சத்குரு:

உங்களைக் காட்டிலும் இன்னொன்றுக்கு முக்கியத்துவம் தரும் எண்ணம் உங்களுக்கிருந்தால், நீங்கள் தன்னார்வத் தொண்டராக மலர வாய்ப்பிருக்கிறது. உங்களைப் பற்றி அளவுக்கதிகமான அபிப்பிராயங்கள் உங்களுக்கிருந்தால் உங்களால் ஒரு தொண்டராக முடியாது. எனவே நீங்கள் ஒரு தொண்டரா? இல்லையா? என்பது எதைக் காட்டுகிறது தெரியுமா? நீங்கள் வாழ்க்கையின் இயல்புக்கு உட்பட்டவரா? எதிரானவரா? என்பதைத்தான்!

உங்களைக் காட்டிலும் இன்னொன்றுக்கு முக்கியத்துவம் தரும் எண்ணம் உங்களுக்கிருந்தால், நீங்கள் தன்னார்வத் தொண்டராக மலர வாய்ப்பிருக்கிறது.

எனவே நீங்கள் ஒரு நல்ல தொண்டராக உருவாக வேண்டுமென்றால், உங்களுக்கு விருப்பமில்லாத இடங்களில், உங்களுக்கு விருப்பமில்லாத வேலைகளைச் செய்ய நீங்கள் பணிக்கப்பட வேண்டும். உங்களால் சகிக்க முடியாத மனிதர்களுடன் நீங்கள் சேர்ந்து செயல்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். பிடிக்காத விஷயங்கள் என்பதே உங்கள் வாழ்வில் இல்லாமல் போனால் நீங்கள் ஒரு தொண்டர். நாம் அத்தனைக்கும் ஆசைப்படு என்பவர்கள். நமக்குப் பிடிக்காத விஷயங்கள் என்பதே கிடையாது.

இது வேண்டும், இது வேண்டாம் என்று கருதத் தொடங்கினால், நீங்கள் போராட்டங்களைச் சந்திப்பீர்கள். எப்போதெல்லாம் பேதம் பாராட்டுகிறீர்களோ, அப்போதெல்லாம் போராட்டங்களும், பிளவுகளும் நிறைந்த உலகை உருவாக்குகிறீர்கள்.

படைப்பு, பிரித்தறிய முடியாதது. படைக்கப்பட்ட எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிலேயே இருக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஐயத்திற்கு இடமின்றி இன்று நிரூபித்துள்ளது. உங்கள் மனதில் உருவாகும் பேதங்களின் அடிப்படையில் விருப்பு, வெறுப்பு, அன்பு, பகையுணர்வு என்று நீங்கள் பிளவுபடுத்திக் கொண்டே போனால் நீங்கள் படைப்புக்கும் படைத்தவருக்கும் எதிராக இயங்குவதாய்ப் பொருள். மாமரங்கள் சுவையான கனிகளை விளைவிக்கின்றன. அவற்றின் வேர்களோ அசுத்தமான தண்ணீரைக்கூட உறிஞ்சுகின்றன. இங்கு அசுத்தத்தை உறிஞ்சி அருமையான மணமும், அபாரமான சுவையும் உருவாகின்றனவே, இவற்றை எவ்வாறு பிரித்தறிவீர்கள்? இரண்டையும் கையாளும் முறையைத்தான் நீங்கள் அறிய வேண்டுமே தவிர, அசுத்தம், உணவு இரண்டையும் நீங்கள் பிரித்தாளக்கூடாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தர்க்க அறிவைத் தவறாகப் பயன்படுத்துவதன் விளைவு இது. பகுத்துப் பார்ப்பதற்காகப் பயன்படும் தர்க்க அறிவை, பிரித்துப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தியதால் விருப்பு, வெறுப்புகள் தோன்றின.

ஒவ்வொரு புதன்கிழமையும் மதிய உணவைத் துறந்து அதற்காகும் செலவை ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்கு ஒதுக்குவது என்கிற திட்டம் கூட அத்தகையதுதான்.

ஒரு தொண்டர், எப்போதும் சொர்க்கத்திலேயே இருப்பவர். ஏனென்றால், தான் செய்வதில் முழு உடன்பாட்டுடன், மனமொன்றிச் செய்கிறார். விருப்பமில்லாமல் எதைச் செய்தாலும் அது நரகம். விரும்பிச் செய்யும் எதுவும் சொர்க்கம். எனவே ஒரு தொண்டருக்குரிய மனப்பான்மை உங்களிடம் உருவாகாத பட்சத்தில், வாழ்வின் துன்பங்கள் உங்களைத் துரத்தும் அல்லது துன்பங்கள் குறித்த அச்சங்கள் உங்களைத் துரத்தும்.

சிலர் வாழ்வில் வெற்றிகரமாக வளரத் தொடங்கிவிட்டால், ஆழமான விருப்பு-வெறுப்புகளை உருவாக்கிக் கொள்வதுதான் தங்களின் ஆளுமைக்கு அடையாளம் என்று நினைக்கிறார்கள். விருப்பு வெறுப்புகளால் உங்கள் ஆளுமை உருவாகலாம். ஆனால் உங்கள் இருப்பு உணரப்படாமலேயே போய்விடும். ஒரு தொண்டருக்கு தன் ஆளுமையைத் தூக்கிச் சுமக்க அவசியமில்லை. அவரின் அற்புதமான இருப்பு உணரப்படும்.

அதனால்தான் வெற்றிகரமாகவும், வளமாகவும் வாழும் யாரும், வாழ்வில் சிறு தொந்தரவு ஏற்பட்டால் கூட நிலை குலைந்து விடுகிறார்கள். வாழ்வை மனம் போலப் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு படைப்பும், படைத்தவனும் எதிராகவே இயங்கும். அவர்கள் வாழ்வில் அருள் இருக்காது. முழு விழிப்புணர்வுடன் இருப்பதே தொண்டின் தன்மை. அப்போதுதான் அருள் உங்களைத் தொடும். இல்லையென்றால், பாத்திரத்திலேயே உள்ள கரண்டி, உணவின் சுவையை உணராததுபோல் வாழ்வை உணராமலேயே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

எவ்வளவு தொண்டு செய்கிறீர்கள் என்பதைவிட, தொண்டுக்கு எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறீர்கள் என்பதே முக்கியம். ஈஷாவில் அதற்கான வழிமுறைகள் பலவற்றை உருவாக்குகிறோம். ஒவ்வொரு புதன்கிழமையும் மதிய உணவைத் துறந்து அதற்காகும் செலவை ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்கு ஒதுக்குவது என்கிற திட்டம் கூட அத்தகையதுதான்.

எதிர்காலத்தில் தொண்டு நெறியின் தனித்தன்மை வெளிப்படும் விதமாய் ஈஷாவில் எத்தனையோ திட்டங்கள் உருவாகவுள்ளன. பேதமறியாத தொண்டுள்ளம் கொண்டவர்கள் தேவை.

ஈஷாவில் தன்னார்வத்தொண்டு பற்றி மேலும் விபரங்கள் அறிய:

தொலைபேசி: 83000 98777, 944 210 8000
இ-மெயில்: volunteering@ishafoundation.org
இணையம்: isha.sadhguru.org/volunteer