பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 33

'ஆசிரியர் பணி அறப்பணி’ என்று கூறுவார்கள். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடுவது என்பது தற்போது நமக்கும் நம் பூமிக்கும் தேவையான முக்கியமான அறமாகிறது! இந்த இரண்டையும் செவ்வனே மேற்கொள்ளும் ஒரு பள்ளி ஆசிரியர் கூறும் சுவையான அனுபவங்களை இங்கே படித்தறியலாம்!

ஈஷா விவசாயக் குழுவினர் கிழக்கு மண்டலப் பயணத்தில் திட்டக்குடி வட்டம், ராமநத்தம் ஊராட்சி, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு. ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்தனர். பட்டதாரி ஆசிரியரான இவர் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே இயற்கை விவசாயமும் செய்து வருகிறார், அவரது அனுபவங்கள் நமது குழு விவசாயிகளுக்காக.

தாங்கள் ஒரு ஆசிரியராக பணிசெய்கிறீர்கள், இயற்கை விவசாயத்தில் எப்படி ஆர்வம் வந்தது?

சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது, பல மருத்துவம் செய்தும் பூரண குணம் ஏற்படவில்லை, அப்பொழுதுதான் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தி இயற்கை உணவுகளை உண்ணத் தொடங்கினேன். அதன் பிறகு இரசாயன விவசாயம் செய்யவே எனக்கு பிடிக்கவில்லை

ஆசிரியராக பணி செய்து வந்தாலும் விவசாயமும் செய்து வந்தேன், இரசாயன விவசாயம் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது, பல மருத்துவம் செய்தும் பூரண குணம் ஏற்படவில்லை, அப்பொழுதுதான் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தி இயற்கை உணவுகளை உண்ணத் தொடங்கினேன். அதன் பிறகு இரசாயன விவசாயம் செய்யவே எனக்கு பிடிக்கவில்லை, இயற்கை விவசாயம் செய்ய தொடங்கிவிட்டேன்.

முதலில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்தேன், ஏற்கனவே இருந்த கரும்பை இயற்கைக்கு மாற்றினேன், நாட்டு ரக உளுந்து பயிர் செய்தேன், தற்போது சிறுதானியங்களையும் பயிர் செய்யத் தொடங்கியுள்ளேன்.

இயற்கை வாழ்க்கை முறையினால் உடல்நலம் சீரானதா?

நிச்சயமாக, சிறுநீரக கோளாறினால் அடிக்கடி வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். மேலும் கழுத்து வலியும், மூட்டு வலியும்கூட இருந்தது. அதற்கு தீர்வாக இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, உணவு முறைகளிலும் மாற்றம் செய்தேன். இயற்கை உணவுகளை மட்டுமே உண்ணத் தொடங்கினேன், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றையும் செய்யத் தொடங்கினேன், தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

“கெட்டது வந்தாலும் கெட்டிக்காரனுக்கு நல்லதாயிடும்னு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! அதுமாறி நம்ம ரவிச்சந்திரன் அண்ணா நோய் வந்தாலும் அதைய பாஸிட்டிவா மாத்திப்போட்டாருங்கோ. ரொம்ப பேரு நோய் வந்தாதானுங்க மாறுறாங்கோ. இதப் படிக்குறவங்க, நோய் வர்றதுக்கு முன்னாடியே மாறோணும்கிறது என்னோட ஆசைங்ணா!

எந்தெந்த இயற்கை உணவுகளை எடுத்துக் கொண்டீர்கள்?

முக்கியமாக காட்டுயானம் அரிசியைத்தான் உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டேன். அந்த அரிசியைத் தொடர்ந்து உண்டு வந்ததால் உடல் நலம் மேம்பட்டது. இந்த அரிசியை சாப்பிடுவதினால் எவ்வளவு வெய்யிலில் சென்றாலும் உடலில் களைப்பு ஏற்படாது, ஆசிரியர் பணி செய்து கொண்டிருந்தாலும் நிழலைத் தேடி உட்காராமல் வெய்யிலிலும் என்னால் விவசாய வேலைகளைச் செய்ய முடிகிறது.

நார் சத்து அதிகம் உடைய மாப்பிள்ளை சம்பா மற்றும் கவுனி அரிசி ரகங்களை உண்டதினால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் தீர்ந்தது. வெள்ளைப்பொன்னி, கிச்சலி சம்பா, சொர்ண மசூரி போன்ற ரக அரிசிகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்து வருகிறேன்.

பாரம்பரிய அரிசிகளால் பறந்துபோன நோய்கள்... ஒரு ஆசிரியரின் விவசாய அனுபவங்கள்!, parampariya arisigalal paranthupona noigal... oru asiriyarin vivasaya anubavangal

எந்தெந்த பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்கிறீர்கள்?

பாரம்பரிய நெல் ரகங்களை விதை நெல்லுக்காகவும், அரிசிக்காகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறேன். இரண்டு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 7 ரகங்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறேன். காட்டுயானம் நெல்லைத்தான் முதலில் சாகுபடி செய்தேன். இந்த பகுதிக்கு சீரக சம்பா, சொர்ண மசூரி, காட்டுயானம் போன்றவை நல்ல மசூலைத் தருகிறது, மற்ற ரகங்களில் விளைச்சல் சற்று குறைவாகவே உள்ளது.

தற்போது நெற்பயிரோடு சிறு தானியங்களையும் சேர்த்து பயிர் செய்து வருகிறேன், வறட்சி காலங்களில் கிணற்றுப் பாசனம் குறைந்து விடுகிறது, அதனால் சிறுதானியங்களையும் பயிர் செய்யத் துவங்கிவிட்டேன். கேழ்வரகு 60 சென்டிலும், குதிரை வாலியை 30 சென்டிலும் மேட்டுபாத்தி முறையில் பயிர்செய்து தற்போது அறுவடை செய்துள்ளேன். சிறுதானியங்களையும் நாற்று விட்டே நடவு செய்கிறேன், நாற்றை பிஜாமிர்தக் கரைசலில் வேர் நனையும்படி சிறிது நேரம் வைத்திருந்து அதன்பின்பே நடவு செய்கிறேன், இதனால் பயிர்கள் நோய் தாக்குதல் இன்றி வாளிப்பாக வளர்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விதைக்காக என்னென்ன பாரம்பரிய நெல்லை சாகுபடி செய்து வருகிறீர்கள்?

இரண்டு ஏக்கர் நிலத்தில் பல பாரம்பரிய ரகங்களை பயிர் செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு வெவ்வேறு ரகங்களில் நெல்விதைகள் தேவையிருப்பதினால் பலரகங்களை பயிர் செய்கிறேன். தற்போது இலுப்பைபூ சம்பா, கிச்சிலி சம்பா, சீரக சம்பா, காலா நமக், கருப்பு கவுனி போன்ற ரகங்களை பயிர் செய்துள்ளேன்.

கடந்த அறுவடையில் கிடைத்த சொர்ண மசூரி, இ.பூ.சம்பா, கி.சம்பா, சீ.சம்பா, மாப்பிள்ளை சம்பா, நீள சம்பா, கருப்பு கவுனி, காட்டுயானம் போன்ற ரகங்களின் விதைநெல்லை விற்பனை செய்து வருகிறேன். விதை நெல்லை விவசாயிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கிறார்கள், தேவைப்படுவோர்க்கு பார்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கிறேன்.

பாரம்பரிய அரிசிகளால் பறந்துபோன நோய்கள்... ஒரு ஆசிரியரின் விவசாய அனுபவங்கள்!, parampariya arisigalal paranthupona noigal... oru asiriyarin vivasaya anubavangal

இயற்கை விளைபொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?

என்னிடமிருந்து ஆத்தூர் கிச்சிலியை வாங்கி சாப்பிட்டவர்கள் 'இது போல் சுவையான கிச்சலியை நாங்கள் இதுவரை சாப்பிட்டது இல்லை' என்றும் 'சாப்பாடு வாசனையாகவும் சுவையாகவும் இருக்கிறது' என்றும் தெரிவிக்கிறார்கள்.

அரிசியுடன் நாட்டு ரக உளுந்தும் விற்பனை செய்து வருகிறேன். நாட்டுரக உளுந்தை பொதுவாக தோல் உறிக்காமல் பயன் படுத்தினால் முழுசத்தும் கிடைக்கும். தோல்நீக்கி உடைத்து கேட்பவர்களுக்கு உடைத்தும் தருகிறேன். உடைத்த நாட்டு உளுந்து பாசிப்பயறு அளவுக்கு சிறிதாகவே இருக்கும்.

உளுந்தை வாங்க வருபவர்கள், "இந்த உளுந்து சிறிதாக இருக்கிறதே?" என்று கேள்வி எழுப்புவார்கள், அவர்களிடம் "ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள், ஒரு கிலோ அரிசிக்கு இந்த உளுந்தை 150 கிராம் போட்டாலே போதும் இட்லி சுவையாக வரும்," என்றுகூறி விற்பனை செய்வேன். அவர்களும் பயன்படுத்திப்பார்த்து சுவையை அறிந்தபின் தொடர்ந்து விரும்பி வாங்குகிறார்கள். அரை ஏக்கரில் கிடைக்கும் கரும்பில் இருந்து இயற்கை முறையில் சர்க்கரையும் செய்து விற்பனை செய்கிறேன், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

"வீட்டு நாயப் போல காவல் இல்ல, நாட்டுப் பயிரப்போல நன்மை இல்ல" ன்னு அந்தக் காலத்துல சும்மாவா சொல்லிப்போட்ருக்காங்கோ! அட கெரகத்துக்கு இந்தக் காலத்து ஆளுங்க அல்லாமே, அரிசி பளபளன்னு வெள்ளையா இருக்கோணும்னு நெனைக்கறாங்ணா. தோல உறிச்சுப்போட்டு நல்லா பளபளன்னு இருக்குறதுல சத்தெல்லாம் இல்லாம போயிடுதுங்ணா! நம்ம ரவிச்சந்திரன் அண்ணாமாறி உள்ள விவசாயிக கிட்ட ஒரு தடவ அரிசி உளுந்தெல்லாங் வாங்கி சாப்புட்டு பாருங்ணா! பொறவு இந்த கலைவாணி சொல்றது கரெக்ட்டுன்னு புரிஞ்சுபோடும்!

விற்பனை நுணுக்கம்...

மக்கள் தூய்மையான பொருட்களையே விரும்புகின்றனர், நாம் தூய்மையாகவும், தரமானதாகவும் பொருட்களை கொடுக்கும் போது அவர்கள் தாமாகவே முன்வந்து வாங்குகிறார்கள். எனது நிலத்திலேயே களம் அமைத்து தானியங்களை சுத்தம் செய்வதால், கல் மண் எதுவும் சேர்வதில்லை, விதைகளும் தூய்மையாக கலப்பில்லாமல் உள்ளது. பொருட்கள் தரமாக இருப்பதால் சராசரி விலையைவிட சற்று கூடுதலாக விலையிருந்தாலும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.

தொடர்ந்து இயற்கை விவசாய சாகுபடிமுறை பற்றியும் பகிர்ந்து கொண்டார்...

ஆலங்குடி பெருமாள் ஐயா முறையில் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே நெல் சாகுபடி செய்து வருகிறேன். நடவுக்கு 18 நாள் வயதுடைய நாற்றை தேர்வு செய்து நடுகிறேன், பாசன நீருடன் ஜீவாமிர்தம் 10-12 நாள்களுக்கு ஒருமுறை கொடுப்பதுடன், தேமோர் கரைசலை பூக்கும் மற்றும் பால்பிடிக்கும் காலங்களில் கொடுக்கிறேன்.

வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் ஆமணக்கு வைத்திருக்கிறேன், ஆடிப்பட்டத்தில் விதையை ஊன்றி விட்டால் தைமாதம் அறுவடைக்கு தயாராகிவிடும். ஆமணக்கின் நிழல் வரப்பில் விழுவதால் களைகளும், புற்களும் கட்டுப்படுகிறது, மேலும் ஆமணக்கு இலை விழுந்து மக்குவதால் அந்த சத்துக்களும் வயலில் சேர்கிறது.

பாரம்பரிய அரிசிகளால் பறந்துபோன நோய்கள்... ஒரு ஆசிரியரின் விவசாய அனுபவங்கள்!, parampariya arisigalal paranthupona noigal... oru asiriyarin vivasaya anubavangal

என்னென்ன இடுபொருட்களை பயன்படுத்துகிறீர்கள்?

இரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறி, தற்போது நிறைவான நிலையில் மகசூல் எடுக்கிறேன், இது சாத்தியமாக மூன்று ஆண்டுகள் பிடித்துள்ளது. ஜீவாமிர்தம் தயாரிக்க தொட்டி அமைத்துள்ளேன், இடுபொருள்களாக ஜீவாமிர்தம், மீன் அமிலம், தேமோர் கரைசல், அக்னி அஸ்திரம் போன்றவற்றுடன் முட்டை கரைசலையும் பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும் போதும் ஜீவாமிர்தமும் சேர்த்து விடுகிறேன்.

பறவைகளைக் கட்டுப்படுத்த முட்டைக்கரைசல்!

குருவிகள் பால்பிடித்த இளம்நெல்லை விரும்பி சாப்பிடும், அதனால் பயிரின் மகசூல் சற்றுக் குறையும். இந்த பறவைகளிடமிருந்து நெற்பயிரைக் காக்க முட்டைக் கரைசலைப் பயன்படுத்துகிறேன். இந்த முட்டை கரைசலின் மணம் பறவைகளுக்கு பிடிப்பதில்லை, அதனால் அவை பயிரை நெருங்குவதில்லை, தற்போது குருவிகளின் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. மயில்களாலும் எந்த தொல்லையும் இல்லை.

ஐயோ சாமி... எம்புட்டு வெகரமா செய்யுறாப்டி இந்த அண்ணா... பறவைகள் முட்டையிடுதுக ஆனா... அந்த முட்டை உடைஞ்சா அந்த வாசனை அதுகளுக்கு பிடிக்காம போயிடுதுங்க! இந்த இயற்கையில அல்லாத்துக்குமே தீர்வு இருக்குதுங்கோ! நாம தானுங்க தீர்வ தேடாம, இரசாயன விவசாயத்த பிடிச்சு தொங்கிக்கிட்டே இருக்குறோமுங்க. சீக்கிரமாவே இந்த நெலம மாறிப்போடுமுங்க!

முட்டைக் கரைசலை எவ்விதம் தயாரிப்பது?

ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் 5 முட்டைகளை வைத்து, முட்டை மூழ்கும் அளவுக்கு எலுமிச்சை சாறு விட வேண்டும், இதற்கு எட்டு பெரிய எலுமிச்சம் பழங்கள் தேவைப்படும். அதிக இருக்கமில்லாமல் அந்த டப்பாவை மூடி ஓரமாக வைத்துவிட வேண்டும். பத்து நாட்களுக்குள் முட்டையின் ஓடு முழுவதுமாக கரைந்து முட்டைக்கரைசல் உருவாகியிருக்கும், அந்த கரைசலை 10 லிட்டர் தண்ணீரில், 10 மி.லி மட்டும் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும். பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் வாரத்திற்கு இரண்டுமுறைகூட தெளிக்கலாம்.

தாங்கள் ஆசிரியராக இருப்பதால் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்ல முடிகிறதா?

எனது மாணவர்களுக்கு இயற்கை உணவுகளை பற்றி அவ்வப்போது கூறிவருகிறேன். நான் எடுத்துச் செல்லும் உணவுகளை மாணவர்களுடன் சேர்ந்து உண்ணும் போது, நாட்டுரக அரிசி சாதம் என்பதால் மாணவர்கள் அதைப்பற்றி பல கேள்விகள் கேட்பார்கள். இந்த சாதம் ஏன் சிவப்பாக இருக்கிறது? இந்த அரிசி ஏன் பெரிதாக இருக்கிறது? என்று கேள்வி கேட்கும் அவர்கள் சாப்பாட்டை சாப்பிட்டபின் சுவையாகவும் மணமாகவும் இருக்கிறது என்று கூறுவார்கள், அவர்களுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை குறித்து விளக்குவேன்.

மாணவர்களின் வீடுகளில் உள்ள செடிகளுக்கு இயற்கை உரங்களை எப்படி பயன்படுத்துவது என்றும் சொல்லித்தருகிறேன். சில மாணவர்கள் ஆர்வமுடன் செய்கிறார்கள், சிலரது வீட்டில் பெரியவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் எல்லா மாணவர்களாலும் கடைபிடிக்க முடியவில்லை.

நல்ல வித்தைய நாலுபேரு அறியச் சொல்லு, பொல்லா விஷயத்த நெருப்புல தள்ளுனு சொல்லுவாங்க இல்லீங்கோ?! அதுமாறி நமக்கு தெரிஞ்ச நாலு நல்ல விசயத்த மத்தவங்களுக்கும் சொல்லோணுமுங்க. அதுலயும் ஒரு ஆசிரியரா இருந்தோமுன்னா மாணவர்கள நல்வழிப்படுத்துறது ரொம்ப முக்கியமுங்ணா! அந்த விதத்துல நம்ம ரவிச்சந்திரன் அண்ணா ஒரு நல்ல ஆசிரியர்னு அடிச்சு சொல்றேனுங்க!

இயற்கை விவசாயத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு குடும்பத்தில் ஆதரவு இருக்கிறதா?

எனது வீட்டில் முதலில் இயற்கை விவசாயத்திற்கு எதிர்ப்பு இருந்தது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எனது உறவினருக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை உண்பதற்கு கொடுத்தேன்; அதை தொடர்ந்து உண்டுவந்ததினால் சர்க்கரைநோய் மற்றும் ரத்தஅழுத்தம் போன்றவை பெருமளவு குறைந்துள்ளது. இதை பார்த்த எனது குடும்பத்தினரும் இயற்கை உணவின் மகத்துவத்தை அறிந்தனர், தற்போது இயற்கை விவசாயத்தில் எனக்கு உதவியாகவும் இருக்கிறார்கள்.

புதிதாக இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

இயற்கை விவசாயம் செய்ய முனையும் பலர் இயற்கை விவசாய வகுப்புக்களுக்கு ஆர்வத்தின் காரணமாக செல்கிறார்கள், ஆனால் தெரிந்துகொண்டதை அவர்களது தோட்டத்தில் செய்து பார்ப்பதில்லை, செய்துபார்க்கும் போதுதான் அதன் செயல்முறை விஷயங்களை புரிந்து கொண்டு நுணுக்கங்களை கற்க முடியும்.

புதிய இயற்கை விவசாயிகளுக்கு ஈஷா நல்ல வழிகாட்டுதலாக இருக்கிறது. ஈஷா விவசாய இயக்கம் நடத்திய குழுக்கூட்டங்களில் கலந்துகொள்வதினால், இயற்கை விவசாயம் குறித்து பல அடிப்படை விஷயங்களையும், இடுபொருட்களைப் பற்றியும் பலவிஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. முக்கியமாக, ஜீவாமிர்தத்தை வெய்யிலிலேயே வைத்துவிடும் பழக்கம் எனக்கு இருந்தது, ஜீவாமிர்தத்தை நிழலில் வைக்காமல் சூரியஒளி படும் இடத்தில் வைத்தால் நுண்ணுயிர்கள் பெருகி வளராது என்பதை ஈஷாவின் கலந்தாய்வுக் கூட்டங்களில்தான் தெரிந்து கொண்டேன், தற்போது ஜீவாமிர்தத்தை சூரியஒளி படாதவாறு கீற்று கொட்டகையில் வைத்துள்ளேன், என்று அவரது அனுபவங்களை சொல்லி முடித்தார்.

பாரம்பரிய ரக அரிசியின் மகத்துவத்தை உணர்ந்ததோடு, பாரம்பரிய நெல் ரகங்களை பரவச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறிக்கொண்டு ஈஷா விவசாயக் குழுவினர் விடைபெற்றோம்.

தொடர்புக்கு:

திரு. ரவிச்சந்திரன் : 9443071965, 9445148660

தொகுப்பு:

ஈஷா விவசாய இயக்கம் : 8300093777