நம் கலாச்சாரத்தில் பெண்கள் மெட்டி அணிகின்ற பழக்கம் இருந்து வருகிறது. இதனுடைய முக்கியத்துவம் என்ன? இதை அணியவில்லை என்றால் எதாவது பிரச்சினை ஏற்படுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஆணும் பெண்ணும் தம்முடைய உடல் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படும் உறவு என்று பார்க்கவில்லை. இரு உயிர்களையும் இணையச் செய்வதாகவே பார்த்தனர். இந்த இணைதல் வெறும் உடல் நிலையில் அல்ல, மனநிலையில் அல்ல, உயிர் நிலையில் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு விஞ்ஞானத்தையே உருவாக்கினார்கள். மங்கல சூத்ரம் (திருமாங்கல்யம்) கூட இந்த அடிப்படையில்தான் உருவாயிற்று.

அந்தக் காலத்தில் திருமணம் என்பது அன்பிற்காக அல்ல; அதையும் பக்தியாகத்தான் பார்த்தார்கள்.

அந்தக் காலத்தில் எட்டு வயதில் எல்லாம் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்தது. திருமணத்திற்குப் பின் மனதளவிலும் அவர்களிடம் நீங்கள் இருவரும் ஒன்று என்று கூறியே வளர்த்து வந்தனர். ‘அவன்தான் உன் உயிர்’ என்று கூறியே அந்தப் பெண்ணை வளர்த்தனர். மீண்டும் 15, 16 வயதில்தான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள்.

அதுவரை தன் துணையை பார்க்காமலேயே உணர்வு நிலையிலும் மன நிலையிலும் அவர்கள் இருவரும் ஒன்றி இருப்பார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு பக்தர் சிவனைப் பார்த்ததே இல்லை என்றாலும், ஷிவா என்று யாராவது சொன்னால் அவர் கண்ணில் நீர் வழிகிறதுதானே? அதுபோல் ஆகிவிடும். 8 வயதிலிருந்து 14 வயது வரைக்கும் தன் கணவரை நினைத்தாலே கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருகும் அளவிற்கு அந்தப் பெண்ணின் மனநிலை மாறியிருக்கும். அந்தக் காலத்தில் திருமணம் என்பது அன்பிற்காக அல்ல; அதையும் பக்தியாகத்தான் பார்த்தார்கள். திருமணமாகி 5, 6 வருடங்கள் கழிந்த பின்னும் அவரைப் பார்க்கவில்லை. அதனால் அந்த எண்ணம் பக்தியாக ஆகிவிடுகிறது. அந்தப் பெண்மணிக்கு, கணவனைக் கண்ணில் பார்த்தாலே தெய்வத்தைப் பார்த்ததைப் போல் ஆகிவிடுகிறது.

இப்படி ஒரு நிலையில் அவர்கள் இருவரும் உடலளவில் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போவதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்று பல சமயங்களில் நடைபெற்று இருக்கிறது. அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு உலோகத்தை காலில் சலங்கையாகவும் ஒரு குறிப்பிட்ட விரலில் மெட்டியாகவும் அணியும் வழக்கம் வந்தது. இப்போதெல்லாம் ஒருசிலர் செய்வதுபோல் திருமணத்திற்கு முன் அவர் யார், என்ன என்பதை எல்லாம் புலன்விசாரணை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எல்லாம் அப்படி உயிர் நீங்காது. அவர்களுக்கு மெட்டி தேவையில்லை. பார்த்தவுடனே உடலை விடக்கூடிய அளவிற்கு பேரானந்தம் ஏற்பட்டால்தான் மெட்டி தேவை. ஏனெனில் அதுபோன்ற ஆனந்தத்தை இந்த உடலால் தாங்கிக்கொள்ள இயலாது. அப்படி ஒரு ஆனந்தத்தை அடைபவராய் இருந்தால் மெட்டி அணிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. காலம் மாறிவிட்டது, இந்த சமூகத்தினுடைய சூழ்நிலை, இந்த உலகத்தினுடைய சூழ்நிலை எல்லாம் மாறிவிட்டது. அதனால் இப்போது மெட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.