணுக்கு ஓ…! போடும் பிப்லாந்திரி

பெண்ணுக்கு ஓ...! போடும் பிப்லாந்திரி, Pennukku o podum piplantri

கட்டாந்தரை, காய்ந்த போன வானம், கொளுத்தும் வெயில், பாடாய் படுத்தும் வறுமை, இதை வெற்றிக்கு மூலதனமாக்க முடியுமா? முடியும் என்று வீராய்ப்பாய் சொல்பவர்கள் முயற்சித்து பார்த்தால் தெரியும் வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல என்று… ஆனால் வறுமையே வெற்றியாக, பொய்த்த பூமியே முதலீடாக, பெண்மையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்த பிப்லாந்திரியின் கதை சீசனையும் தாண்டி வளர்ந்த வெற்றி மாங்கனி…

குழந்தை பிறந்தவுடன் இது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற கேள்வியே முதலில் பிறக்கிறது. பின்னர் இந்த சமூகத்தில் பெண்ணுக்கு நடந்திடும் அவலங்களை நாம் தினமும் ஊடகங்களில் காண்கிறோம்.

ஒரு பெண் குழந்தை பிறந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்? இதை அறிந்து கொள்ள, இதோ ஒரு முன் மாதிரி கிராமமாக திகழும் பிப்லாந்திரி கிராமத்திற்கு செல்வோம்!

கிராமம் என்றால் அழகுண்டு, கிணறுண்டு மாடும் உண்டு!

பரந்து விரிந்த நிலம் உண்டு! நிழலுண்டு நிம்மதி உண்டு!

வயல் உண்டு பச்சை வண்ணம் உண்டு!

அட! இப்போது இணையதளமும் உண்டு! என்று நம்மை அதிசயிக்க வைக்கிறது பிப்லாந்திரி கிராமம்.

ஆம்! www.piplantri.com என்ற வளையதளத்தில் தனது சாதனை கதையுடன் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது பிப்லாந்திரி கிராமம்.

பிப்லாந்திரி ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்ஸமண்ட் வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். கிராமத்தின் எல்லா வளர்ச்சிக்கும் அரசாங்கத்தையே நம்பிக் கொண்டில்லாமல் தாங்களாகவே ஒற்றுமையுடன் செயலாற்றியதால் இவர்கள் இப்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

கிராமத்தின் சுகாதாரம், குடிநீர் வசதி, மின்சார விளக்கு என அனைத்தையும் தங்கள் பஞ்சாயத்தின் மூலமாக செலவை பகிர்ந்து கொண்டு தாங்களாகவே தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

சுகாதார நடவடிக்கைகளுக்காக நிர்மல் கிராம பஞ்சாயத்து விருது பெற்ற பிப்லாந்த்ரி சலவைக்கல் உற்பத்தியில் கின்னஸ் உலக சாதனையும் படைத்திருக்கிறது.

பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நட வேண்டும். அங்குள்ள பஞ்சாயத்து தலைவர் ஷ்யாம் சுந்தர் பாலிவால் அவர்கள் தனது மறைந்த மகளின் நினைவாக இந்த திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இத்திட்டத்தின்படி ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நட்டு அந்த பெண்ணையும் மரங்களையும் கவனித்து வளர்த்து வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்ணின் எதிர்காலம் கருதி ரூபாய் பத்தாயிரத்தை பெண்ணைப் பெற்றவர் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். மற்ற கிராம வாசிகளிடமிருந்து ரூ. 21000 வசூல் செய்து மொத்தம் ரூ. 31000 நிரந்தர வங்கி சேமிப்பில் செலுத்தப்படும்.

20 வருடங்களுக்கு பின்னரே இந்தப் பணத்தை அவர்கள் வங்கியிலிருந்து எடுத்திட முடியும். இதற்கிடையே அந்த பெண்ணிற்கு பெற்றோர்கள் திருமணமும் செய்தல் கூடாது என்று சட்டப்படி அவர்களிடம் கையெழுத்து பெற்ற பின்னரே பெண்ணின் பெயரில் பணம் செலுத்தப்படும். அது மட்டுமில்லாது பெண்ணின் பெயரில் வளரும் மரத்திற்கும் அவர்கள் பொறுப்பேற்றிட வேண்டும்.

இதனால் பெண் குழந்தை என்றால் அவளது திருமண செலவு கருதி ஏற்படும் தேவையற்ற பதட்டம் இனி இருக்காது. தன் பெண்ணின் எதிர்காலத்தின் மீது அக்கறை காட்டிடும் ஒரு சமூகம் இருப்பதால் பெண்ணை பெற்றவர் மரத்தை வளர்ப்பதில் அக்கறை காட்டுவார். நாடும் வளம் பெறும் வீடும் வளம் பெறும்.

இங்கே ஒரு ஆண்டுக்கு 60 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அதனால் மா, வேம்பு, நெல்லி என கிராமும் செழிக்கிறது. மரங்கள் வளர்ந்திடும்போது அதனை கரையானிடமிருந்து காப்பாற்ற அதனைச் சுற்றி கற்றாழைகளும் வளர்த்திடும் இந்த மக்கள் கற்றாழையையும் சரியான முறையில் சந்தைப் படுத்துகின்றனர்.

இங்கே ஒரு மனிதர் இறந்து போனால் 11 மரங்கள் நட வேண்டும் என்ற முறையையும் பின்பற்றி வருகிறார்கள். பெயரிலேயே Plant (Piplantri) இருப்பதாலோ என்னவோ பிறப்பிலும் இறப்பிலும் கலந்து போன இந்த மர வளர்ப்பு சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை இந்த உலகிற்கு வழங்கியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக காவல் நிலையத்தில் எந்த வழக்குகளும் இல்லாத பிப்லாந்திரி திரு. அண்ணா ஹசாரேயின் பாராட்டையும் திரு. அப்துல் கலாமின் பாராட்டையும் பெற்றதில் மிகவும் பெருமை கொள்கிறது.

பாதை சற்றே நீண்டதாய் தெரிந்தாலும், இவர்கள் எடுத்துள்ள இந்த முயற்சியை பாராட்டு என்னும் வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாது. தேவை ஸ்திரமான மனநிலை, தீவிரமான ஒழுக்கம். உண்டா நம்மிடம்…?

 


இந்த ஊர் மக்களின் முயற்சியையும் ஒற்றுமையையும் அங்கீகரிக்க விரும்புபவர்கள் இதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்!

shabd-ke-pare.blogspot.inஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert