‘பறவைகள் பற்றி மனிதர் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்? மனிதனைப் பற்றி கவலைப்படவே இங்கு நேரம் போதவில்லை!’ எனக் கூறும் பல பிஸியான மனிதர்கள் பெருகியுள்ள இந்த சூழலில், பறவைகளை மனிதன் ஏன் கவனிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் சில வரிகள் இங்கே!

“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே”

மகாகவி பாரதியின் இந்த வரிகள் விடுதலையின் அடையாளம் பறவைகள் என்பதை சொல்லாமல் சொல்கின்றன. ஆனால், இன்றைய அவசர உலகில் பறவைகளைக் கவனிப்பதற்கோ அதை இரசிப்பதற்கோ நேரம் எங்கே இருக்கிறது?! ஆம்... நவீனயுக மாந்தர்களுக்கு தெரிந்ததெல்லாம் Angry bird மட்டுமே! அல்லது வறுத்தெடுத்து ருசிக்கப்படும் பிராய்லர் கோழிகள்!

நாம் ஒரு அட்டைப் பெட்டியில் சிறிது வைக்கோல் நிரப்பி, நாலாபுறமும் அடைத்து ஒரு பொந்து அளவிற்கு ஓட்டை போட்டு நம் வீடுகளில் தொங்கவிட்டால் சிட்டுக் குருவிகள் நம் வீடுகளுக்கும் மீண்டும் படையெடுப்பதைப் பார்க்கலாம்!

பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இதைத் தவிர வேறெந்த தொடர்பும் இல்லை என்றே பலரும் நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், அது எவ்வளவு மூடத்தனம் என்பது இயற்கையை சற்றே கூர்ந்து கவனித்தால் அறிந்துகொள்ளலாம்.

உண்மையில், இயற்கை இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதாய் ஒரே சங்கிலியில் பிணைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த பூமி பசுமையோடும் உயிர்ப்போடும் தொடர்ந்து இயங்கவேண்டுமாயின், இந்தச் சங்கிலி எந்தவிதத்திலும் பாதிப்பிற்குள்ளாகாமல் இருத்தல் வேண்டும். ஒரு பறவை இனம் அழிகிறதென்றால் அது மனித இனத்தின் அழிவிற்கு அச்சாரம் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பறவைகளைப் பொறுத்த வரையில், காகம், மைனா முதல் சிட்டுக் குருவி, மாடப்புறா என பலவகை பறவை வகைகளும் மனிதனின் அருகாமையில் வாழும் தன்மையைக் கொண்டுள்ளன. இந்த பறவைகளெல்லாம் தாங்கள் உண்ணும் பழங்களையும் விதைகளையும் தனது எச்சத்தின் மூலம் வேறொரு இடத்திற்கு கொண்டு சேர்த்து, தாவர இனம் பரந்துபட்டு பெருக வழிவகுக்கின்றன.

இன்று சிட்டுக் குருவி இனம் வெகுவாக அழிந்து வருவதாக ஊடகங்களில் இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிப்பதைப் பார்க்கிறோம். இதற்கு நமது வீடுகளில் இருக்கும் நவீன கட்டிட அமைப்பு முறையும் முக்கிய காரணம் என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்பெல்லாம் சிட்டுக் குருவிகளும் மாடப் புறாக்களும் நம் வீட்டில் வந்து கூடு கட்டுவதற்கு பரன்களும், உத்திரங்களும், மாடங்களும், விட்டங்களும் ஏதுவாய் அமைந்தன. ஆனால், தற்போது கான்கிரீட் சுவர்கள் மட்டுமே வீடுகளை தாங்கிப் பிடிக்க, குருவிகளும் புறாக்களும் வீட்டிற்கு வருகை தருவதைக் குறைத்துக் கொண்டன.

ஆனால், இது காலத்தின் கட்டாயமல்லவா? வீடுகளின் அமைப்பை எப்படி பழைய முறையிலேயே அமைக்க முடியும்? இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்கள், மீண்டும் பறவைகளோடு வாழ்வதற்கு இப்போதுள்ள சூழலில் என்ன வழி என சற்று ஆராயலாமே!

நாம் ஒரு அட்டைப் பெட்டியில் சிறிது வைக்கோல் நிரப்பி, நாலாபுறமும் அடைத்து ஒரு பொந்து அளவிற்கு ஓட்டை போட்டு நம் வீடுகளில் தொங்கவிட்டால் சிட்டுக் குருவிகள் நம் வீடுகளுக்கும் மீண்டும் படையெடுப்பதைப் பார்க்கலாம்! நமது வீட்டு வாசலில் சிறிதளவு இடமிருந்தாலும், அங்கே சிறிய வகை பழ மரங்களான சப்போட்டா, நெல்லி, நாவல், சீத்தாப்பழம் போன்ற மரக்கன்றுகளை நட்டு வைக்கலாம்! இந்த மரங்களெல்லாம் பறவைகளை வெகுவாக ஈர்க்கும்.

நமது மொட்டை மாடிகளில் ஒரு மண்கலசத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்; அதோடு சிறிதளவு தானியங்களை அங்கே சிதறி வைக்கலாம்! இவையெல்லாம் பறவைகள் பெருகுவதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும், பறவைகளைக் கவனிக்கும்போது நம் குழந்தைகளுக்கும் நமக்கும் இயற்கையின் செயல்பாடுகள் குறித்தும் இயற்கையோடு வாழ்வது குறித்தும் விசாலமான பார்வையும் கிடைக்கும்.

பறவைகளின் செயல்பாடுகள் பலவிதத்திலும் மனிதனைச் சார்ந்து இருப்பதோடு மனித இனம் தழைத்தோங்குவதற்கு அத்தியாவசியமாகவும் உள்ளது. பறவைகள் மட்டுமல்ல மண்புழு, வண்ணத்து பூச்சிகள், தேனீக்கள் என அனைத்து புழுபூச்சிகளும் மனிதன் தன்னை இப்பூமியில் தக்கவைத்துக் கொள்வதற்கு பெரும்பங்கு வகிக்கின்றன.

ஈஷா நாற்றுப் பண்ணைகள்

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. உங்கள் வீடுகளைச் சுற்றி பழ மரக்கன்றுகளை நட்டு பறவைகள் வரவை அதிகரியுங்கள்!

மேலும் பல்வேறு மரவகைகள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மிகக் குறைந்த விலைகளில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக நீங்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து மரக்கன்றுகளைப் பெற முடியும்.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே: 94425 90062