பட்டாம்பூச்சிகள் நம் ஒவ்வொருவரின் இளம் பருவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை! பட்டாம்பூச்சிகளை பிடித்து சிலர் சித்திரவதை செய்திருப்பார்கள்; சிலர் தூர நின்று ரசித்து மகிழ்ந்திருப்பார்கள்! அந்த அழகிய அற்புத உயிரினம் கவிஞர்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன?! “பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?” என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் நம் மனதில் ரீங்காரமிடுகின்றன. மறைந்த இளம் கவிஞர் நா.முத்துக்குமார் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார்!
பிரபல அறிவியலாளர் ஒருவர் ‘பட்டாம்பூச்சி விளைவு’ என்று ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்! அதாவது ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகை படபடக்கும் நிகழ்வானது உலகின் வேறொரு இடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கலாம் என்பதுதான் அந்த பட்டாம்பூச்சி விளைவு! இதன் மையக்கருத்து என்னவென்றால் ஒரு பெரும் விளைவுக்கு அடிப்படையாக ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட இருக்கலாம் என்பதுதான்!

பட்டாம்பூச்சி விளைவு ஒருபுறம் இருந்தாலும், இயற்கை நிகழ்வுகள் சார்ந்து பார்க்கையில் அந்த சிறிய உயிரினமான பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழலில் வகிக்கும் முக்கியப் பங்கை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. பட்டாம்பூச்சிகளைப் பற்றிய அறிவை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் தன்னார்வத்தொண்டர்கள் பள்ளி மாணவர்களிடத்தில் பட்டாம்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வை உண்டாக்குகின்றனர்.

பட்டாம்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கையில் முக்கிய ஊடகமாக செயல்படுவதால் செடிகொடிகள் மரங்கள் செழிக்கவும் விவசாயத்திற்கும் முக்கியக் காரணியாகின்றன. பட்டாம்பூச்சிகள் குறித்த அறிவு மாணவர்களிடத்தில் மேம்படும்போது, அதனைப் பாதுகாக்கும் மனப்பான்மையும் கூடவே வளரும்.

குறிப்பிட்ட வகை மரங்களில் குறிப்பிட்ட வகை பட்டாம்பூச்சிகள் மட்டுமே வந்து முட்டையிடும். எந்தெந்த மரங்களில் என்னென்ன வகை பட்டாம்பூச்சிகள் தங்கும் என்பன போன்ற தகவல்களும், நம் ஊர்ப்புறங்களில் காணப்படும் சுமார் 40 வகை பட்டாம்பூச்சிகளையும் இனம்கண்டறியும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மரங்கள், பட்டாம்பூச்சிகள், மனிதர்கள் என உயிர்ச்சங்கிலியில் ஒவ்வொருவருமே ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பது மாணவர்களுக்கு உணர்த்தப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முட்டையிலிருந்து வெளிவருவது, புழுவாக இருக்கும் நிலை, புழுக்கள் நிறம் மாறும்நிலை, கூடு உருவாகுவதல் போன்ற பட்டாம்பூச்சிகளின் வளர்ச்சி நிலைகள் ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. மேலும், ஆண் மற்றும் பெண் பட்டாம்பூச்சிகளை பிரித்தறிவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அட்டவணைகள் வரைபடங்களாக பள்ளியிலுள்ள ஒவ்வொரு வகுப்பிலும் வழங்கப்படுகிறது!
பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி பற்றியும் சுற்றுச்சூழலில் அதன் பங்களிப்பு குறித்தும் முழுமையாக அறிந்துகொள்ளும் மாணவர்கள், பட்டாம்பூச்சிகளை நேசிக்கவும் பாதுகாக்கவும் இயல்பாகவே ஆர்வம்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலில் ஒவ்வொரு உயிரினத்திடமும் ஒவ்வொரு தன்மையுடனும் இணக்கமாகச் செல்லும் மனநிலையை மாணவர்கள் பெறுகிறார்கள்!

ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம்

பள்ளிப்பருவம் என்பது எதையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் பருவமாகும். குழந்தைகளின் மனங்கள் தூய்மையான வெள்ளைக் காகிதம்போல் இருப்பதால், நாம் அதில் நல்ல எண்ணங்களையும் நோக்கங்களையும் பதியச்செய்யும்போது அது என்றென்றைக்கும் அழியாமல் அவர்களையும் இந்த சுற்றுச்சூழலையும் சிறக்கச் செய்யும்! நாம் பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொண்ட பழக்கம் பசுமரத்தாணி போல பதிந்து, இன்றளவும் நம்முடன் இருந்து வருவதை நாம் கவனித்துப் பார்க்கையில் புரியும்.

அந்த வகையில், ஈஷா பசுமைக் கரங்களின் பசுமைப் பள்ளி இயக்கம், பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏட்டுப் படிப்பாக இல்லாமல், களப்பணியாக கொண்டுசேர்க்கிறது! நாம் என்னதான் புரியும் படியாக வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் சொல்லிப் புரியவைத்தாலும், களத்தில் செயல்முறையாக ஒன்றைக் கற்கும்போது அதன் தாக்கம் முற்றிலும் ஆழமானதாக இருக்கும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் மூலம் 2,200 பள்ளிகளின் சுமார் 1லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கமானது குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை நல்குவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்கி, இன்று 35 லட்சம் மரக்கன்றுகளை நடச்செய்துள்ளது.

பசுமைப்பள்ளி இயக்கத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள் தாங்களாகவே நாற்றுப் பண்ணைகளை உருவாக்குகின்றனர். புத்தகப் பாடமாக கற்பிக்கப்படாமல், விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுகின்றன. இதனால் அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது.

இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 94425 90062