"காதல் திருமணங்களின் தோல்வி ஏன்? ஆணை ஏன் தெய்வமாக சொல்வதில்லை? சத்குரு எவ்வளவு பேருக்கு குருவாக இருக்கிறார்?" போன்ற கேள்விகளுக்கு இங்கே பதில் தருகிறார் சத்குரு...

Question: பல காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவது ஏன்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காதலர்களாக இருக்கிற காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த நேசத்தோடு பழகுகிறார்கள். பெற்றோர்களையும் எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. ஒருவரையொருவர் பயன்படுத்த நினைப்பதால் ஒரு காலத்தில் மிக அற்புதமான மனிதராக உங்கள் கண்களுக்குத் தெரிந்தவர் மிக மோசமான மனிதராக இப்போது தெரிகிறார். எந்தச் செயலை செய்தாலும் அதில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் முன்கூட்டியே யோசித்துப் பார்க்கிற மனிதராக நீங்கள் இருந்தால் இத்தகைய இடர்பாடுகள் ஏற்படாது.

பலரும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை குறித்து கேட்பதுண்டு. உள்நிலையில் மகிழ்ச்சியிருந்தால் அது வெளிப்படும். உங்களுக்குள் சில தன்மைகளை நிலைநிறுத்திக் கொண்டால்தான் உங்களால் ஆனந்தமாக இருக்க முடியும். எனவே உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்திநிலை ஆகியவற்றில் முழு ஆளுமை செலுத்தக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் இயல்பாக ஏற்படும். ஏனெனில் வெளியிலிருந்து நீங்கள் எதையும் பெறுவதில்லை. நீங்கள் வருத்தமாக இருக்கிறீர்களென்றால் அதற்கு மோசமான உறவு காரணமல்ல. அந்த உறவை நீங்கள் கொண்டு செலுத்துகிற விதம்தான் உங்கள் வருத்தத்திற்குக் காரணம்.

Question: பெண்ணை தெய்வம் என்கிறார்கள். ஏன் ஆணை சொல்வதில்லை?

சத்குரு:

பெண்ணை தெய்வம் என்று சொல்கிறார்களே தவிர அப்படி நடத்துகிறார்களா என்பதுதான் முக்கியம். நமது கலாச்சாரத்தில் எந்தெந்த உயிர்களுக்கெல்லாம் பாதுகாப்பு தேவைப்பட்டதோ அவற்றையெல்லாம் தெய்வம் என்று சொல்லிவிட்டார்கள். மரத்தை தெய்வம் என்றார்கள். பசுவை தெய்வம் என்றார்கள். பாம்பை தெய்வம் என்றார்கள். குழந்தையை தெய்வம் என்கிறார்கள். ஏனென்றால் இந்த உயிர்களுக்கெல்லாம் பாதுகாப்பு தேவைப்பட்டது. மனிதன் இவற்றை அழிப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் தயார் நிலையில் இருந்தான். உடல் வலிமையில் ஆண்களுக்கு பெண்கள் சம நிலையில் இல்லாததால் அவர்களையும் நம் கலாச்சாரத்தில் தெய்வம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் ஆண்களுக்கும், பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுவதால் ஆண்களையும் தெய்வம் என்று சொல்லி விடலாம்.

Question: எவ்வளவு பேருக்கு நீங்கள் குருவாக இருக்கிறீர்கள்?

சத்குரு:

மொத்த உலகிற்கும். சிலருக்கு அது தெரிந்திருக்கும். சிலருக்கு அது தெரியாது. எனவே ஒரு குரு என்றால் எல்லோரும் அவரைச் சுற்றி உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்க வேண்டும், அவர் செய்வதை கவனிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு ஷணநேரம் அவர்கள் திறந்த மனதோடு இருப்பார்களேயானால், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம். ஆனால் அந்த ஒரு கண நேர திறப்பிற்காக நாம் பலமணி நேரம் பலவற்றையும் பேசியாக வேண்டியுள்ளது.