இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு பற்றி பேசும் சத்குரு, அனைவரும் ஒன்றிணைந்து நேபாளத்திற்கு உதவுவோம் என்று வேண்டுகோளும் விடுக்கிறார்...

நேபாளம் - உலகின் பத்து உயரிய மலைச் சிகரங்களை தன்னகத்தே கொண்ட பூமி. பல யோகிகளாலும், ஞானிகளாலும் உயிரோட்டமுள்ள ஒரு தாந்த்ரீக உடலாக நிலைநிறுத்தப்பட்ட பூமி. முழு தேசத்தின் பூகோள அமைப்பே ஒரு உயிருள்ள உடல் போல், ஒரே உயிர் போல செயலாற்றும் விதமாக சக்தி மையங்கள் அங்கு உருவாக்கப்பட்டது. இந்த பரிமாணத்தை கிரகித்துக் கொள்ளும் விதமாக, தேசத்தின் உளவியல் அமைப்பே ஆன்மீக விடுதலையை நோக்கித்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் இங்கே நான் வந்து செல்வதால், என் இதயத்தில் இந்த நாடு ஒரு நெருக்கமான இடம் பிடித்துவிட்டது. சமீபத்தில், மூன்று வாரங்களுக்குள் இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஒரு பேரழிவுதான். இங்கே ஏற்பட்ட உயிர் சேதம் மட்டுமே இதயத்தை நொறுக்குவதாக இல்லை, பிரம்மாண்டமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலும் நிலநடுக்கம் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த இடங்களின் அறிவியல் அடிப்படையையும் அது சிதைத்துவிட்டது.

ஒரு அழகான, பழமையான நகரமான பக்தாபூரின் பெரும்பகுதி தரைமட்டமாகிவிட்டது. "பக்தாபூர்" என்றால் பக்தர்களின் நகரம் அல்லது பக்தியின் நகரம் என்று பொருள். ஒரு கணம் கூட தெய்வீகத்தின் இருப்பை நீங்கள் மறக்காமல் இருக்கும் படிதான் அந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு பார்த்தாலும், ஒவ்வொரு சிறு பயன்பாட்டுப் பொருள்கூட ஒரு கோவில் போலத்தான் உருவாக்கப்பட்டிருக்கும். தெருவில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மிக அற்புதமான அழகியல் இருப்பதை பார்க்க முடியும். இந்த உயிரோட்டமான நகரம், எந்தவொரு தடங்கலும் இல்லாமல் கடந்த 1100 வருடங்களாக மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரம், தற்போது இந்த இயற்கை பேரிடரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த நகரம் மறுபடியும் மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒன்று. பக்தாபூர் போன்ற பாரம்பரியம் மிக்க நகரங்களை மீண்டும் உருவாக்கமுடியாது. சர்வதேச நிறுவனங்கள், இந்த நேபாள அழகியலையும் மதிநுட்பத்தையும் மறுசீரமைப்பு செய்வார்கள் என நான் நம்புகிறேன்.

நம் பாரத தேசமும், நேபாளமும் அடிப்படையில் ஒரே கலாச்சாரம் கொண்டவை. அரசியல் எல்லைகள் வரையப்படும் வரையில், கலாச்சாரப் பிணைப்பிலும், அதன் முக்கியத்துவத்திலும் நேபாளம் என்றென்றும் பாரதத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இந்த பூமியில் உள்ள ஒரே "ஹிந்து" தேசம் இது ஒன்று மட்டும்தான், அதாவது இதன் கலாச்சாரம், நம்பிக்கை முறைகளைப் பொருத்து அல்லாமல், முக்தி தேடுதலை மையமாகக் கொண்டது. இந்த உண்மையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுணரப்பட்ட ஒரே நாடும் இதுதான். ஏன், இப்போதும்கூட, நேபாளத்தின் 98% மக்கள் முக்தியை தேடித்தான் கோவிலுக்குச் செல்கிறார்கள். ஆனால் இந்த ஒரு அம்சம் இந்தியாவில் தொலைந்து போய்விட்டது. ஏனென்றால், அந்நிய ஊடுருவல்கள், அறியாமை போன்றவற்றால் ஏற்பட்ட வெவ்வேறு விதமான விளைவுகள் நம்மை கோவிலுக்கு போகும்படி செய்துவிட்டது. நேபாளத்தின் அழகே, அவர்களின் அரசர்கள் அவர்களுக்கு அளித்த அதே உத்வேகத்துடன் அந்த மக்கள் இன்றும் இயங்குவதுதான். முழு தேசத்தையே ஒரு ஆன்மீக உடலாக மாற்றக்கூடிய பெரும் சாகசத்தை அந்த அரசர்கள் மக்களுக்கு அளித்தார்கள். நீங்கள் ஒரு ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, விலங்காக, பறவையாக - இப்படி எதுவாக இருந்தாலும் சரி, உங்களால் இந்த ஆன்மீக செயல்முறையிலிருந்து தப்பிக்க முடியாது. யார் கண்மூடி அசைவில்லாமல் அமர்ந்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு என்று இருக்கவில்லை. "அனைவரும் இதன் மூலம் பயன்பெற வேண்டும்" என்ற உச்சபட்ச கருணையின் வெளிப்பாடாகத்தான் இது இருந்தது.

வரும் ஆகஸ்ட் மாதம், கடந்த சில வருடங்களாக நாம் செய்து வருவதுபோல், "ஈஷா சேக்ரட் வாக்ஸ்" ன் (Sacred Walks) ஒரு பகுதியாக நாம் நேபாளத்திற்கு செல்லவிருக்கிறோம். 800 தியான அன்பர்களைக் கொண்ட எங்கள் குழு அங்கே பல நாட்கள் செலவிட திட்டமிட்டுள்ளது. பக்தாபூர், படான் மற்றும் லலித்பூர் ஆகியவை எங்கள் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக எப்போதும் இருந்து வந்துள்ளது. நேபாள மக்களுக்காக நாம் அனைவரும் இணைந்து உதவுவது முக்கியம். மேலும் இந்த பேரழிவிற்குப் பின், அவர்களின் நகரம், நாடு மற்றும் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வதும் முக்கியம். இரண்டு நிலநடுக்கங்களுக்கு பிறகும், வருங்காலத்தில் நடுக்கம் ஏற்படும் என்ற கணிப்புகளுக்குப் பிறகும் இந்த பயணத்திற்காக 800 தியான அன்பர்கள் பதிவு செய்திருப்பது ஆச்சரியம்தான். இதுதான் ஈஷாவின் உத்வேகம். இந்த "சேக்ரட் வாக்ஸ்" பயணத்தை நாங்கள் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் முடிப்போம். இது நேபாள மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால், சுற்றுலாதான் இந்த தேசத்தின் முக்கியமான அம்சம்.

நம் பாரத பிரதமர் நேபாள மக்களுக்காக உடனே நடவடிக்கை எடுத்தது மிகவும் அற்புதமாக உள்ளது. நம் இராணுவப் படையினர் மீட்புப் பணிகளில் காட்டும் துரிதமும், நம் அரசாங்கம் மின் விநியோகத்தை மறு ஆக்கம் செய்வதும் நெஞ்சைத் தொடுவதாக உள்ளன. இந்த பேரழிவை அடையாளம் கண்டு, கருணையுடன் உதவுமாறு நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நேபாளம் மற்றும் அதன் மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலும் ஆசிகளும். பல தலைமுறைகளாக நேபாள மக்கள் அவர்களின் துணிவுக்கும் விடாமுயற்சிக்கும் அறியப்பட்டவர்கள். அவர்கள் மீண்டெழுந்து, வளம் கொழித்து, எப்பொழுதும் இருந்து வந்ததுபோல் ஒரே உடலாக இயங்கட்டும்.

Love & Grace