Question: "அலங்காரச் சாதனங்களுக்காகப் பெண்கள் செலவு செய்யும் தொகையைக் கண்டு மிரண்டு போகிறேன். பெண்கள் தங்கள் அழகுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? ஆண்களைக் கவர்வதற்காக அவர்கள் இதைச் செய்வது ஒருவிதத்தில் தங்களையே தாழ்த்திக் கொள்ளும் செயல் அல்லவா?"

சத்குரு:

ஒரு பெண் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள விரும்புவது அவளுடன் பிறந்த குணம். அவளுடைய அந்தச் சுதந்திரமான ஆசை, கலாச்சாரத்தின் ஓர் அம்சமாகி விட்டது.

செல்வம் படைத்த ஆணையே பெண் விரும்பி மதிக்கிறாள். எழில் மிகுந்த பெண்ணையே ஆண் விரும்பி ரசிக்கிறான்.

இனப்பெருக்கம் நிகழ்வதற்காக இயற்கை சில தந்திரங்களைச் செய்திருக்கிறது. பூக்கள்கூட தங்களை வண்ணமயமாக அழகுபடுத்திக் கொள்வதால்தான் தேனீக்களைக் கவர்ந்திழுக்கின்றன. மிருக இனத்திலும் பறவை இனத்திலும் கூட இது பரவலாகக் காணப்படுகிறது.

மனிதர்கள் இந்த விஷயத்தில் வேறுபட்டவர்கள்.

ஓர் ஆண் தன்னை வீரியம் மிக்கவனாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறான். அந்தச் சக்தி உடல் பலமாகவும் இருக்கலாம்; பண பலமாகவும் இருக்கலாம்.

ஆண்களுக்குப் பணம் என்னவெல்லாம் செய்யுமோ, அதைப் பெண்களுக்கு அழகு செய்து தரும். பணம் படைத்த ஆணிற்கு தடை என்பது பெரும்பான்மையாக இருப்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் அவனால் தடையின்றிப் போக முடியும். அழகுமிக்க பெண்ணிற்கோ, பணம் தேவையில்லை. அந்த அழகே போதுமானது. உலகில் பெரும்பான்மையான கதவுகள் அவளுக்காகத் திறந்து நிற்கும்.

செல்வம் படைத்த ஆணையே பெண் விரும்பி மதிக்கிறாள். எழில் மிகுந்த பெண்ணையே ஆண் விரும்பி ரசிக்கிறான்.

அன்றாட வாழ்வியலில் இதுவே நடைமுறை என்பதால், பெண்கள் தங்களை அழகாகக் காண்பிக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். இது இயல்பானதுதான்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"பணத்தை விட அழகு வேகமாக அழியக்கூடியது அல்லவா? அதை முன்னிலைப் படுத்துவது பரிதாபம் அல்லவா?"

பணம், அழகு இரண்டுமே நிலையானவை அல்ல! அவற்றை வைத்து இறுதியான தீர்ப்புகள் வழங்க முடியாது.

காலம்காலமாக இப்புவியின் ஜனத்தொகையில், ஆண்களை விட பெண்களின் விகிதம் கூடுதலாகவே இருந்து வந்திருக்கிறது. பழங்காலத்தில், ஆண்களின் எண்ணிக்கை போர் காரணமாக மேலும் குறைந்தது. குறைவான ஆண்களுக்கு அதிகம் பெண்கள் போட்டி போட வேண்டியிருந்ததால், அழகு முன்னிலை பெற்றது. மாறாக, ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்திருந்தால், நிலைமை தலைகீழாகி விடும்.

இன்றைக்குச் செயற்கைக் கருத்தடை காரணமாக ஆண்-பெண் விகிதநிலை மாறிவிட்டது. கருத்தடை என்று ஒன்று இல்லாதிருந்தால், ஒவ்வொரு பெண்ணும் சராசரியாகப் பன்னிரண்டிலிருந்து பதினெட்டு குழந்தைகளுக்குத் தாயாக முடியும். அப்படிப் பிறக்கும் குழந்தைகளில் பெண்களின் விகிதம்தான் கூடுதலாக இருக்கும்.

தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பொருட்படுத்தாது, விருப்பப்படி மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பெண்கள் சரித்திர காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி... மிகச்சிலரே!

ஆன்மீகப் பாதை ஆண், பெண், அழகு, அழகின்மை எல்லாவற்றையும் கடந்தது என்பதால், அங்கே வேண்டுமானால் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லாது போகும்.

"ஆண்களின் அழகைக் கூட்டுவதற்கும் இன்று சில சாதனங்கள் விற்பனைக்கு வந்துவிட்டனவே?"

ஆண்கள் தங்கள் தோற்றம் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று யார் சொன்னது? தோற்றத்தில் ஆணுக்குரிய கம்பீர அழகு இல்லாதவனாய் இருந்தாலும், பணம் மிகுந்திருந்தால் அவனிடம் ஓர் அதிகாரம் கூடுகிறது. பெண்கள் அதனால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றும், ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் பல நாட்கள் கழித்துச் சந்தித்தன.

"எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டது ஒற்றை ரூபாய்.

"மிகச் சந்தோஷமாக இருக்கிறேன். அழகான பெண்களின் பர்ஸ், விமானம், கப்பல், கிரிக்கெட் மைதானம், கடற்கரை விடுதி, வெளிநாடு என்று சுகமாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன். அது சரி, நீ எங்கெங்கு போனாய்?" என்றது ஐநூறு ரூபாய்.

ஒற்றை ரூபாய் பெருமூச்சுவிட்டுச் சொன்னது..."பிச்சைத் தட்டு, இல்லையென்றால் கோயில் உண்டியல்!"

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது கம்பீரமான, அதிகார பலம்தான். அதை அவனுக்கு முன்பு உடல் பலம் தந்தது; இன்று செல்வம் தருகிறது.

அறிவாற்றலில் குறைபட்டிருந்தாலும், அழகு மிக்கவளாக இருந்தால், ஆண்களுக்கிடையில் ஒரு பெண் சக்தி மிக்கவளாகி விடுகிறாள். இயல்பு வாழ்க்கையில் இதுதான் நிதர்சனம்.

"அப்படியானால், ஒரு பெண் அழகானவளாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அழகற்ற பெண்கள் எங்கே போவது?"

தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள விரும்புவது அப்படியொன்றும் கவலைக்குரிய விஷயமல்ல என்றுதான் சொன்னேன்.

இதுதான் அழகு என்று யாரும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஒருவர் அழகா, இல்லையா என்பது பார்ப்பவர் மனதில்தான் இருக்கிறது.

ஐம்புலன்களைத் தாண்டி யோசிக்க முடியாதவர்களுக்குத் தான் அழகு, அசிங்கம் என்பதெல்லாம் முக்கியமானதாக இருக்கிறது.

அகத்திலா, முகத்திலா.. எங்கே அழகாக இருக்க வேண்டும் என்பது அவரவர் தேர்வு. வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தரப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

உள்ளே எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய அக்கறை இருப்பவர்கள், தங்கள் வெளித்தோற்றம் பற்றி அலட்டிக் கொள்வது இல்லை. உங்கள் கவனம் வெளியிலிருந்து உள்நோக்கித் திரும்ப வேண்டும் என்பதே என் அவா! ஐம்புலன்களைத் தாண்டியதொரு அனுபவத்தின் அழகு அபரிமிதமானது. அதை நீங்கள் உணர வேண்டும்.

அந்த அமுதம் வெளியில் இல்லை... உங்களிடம்தான் இருக்கிறது. அதை சுவைப்பதும் சுவைக்காமல் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம்..