பறவைகளைப் பாடாத கவிஞனும் இல்லை; மரங்களைப் புகழாத புலவனும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பறவைகளும் மரங்களும் மனிதனிடத்தில் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டுள்ளன. அந்தத் தொடர்பின் முக்கியத்துவத்தை ஆழமாக நமக்குள் பதிய வைக்கிறது இக்கட்டுரை...

பறவைகள், மரங்கள் தருகின்ற பழங்களைத் திண்பதோடு, மரக்கிளைகளில் கூடுகட்டி மரங்களைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொள்கின்றன. பதிலுக்கு அவை மனிதர்கள் போலே 'தேங்க்ஸ்' என்று சொல்லிவிட்டு போய்விடுவதில்லை; அதற்கான நன்றியை வேறுவிதமாய்ச் செலுத்துகின்றன.

"சின்னஞ்சிறு பறவை போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா.
வண்ணப் பறவைகளைக் கண்டால் நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா"

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த கோடை காலத்தில், தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு நமது சுற்றுப்புற இடங்களில் தண்ணீர் வைப்பதுதான்.

பாரதியின் இந்த பாட்டு பாப்பாவிற்கு மட்டுமல்ல, பாரில் உள்ள அனைவருக்கும்தான். பறவைகளைப் பார்த்து மகிழ்கிறோம்; பாடுகிறோம்; குதூகலிக்கிறோம். ஆனால் பறவைகளிடத்தில் நாம் கவனிக்காத அம்சங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான், மரங்களின் விதைகளை பரப்புகின்ற அற்புதச் செயல். ஆம்! தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவை தன் எச்சம் மூலம் விதைகளை ஆங்காங்கே இட்டுச்செல்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாவல், சீத்தா, இலுப்பை, கொடுக்காய் புளி, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களிலிருந்து பழங்களைத் திண்ணும் பறவைகள் அதன் விதைகளை தான் செல்லும் இடங்களில் இடுகின்றன. மகிழம், செண்பகம் போன்ற பூ மரங்களின் கனிகளை 'புல்புல்' பறவைகள் விரும்பி உண்கின்றன்; வேப்பம்பழங்களை விரும்பி உண்ணும் காக்கைகள் மரம்நடும் தன்னார்வத் தொண்டர்களாகவே மாறிவிடுகின்றன. பறவைகளுக்குப் பிடித்த பழங்களான அரசு, ஆலம், அத்தி போன்றவற்றின் விதைகள் வெகுவாக பறவைகளால் பரப்பப்படுகின்றன.

1

நாம் செய்ய வேண்டியது என்ன?

பறவை இனம் விதைகளை ஆங்காங்கே பரப்பினாலும், அவற்றில் வளர்ந்து மரங்களாகும் விதைகள் சொற்பமே! சரியான சூழ்நிலையும் நீர் வசதியும் கிடைக்கும் விதைகள் மட்டுமே பல்வேறு பருவநிலைகளைத் தாக்குப்பிடித்து மரங்களாகின்றன. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த கோடை காலத்தில், தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு நமது சுற்றுப்புற இடங்களில் தண்ணீர் வைப்பதுதான். இப்படி வைப்பதால் பறவைகள் தாகத்தை தீர்த்த மகிழ்ச்சி ஒரு புறம் கிடைத்தாலும், பறவைகள் அங்கு விட்டுச் செல்லும் விதைகள் நம் நிலங்களில் மரங்களாகும்.

ஒரு மண் சட்டியிலோ அல்லது சிறிய குழியை வெட்டியோ பறவைகளுக்கான நீரை வைக்கும்போது அந்த இடத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்தோமானால், அங்கு விழும் விதைகள் நன்கு வளர வாய்ப்புள்ளது. நமது கொல்லைப்புறங்களில் இதுபோன்று ஒரு இடத்தை உருவாக்க முடியும். சற்று பெரிய அளவில் நிலங்கள் உள்ளவர்கள் விதைகளைச் சேகரித்து தங்கள் நிலங்களில் நடலாம். அப்படி நடுவதற்கு நிலமோ நேரமோ இல்லாதவர்கள் விதைகளைச் சேகரித்து ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப்பண்ணைகளில் கொடுத்து விடலாம்.

ஈஷா பசுமைக் கரங்கள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.5.00) வழங்கி வருகிறது.

ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Ktoine @ flickr