வாழ்க்கையில் மிகவும் நெருங்கிய நபர் இறந்துவிட்டால், பலருக்கும் வாழ்க்கையே வெறுமையாகிவிடுவதும், அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்கே பலகாலம் எடுப்பதும் நிதர்சனமான உண்மையே. இதே போல ஒரு நிகழ்வு சத்குருவின் வாழ்வில் நடந்ததையும், அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதையும் நம்முடன் இதில் பகிர்கிறார் சத்குரு...

சத்குரு:

மரணம் நிகழ்ந்த வீடுகளில் குழந்தைகளைக் கவனித்து இருக்கிறீர்களா? பெரியவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து சோர்ந்து உட்கார்ந்து இருந்தாலும், குழந்தைகள் இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். இன்றுவரை நானும் அப்படித்தான். என் மிகச் சிறிய வயதிலிருந்தே துக்கம் அனுஷ்டிப்பது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததே இல்லை.

என் வாழ்க்கைக்குப் பல விதங்களில் பங்களித்த ஒரு நபரை இழக்கும்போது, அவருடன் எனக்கு நேர்ந்த நல்லதை எல்லாம் நினைத்துப் பார்ப்பேன்.

சொந்தக்காரர்கள் யாராவது இறந்து போனால்கூட, எங்கள் வீட்டில் என்னைத் துக்கம் அனுஷ்டிக்கச் சொல்லிக் கட்டுப்படுத்த முடியாமல்தான் விட்டிருக்கிறார்கள். நம் கலாச்சாரத்தில், துக்கம் அனுஷ்டிப்பது என்ற வழக்கமே கிடையாது என்றுதான் சொல்வேன்.

என் வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருந்த ஓர் உறவு என் இணையாக இருந்த என் மனைவி. அவளின் மரணம் எனக்குப் பேரிழப்புதான். மறுக்கவில்லை. அதற்காகத் துக்கம் என்ற உணர்வை ஏன் கொண்டு வர வேண்டும்?

ஒருவேளை என் வாழ்க்கையில் இருந்த ஏதோ ஒரு பற்றாக்குறையை நிரப்புவதற்காக அவளைச் சேர்த்துக் கொண்டு இருந்தேன் என்றால், அவள் இறந்ததும் அந்த இடம் மறுபடி வெற்றிடமாகி இருக்கும். வருத்தம் மேலோங்கி இருக்கும்.

என் வாழ்க்கை அப்படி நடக்கவில்லை. அவள் வருவதற்கு முன்பும் என் வாழ்க்கையில் ஒரு முழுமை இருந்தது. திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பில் அவளை என் மனைவியாக்கிக் கொள்ளவில்லை.

உங்களிடம் எல்லாமே இருக்கலாம். இருந்தாலும் வேறு ஒருவர் உங்கள் வாழ்வில் புதிதாக ஒன்றைச் சேர்க்க முடியும். அதுதான் வாழ்க்கையின் அற்புதம். அப்படித்தானே விஜியும் என் வாழ்க்கையில் ஒரு புதிய கோணத்தைக் கொண்டு வந்தாள். வார்த்தைகளில் சொல்வதற்கு அரிய எத்தனையோ பங்களிப்புகளை அவள் வழங்கிவிட்டுச் சென்றதை எப்படி மறுக்க முடியும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திடீரென்று எதிர்பாராத தருணத்தில் இந்த உலகைவிட்டு அவள் நீங்கியபோது, அது எனக்குப் பேரிழப்பாகத்தான் இருந்தது. ஆனால், அதற்காக நான் துக்கப்படவில்லை. மாறாக, 12 வருடங்கள் அவள் காட்டிய அன்பை, பொழிந்த நேரத்தை நினைத்து நிறைவாகத்தான் உணர்ந்தேன். எனக்காகத் தன் வாழ்க்கையை அவள் எந்த விதத்தில் எல்லாம் அர்ப்பணித்தாள் என்பதை எண்ணி நெகிழ்ந்தேன்.

அவளுடைய இருப்பை எந்த அளவு நிறைவாக உணர்ந்தேனோ, அதே அளவு நிறைவை அவள் இவ்வுலகை நீத்த மேன்மையான விதத்திலும் அனுபவித்தேன். அவள் என் வாழ்வில் சேர்த்த அர்த்தங்களைப் பொக்கிஷங்களாகத்தான் இன்றும் கருதுகிறேன்.

குருவிடம் சீடன் கேட்டான், "ஆன்மீகத் தேடல் என்பதை அவரவர் தனியே தங்களுக்குள்தான் நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களே, பிறகு எதற்காக நாம் எல்லோரும் சேர்ந்திருக்க வேண்டும்?"

குரு சொன்னார், "தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், நிலம் வளமாக இருப்பதற்கும், புயல் வீசும்போது சமாளிப்பதற்கும் தனி மரத்தைவிடக் காடுதான் உகந்தது. ஆனால், ஒரு மரத்தை எது பலம் வாய்ந்ததாக வைத்திருக்கிறது? அதன் சொந்த வேர்கள்தான். அந்த வேர்களைக் கொண்டு இன்னொரு மரம் வளர முடியாது. ஒரே காரணத்துக்காகப் பலர் சேர்ந்திருப்பது ஒரு பலம் என்றாலும், அவரவர் தங்கள் வேர்களைக் கொண்டுதான் வளர முடியும்."

அப்படித்தான் வாழ்வை அணுகுகிறேன்.

என் குடும்பம் இன்றைக்கு லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு இருக்கிறது. என் வாழ்க்கையில் தரம் மேலும் சிறப்படைய, என்னைச் சுற்றி உள்ள பல லட்சம் பேர் ஏதோ ஒருவிதத்தில் பங்களித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அன்றாடம் ஏதோ ஓர் இழப்பு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. என் வாழ்க்கைக்குப் பல விதங்களில் பங்களித்த ஒரு நபரை இழக்கும்போது, அவருடன் எனக்கு நேர்ந்த நல்லதை எல்லாம் நினைத்துப் பார்ப்பேன். அவர் என் வாழ்வில் சேர்த்த அர்த்தங்களை நினைத்து நெகிழ்வேன். ஆனால் ஒருபோதும் மூலையில் உட்கார்ந்து துக்கப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டேன்.

ஒரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு விழா. மாலை விருந்துக்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

"இன்று பணியாளர்கள் மனம் திறந்து பேசலாம்" என்று சொன்னார், முதலாளி.

"எங்களுக்குக் கொடுக்கப்படும் சீருடை இன்னும் சிறப்பான துணியில் தைக்கப்பட்டு இருக்கலாம்" என்றார் ஒரு பணியாளர். "நிறுவனம் வழங்கும் மதிய உணவு இன்னும் சிறப்பாக இருக்கலாம்" என்றார் அடுத்தவர். ஒவ்வொரு பணியாளரும் நிறுவனத்தில் தங்களுக்கு என்னென்ன குறைகள் என்று பட்டியலிட்டார்கள்.

இறுதியில், மிக மூத்த பணியாளர் எழுந்தார். அங்கு ஒளிர்ந்து கொண்டு இருந்த வண்ண பல்புகளின் வரிசைகளைக் காட்டினார். "அந்த வரிசையில் ஒரு பல்வு எரியவில்லை. அதுதான் என் வருத்தம்" என்றார்.

சக பணியாளர்கள் அவரைக் குழப்பத்துடன் பார்த்தனர்.

வாழ்க்கை என்பது ஒருவிதப் பயணம். ஒவ்வோர் உயிரும் விழிப்பு உணர்வு இன்றியோ, விழிப்பு உணர்வுடனோ அந்தப் பயணத்தில் சில அடிகளைத் தாண்டிச் செல்கிறது. அவ்வளவுதான்.

"எரியும் ஆயிரம் பல்புகளைவிட, எரியாத ஒன்றிரண்டு பல்புகள் தரத் தவறிவிட்ட வெளிச்சம் பற்றி மட்டுமே பேசுவது எவ்வளவு அபத்தமாக உங்களுக்குத் தோன்றுகிறது? நமக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் பற்றி பேசாமல், இல்லாத ஒன்றின் குறையைப் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டு இருப்பதும் அப்படித்தான் இருக்கிறது" என்றார் அவர்.

உண்மைதான். அதேபோல், இல்லாமல் போன ஓர் உயிரை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டு இருந்தால், உங்களைச் சுற்றி இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கும் பல உயிர்களை நீங்கள் மதிக்கத் தவறியவர் ஆகிறீர்கள்.

அதற்காக இறந்த நபரை அலட்சியம் செய்யச் சொல்லவில்லை. இறந்தவரின் நினைவுகளை மதிக்கும் விதத்தில் சில விஷயங்களைத் தள்ளி வைப்பதும் தவறு அல்ல.

எங்கோ ஜாலியாக சுற்றுலா புறப்படத் திட்டமிட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்துவிடுகிறார். அந்தப் பயணத்தை ரத்து செய்யலாம். அவர் மீது நீங்கள் கொண்ட அன்பு காரணமாக, உங்கள் செயல் வேறுவிதமான மாறலாம். நானாக இருந்தால், வெளியே போகாமல், யாரையும் சந்திக்காமல், அமைதியாகத் தியானம் செய்து கொண்டு உட்கார்ந்திருப்பேன். அது துக்கம் அனுஷ்டிப்பது ஆகாது.

வாழ்க்கை என்பது ஒருவிதப் பயணம். ஒவ்வோர் உயிரும் விழிப்பு உணர்வு இன்றியோ, விழிப்பு உணர்வுடனோ அந்தப் பயணத்தில் சில அடிகளைத் தாண்டிச் செல்கிறது. அவ்வளவுதான்.

உங்கள் வாழ்க்கையைக் கொள்கைகள் மீதும், நியதிகளின் மீதும், வழக்கங்கள் மீதும் எழுப்பாதீர்கள். ஒரு கூட்டத்தின் நடுவே நடக்க வேண்டி இருந்தால், எவ்வளவு கவனத்துடன் ஒவ்வொருவரையும் தவிர்த்து நடப்பீர்கள். அதே அதீத கவனத்துடன் முழுமையான விழிப்பு உணர்வுடன், தெளிவான கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை நடத்துங்கள். இருப்பவர்களை மதியுங்கள். இல்லாது போன யாருக்காகவும் உங்கள் வாழ்க்கையைத் துக்கம் அனுஷ்டித்து வீணாக்குவதில் அர்த்தம் இல்லை!