பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 30

விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்துவரும் இன்றைய சூழலில் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் அனுபவப் பகிர்வு நமக்கு ஆச்சரியத்தையும் உத்வேகத்தையும் அளிப்பதாய் உள்ளது. இது எப்படி சாத்தியமாகிறது... தெலுங்கானாவைச் சேர்ந்த இந்த விவசாயி சொல்லும் பல அரிய தகவல்களின் முதற்பகுதி இங்கே!

பலபயிர் சாகுபடி மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருவதுடன், ஒற்றை நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு 75 மூட்டை நெல் அறுவடை செய்து விவசாயிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு. நாகரத்தின நாயுடு அவர்களின் பண்ணையை ஈஷா விவசாயக் குழுவினர் பார்வையிட்டனர். சாதனை விவசாயியான நாகரத்தின நாயுடு அவர்களின் தகவல்கள் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் பயன்படக் கூடியதாக இருக்கிறது...

விவசாயத்தின் மீது ஆர்வம்

வேறு எந்தத் தொழில் செய்பவரும் தற்கொலை செய்து கொள்வதில்லை, விவசாயிகள் மட்டும் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? விவசாயிகள் ஒரே பயிரில் சிக்கிக் கொண்டதும் ஒரு காரணம்.

"நான் பரம்பரை விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்; ஆனா படிச்சது டிப்ளமோ எலக்ட்ரிக்கல்ஸ், சென்னையிலும் ஹைதராபாத்திலும் சில வருடங்கள் வேலை பார்த்தபின் விவசாயத்தில் மீண்டும் நாட்டம் ஏற்பட்டது, ஏதாவது சாதிக்கனும்னு ஒரு ஆர்வம் வந்தது."

"என்னிடம் இருந்த சிறிது பணத்தை வைத்து 1989ல் இந்த இடத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினேன். வேறு எந்த பணமும் கையில் இல்லை, விவசாயத்துக்காக எந்த கடனும் வாங்கவில்லை. வெறுங்கையோடுதான் இந்த இடத்திற்கு வந்தேன், இப்போது இருப்பதெல்லாம் இந்த மண் கொடுத்ததுதான்."

உழைப்பின் மூலம் உருவான தோட்டம்

"நீங்க பார்க்கிற இந்த மாதிரித் தோட்டம் நான் வாங்கும்போது வெறும் கல்லும் கறம்பையுமா இருந்த இடம், பனை மரங்கள் மட்டும்தான் இருந்தது. கிட்டத்தட்ட 365 லோடு அளவுக்கு கற்களையெல்லாம் தோண்டி எடுத்து வெளியேற்றினேன். பெரிய பாறைகளை ஆழமான குழி தோண்டி புதைத்தேன். மண் அடித்து நிலத்தை சமப்படுத்திய பிறகுதான் இந்த பூமியில் விவசாயம் செய்ய முடிஞ்சது."

"ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யத் தொடங்கி அதிலிருந்து வந்த வருமானத்தில் எல்லா நிலத்தையும் படிப்படியா சீர்படுத்தினேன். ஆரம்பத்தில் இருந்தே 100 சதவீதம் இயற்கை விவசாயம்தான். 2002ல் இருந்து ஒற்றை நாற்று நடவு முறையில்தான் நெல் சாகுபடி செய்கிறேன்." என்று அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு சாகுபடியைப் பற்றி பேசத் தொடங்கினார்.

“அட சாமி... பாத்தீங்ளாண்ணா?! நம்ம ஊர்ல ஒரு பாட்டு இருக்குமே... சிவாஜி கணேசன் பாடுவாப்டியே... ‘சும்மா கெடந்து நெலத்த கொத்தி, சோம்பலில்லாமல் ஏர்பிடிச்சு...’ அந்த பாட்டுல சொன்னமாறியே சும்மா கெடந்த கல்லும் மண்ணும் ரொம்பி இருக்குற நெலத்த அல்லாத்தையும் இந்த தெலுங்கானா அண்ணா மாதிரி சீர்படுத்தி புடலாமுங்க. அல்லாமே நம்ம கையில தானுங்க இருக்குது. அதுக்கு இந்த கள்ளிப்பட்டி கலைவாணி எப்பவோ ரெடி ஆயிட்டாங்க! நம்ம இளைஞர்கள் ரெடியா?”

பல பயிர் சாகுபடி

“வழக்கமா 3 ஏக்கரில் நெல் பயிர் செய்வேன், இந்த வருடம் தண்ணீர் போதலை. அதனால 2 ஏக்கர்தான் போட்டிருக்கேன், இது தவிர 2 ஏக்கரில் மா இருக்கு, 5 ஏக்கரை மேய்ச்சல் நிலமா விட்டிருக்கேன். மீதி உள்ள 7 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், கொய் மலர்கள் போன்றவற்றை சாகுபடி செய்கிறேன்.

சீதா, கொய்யா, சப்போட்டா, நோனி போன்ற பழமரங்களும் இருக்கு. நிலக்கடலை, சிறு தானியங்கள், பப்பாளி, வாழை, போன்ற பயிர்களையும் அவ்வப்போது பயிர் செய்கிறேன். வரப்போரத்தில் வேம்பு, புங்கன், அத்தி, கொடுக்காப்புளி போன்ற மரங்களை வைத்திருக்கிறேன்.”

பக்கத்தில் எங்கும் தென்னை மரங்களை பார்க்க முடியவில்லை. இவரது தோட்டத்தில் தென்னை மரங்களின் சிலு சிலு காற்றும் அடிக்கிறது. ஆங்காங்கே கொய்மலர்களை சாகுபடி செய்துள்ளார், மணத்திற்காக மட்டுமல்ல பணத்திற்காகவும்தான்.

மலர்சாகுபடி

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் - தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!, palapayir sahupadiyal vilaiyum nanmaigal - telangana vivasayi tharum nutpangal

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் - தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!, palapayir sahupadiyal vilaiyum nanmaigal - telangana vivasayi tharum nutpangal

"மலர்கள் அழகுக்கு அழகு பணத்திற்கு பணம்! மலர்களில் இருந்து தினசரி நல்ல வருமானம் வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வரவேற்பறையில் வைப்பதற்காக மலர்களை வாங்கிச் செல்கின்றனர், பூங்கொத்துகளாகவும் விற்கிறேன், தேவைப்படுவோருக்கு அலங்கார மலர்களை கட்டியும் தருகிறேன்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"இயற்கை முறையில் மலர்களை சாகுபடி செய்வதால் சீக்கிரம் வாடுவதில்லை, 5 நாட்களுக்குக்கூட வாடாமல் இருக்கும். அதனால் மலர் அலங்காரம் செய்பவர்கள் நல்ல விலைக்கு வாங்குகிறார்கள்."

உள்நாட்டு மலர்களையும், வெளி நாட்டு மலர்களை பசுமைக்குடில் எதையும் அமைக்காமல் சாதாரணமாகவே வளர்த்து வருகிறார், நன்றாக வளர்ந்துள்ளன.

"வசந்தம் என்று சொல்லப்படும் பேர்டு ஆப் பாரடைஸ், கிளாடியோலி, டெய்சி, கார்னேஷன்ஸ், லேடி லேஸ், அஸ்பராகஸ் போன்ற மலர்களும்; லில்லி வகையில் ஒற்றை லில்லி, இரட்டை லில்லி, புட்பால் லில்லி போன்றவையும்; இஞ்சி வகை பூக்களில் ஷவர் ஜிஞ்ஜர், ஷாம்பூ ஜிஞ்ஜர், டார்ச் ஜிஞ்ஜர், அழகு ஜிஞ்ஜர், சிவப்பு ஜிஞ்ஜர் போன்றவற்றையும் வைத்துள்ளேன்."

"மேலும் ஹெலிகோனியா வகைகளில் ஹெலிகோனியா கோல்ட், லேடி ஹெலிகோனியா, ஹெலிகோனியா ஹேங்கிங், ஹெலிகோனியா பிங்க் ஸ்டார், ஹெலிகோனியா ரெட் ஸ்டார், ஹெலிகோனியா பேட் போன்றவற்றையும் வைத்திருக்கிறேன். இது தவிர கேன்டி டப், ஜெர்பெரா, துஜா, ஜிப்சோபிலா, பூமாதுளை, சிவப்பு ரோஜா போன்ற மலர்களும் நன்றாக வளர்கின்றன."

“ஐயோ சாமி... பூவுலயே இத்தன வகை இருக்குதுங்களா?! கேக்கும்போதே நமக்கு வாசன தூக்குதுங்கணோவ்! அட கருவாடு வித்த காசு நாத்தமடிக்கவா செய்யும்ணு ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்லீங்கோ?! நம்ம அண்ணா பூ வித்த காசுல வாழ்க்கையே மணமா செஞ்சிப்போட்டாருங்க பாருங்க! அதுலயும் இயற்கை விவசாயத்துல செய்யும்போது பூவெல்லாம் சீக்கிரம் வாடிப்போகாம இருக்குதுன்னு சொல்லும்போது, இயற்கை விவசாயத்தோட மகிமை நல்லா புரியுதுங்கண்ணா!”

காய்கறிகள்

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் - தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!, palapayir sahupadiyal vilaiyum nanmaigal - telangana vivasayi tharum nutpangal

"வெண்டை, தக்காளி, கத்தரி, கொத்தவரங்காய், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் ஒவ்வொன்றையும் கால் ஏக்கர் என்ற அளவில் பயிர் செய்துள்ளேன். சுரை, புடலை, பாகல், பீர்க்கன் போன்ற கொடிக் காய்கறிகளையும்; புதினா, கொத்துமல்லி, சிறுகீரை, வெந்தயக் கீரை, புளிச்ச கீரை, பாலக்கீரை, கருவேப்பிலை போன்ற கீரை வகைகளையும் பயிர் செய்துள்ளேன்." காய்கறிகளை தனித்தனியாக பயிர் செய்துள்ளதோடு பழமரங்களுக்கு இடையில் ஊடுபயிராகவும் பயிர் செய்துள்ளார்.

பழ மரங்கள்

"என்னிடம் 30 ரகங்களில் மாமரங்கள் உள்ளது. இதில் சில ரகங்கள் இரண்டு பருவங்களில் காய்க்கக் கூடியவை. சீசன் இல்லாத நேரத்தில் காய்க்கும் மாமரங்களால் நல்ல வருமானம் கிடைக்கிறது. இயற்கை இடுபொருளைக் கொடுப்பதால் சப்போட்டா மரத்தின் பழங்கள் 400 கிராம் எடை இருக்கிறது. தற்போது நோனி மரங்களும் காய்ப்புக்கு வந்துள்ளது."

"மேலும் வரப்போரங்களில் முருங்கை, கொடுக்காப்புளி, அத்தி மரங்களை வைத்திருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு தேவையான காப்பி பொடி தயாரிக்கும் அளவுக்கு காப்பி மரங்களும் இருக்கின்றன, எனது தோட்டத்தில் விளைந்த ஆப்பிளையும் என்னால் சுவைக்க முடிகிறது."

இத்தனை வகைகளை எப்படி சேகரித்தீர்கள் என்று கேட்டதற்கு "நான் எங்கு சென்றாலும் அங்கு கிடைக்கும் செடிகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி வந்து நட்டுவிடுவேன்" பதிலளித்தார், அவரது பதிலில் செடிகளின் மேல் அவருக்கிருந்த ஈடுபாட்டினைக் காண முடிந்தது.

சில்லரை விற்பனை

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் - தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!, palapayir sahupadiyal vilaiyum nanmaigal - telangana vivasayi tharum nutpangal

"பண்ணையில் விளையும் பொருட்களை வீட்டுக்கு கொண்டுவந்து விடுவோம், வீட்டிலேயே விற்பனை... ஆன் லைன் மூலமாகவே என்னென்ன காய்கறிகள் தேவை என்று ஆர்டர் கொடுத்து விடுவார்கள், ஆர்டருக்கு ஏற்ப காய்கறிகளைப் பறிப்பேன், காய்கறிகளை 100 சதவீதம் இயற்கையாகவும், தரமானதாகவும் கொடுக்கும்போது நல்ல விலையும் கிடைக்கிறது. காய்கறிகள் அதிகமாகக் காய்க்கும்போது ஆர்கானிக் கடைகளுக்கும் கொடுக்கிறேன்."

“என்ற அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ, குரங்கு கையில் பூமால, நாய் வாயில தேங்காய்னு! அட ஆன் லைன்ல கேம் விளையாட நினைக்குறவங்க, இந்த மாதிரி உருப்படியா உபயோகப்படுத்த பழகோணுமுங்க! இயற்கை விவசாயம் பண்றவங்க நாகரத்தினம் அண்ணா மாதிரி ஆன்லைன் வர்த்தகமெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தா சௌகரியமா இருக்குமுங்க. சரிதானுங்ளே?!

நாட்டு மாடுகள்

"இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் அவசியம். என்னிடம் 2 கிர் மாடுகளுடன், 4 உள்ளூர் மாடுகள், 4 கன்று குட்டிகள் என மொத்தம் 10 மாடு இருக்கு. பாலை வீட்டிற்குக் கொண்டுவந்து ஒரு லிட்டர் ரூபாய் 80க்கு விற்கிறேன்."

அம்மாவின் தளராத உழைப்பு

பலபயிர் சாகுபடியால் விளையும் நன்மைகள் - தெலுங்கானா விவசாயி தரும் நுட்பங்கள்!, palapayir sahupadiyal vilaiyum nanmaigal - telangana vivasayi tharum nutpangal

"எனது அம்மாவிற்கு 93 வயதாகிறது, காலை 6.30 மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விடுவார்கள், மாலை 6 மணி வரை தோட்டத்தை கவனித்துக் கொள்கிறார்கள். காய்கறிகளை பறிப்பதிலும் அவைகளை வீட்டிற்குக் கொண்டு வருவதிலும் எங்கள் அம்மாவின் பங்கு அதிகம். தொடர்ந்து பல ஆண்டுகளாக இயற்கையான உணவு உண்பதால் தினந்தோறும் 60 கி.மீ பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் நலத்துடனும் இருக்கிறார். இயற்கை உணவின் மகத்துவத்திற்கு என் அம்மாவே சாட்சியாய் இருக்கிறார்."

இயற்கை விவசாயத்தின் அவசியம்

முதல் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு, வேலையில் இருந்து கொண்டே ஒரு பணியாளரை வயலில் வேலைக்கு வைத்துக்கொண்டு விவசாயம் பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையும் அனுபவமும் வந்தபின் வேலையை விட்டுவிட்டு முழுமூச்சாக விவசாயத்தில் இறங்கலாம்.

"எல்லா விவசாயிகளும் இயற்கை முறையில் உற்பத்தி செய்தால் இந்தியாவில் 120 கோடி பேருக்கும் இயற்கை உணவு கிடைக்கும். அதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் பெருவதோடு மருத்துவச் செலவுகளும் குறையும். மேலும் விவசாயிகளின் தோட்டம் இயற்கையான சூழ்நிலையில் இருந்தால் தொழிலாளர்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள், இதனால் 8 மணி நேரம் வேலை செய்யக்கூடிய ஒரு தொழிலாளி கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை செய்வார். எனது தோட்டத்திலும் அப்படி இயற்கையான சூழலை உருவாக்கியுள்ளேன்.

தற்போது காணப்படும் 75 சதவீத நோய்கள் உணவு முறைகளினால்தான் வருகிறது. இயற்கை விவசாயத்தினால் ஒவ்வொருவரும் ஆரோக்கியம் மற்றும் சுபிட்சத்தை பெறுவதோடு, பாதுகாப்பான சுற்றுச்சூழலும் இருக்கும். (National health security, National whealth secutity, National enviromental security) எனவே இயற்கை விவசாயத்தினால் விவசாயி நலமடைவதோடு நாடும் நலமடைகிறது."

விவசாயிகளுக்கு அறிவுரை

"வேறு எந்தத் தொழில் செய்பவரும் தற்கொலை செய்து கொள்வதில்லை, விவசாயிகள் மட்டும் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? விவசாயிகள் ஒரே பயிரில் சிக்கிக் கொண்டதும் ஒரு காரணம்.

ஒரு பயிரை நம்பி இருக்கும்போது, அதிக விளைச்சல் வந்தால் விலை கிடைப்பதில்லை, நல்ல விலை கிடைக்கும்போது அதிக விளைச்சல் இருப்பதில்லை, விளைச்சலை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்கவும் முடிவதில்லை. வாங்கிய கடனுக்காக கிடைத்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. ஏதாவது காரணங்களால் அந்தப் பயிரும் பாதிக்கப்பட்டால் விவசாயிக்கு பேரிழப்பு ஏற்படுகிறது.

ஒரு விவசாயி பல பயிர்களை சாகுபடி செய்யும்போது தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், வருட வருமானம் என பல வழிகளில் வருமானம் வரும். விவசாயி அவருக்குத் தேவையான விதைகளையும், அவருக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். எனது வீட்டிற்குத் தேவையான துடைப்பம் முதல் தேங்காய் எண்ணைய் வரை நானே உற்பத்தி செய்து கொள்கிறேன்."

விவசாயம் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும்.

"வேறு தொழிலில் உள்ளவர்களும், இளைஞர்களும் விவசாயம் செய்ய முன்வரவேண்டும். முதல் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு, வேலையில் இருந்து கொண்டே ஒரு பணியாளரை வயலில் வேலைக்கு வைத்துக்கொண்டு விவசாயம் பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையும் அனுபவமும் வந்தபின் வேலையை விட்டுவிட்டு முழுமூச்சாக விவசாயத்தில் இறங்கலாம். I.T. கம்பெனிகளில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதும் விவசாயத்தின் மூலம் 25 ஆயிரம் சம்பாதிப்பதும் ஒன்றுதான். நகரங்களில் வரவுக்கேற்ற செலவும் இருக்கும், ஆனால் விவசாயத்தில் நமக்குத் தேவையான உணவை நாமே தரமாக உற்பத்தி செய்து கொள்ள முடியும்."

பூமித்தாய்

"நிலத்திற்கு என்ன தேவையோ அதைமட்டும் நான் செய்கிறேன், நிலம்தான் தெய்வம் அது எல்லாவற்றையும் கொடுக்கிறது. இதில் நான் செய்தது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மண் சரியில்லை, நிலம் சரியில்லை என்று சொல்வதற்கு நமக்கு அதிகாரமில்லை, மண்ணில் நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொண்டாலே போதும்; மண்ணில் பொன் விளையும்.

ஒரு மரம் மனிதனை இவன் நல்லவன்; இவன் கெட்டவன் என்று பார்ப்பதில்லை, அது எல்லோருக்கும் தூய காற்றைத் தருகிறது. பயிர்களை நாம் எப்படி கவனித்துக் கொள்கிறோமோ அதுவும் நம்மை அப்படியே கவனித்துக் கொள்கிறது. நாம் தண்ணீர் கொடுத்தால் பூக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறது."

அடேங்கப்பா... தெலுங்கானா நாகரத்தினம் அண்ணா நெறைய நல்ல விசயம் சொல்லிப்போட்டாரு பாத்தீங்களா?! கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆசன்னு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! நமக்கு இயற்கை விவசாயத்துல விளைஞ்ச உணவ வாங்கி சாப்பிடணும்னு ஆச இருக்குதுங்க, ஆனா இளைஞர்கள் விவசாயத்துக்கு வர்றத ஊக்குவிக்க மனசு வரமாட்டுதுங்க. அதுனால நாம இளைஞர்கள்கிட்ட இயற்கை விவசாயத்துல இருக்குற பலன்கள எடுத்துச் சொல்லோணுமுங்க!

மாணவர்களுக்கு பயிற்சி

"மாணவர்களே எதிர்காலத் தூண்கள், அவர்கள் கையில் இயற்கை விவசாயத்தைக் கொண்டு சேர்க்க வேண்டியது விவசாயிகளின் கடமை. நிறைய மாணவர்கள் தொடர்ந்து எனது பண்ணைக்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள், ஆந்திர அரசாங்கம் இந்த சாகுபடி முறையை அங்கீகரித்து அதைப் பற்றி 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பாடமாக வைத்துள்ளது. ஆண்டுதோறும் 25 லட்சம் மாணவர்கள் இந்தப் பாடத்தை படிக்கிறார்கள்." தொடர்ந்து ஒன்றை நாற்று நடவு குறித்து பேசத் தொடங்கினார். அதைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

தொடர்புக்கு:
திரு. நாகரத்தின நாயுடு : 9440424463

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம் : 8300093777

ஒற்றை நாற்று நடவு! 70 முதல் 80 மூட்டை வரை அறுவடை! 75 கிலோ கொண்ட நெல் மூட்டை! அதிகபட்சமாக ஏக்கருக்கு 92 மூட்டை! எப்படி சாத்தியமானது! அடுத்த பதிவில்...