ஈஷாவில் தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து தன்னார்வத் தொண்டர்களின் பகிர்தல்கள் நமக்கு பலவிதத்தில் உத்வேகம் தருவதாக அமைகின்றன. அந்த வகையில், இங்கே இன்னுமொரு அழகான பகிர்தல்...!

மகேஸ்வரி, சென்னை

சில வருடங்கள் முன், ஈஷா யோகா பயிற்சி முடித்தவுடன், ‘சத்குருவைப் பார்க்க முடியுமா’ என்று விசாரித்தேன். அடுத்த வாரத்திலேயே ஆசிரமத்தில் சத்குரு அவர்களே சத்சங்கம் நடத்த இருப்பதாகவும், விருப்பப்பட்டால் அதில் கலந்து கொள்ளுமாறும் எனக்கு சொன்னார்கள். சரி என்று காத்திருந்து அடுத்த வாரம் ஆசிரமம் சென்றேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அந்த இடத்தில் அப்படி என்ன சக்தியும் புத்துணர்ச்சியும் இருக்கிறது என்று தெரியவில்லை. அலாரம் அடிப்பதற்கு முன்பே உடல் தானாக எழுந்தது.

அடுத்த நாள் சத்சங்கம். அதில் கலந்துகொள்ள பெயர் பதிவு செய்ய வேண்டும். எனவே பதிவு செய்து கொள்ள இரவு 9 மணிக்கு சென்றேன். அப்போது சத்சங்கத்திற்காக சிறிது உதவி தேவைப்படுகிறது, செய்கிறீர்களா என்று கேட்டார்கள். இரவு சீக்கிரமே தூங்கினால்தான் அடுத்த நாள் சத்சங்கத்தின் போது நன்றாக தியானம் செய்ய முடியும் என்று ஏற்கனவே நினைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காமலே இப்போது வேலை வந்தது. விருப்பமில்லாமலே சரி என்றேன். கையில் காகிதங்களை கொடுத்து இப்படி அப்படி என்று குறிப்புகள் கொடுக்கப்பட்டு வேலை என் கையில் திணிக்கப்பட்டது.

சரி சீக்கிரம் முடித்துவிட்டு ஓடி விடலாம் என்று நினைத்துக் கொண்டே செய்தால் மணி 12 ஆகிவிட்டது. ‘நாளை காலை 3 மணிக்கே வந்துவிட வேண்டும், இந்த வேலையை உங்கள் பொறுப்பில் தான் விடுகிறேன்’ என்று ஒரு அக்கா சொன்னார். இப்படி நான் சரியாக தூங்கவில்லை என்றால் நான் சத்குரு முன்னால் சத்சங்கத்தில் தூங்கிவழியப் போகிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றுவிட்டேன்.

அந்த இடத்தில் அப்படி என்ன சக்தியும் புத்துணர்ச்சியும் இருக்கிறது என்று தெரியவில்லை. அலாரம் அடிப்பதற்கு முன்பே உடல் தானாக எழுந்தது. குளித்துவிட்டு அக்கா சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கு போய் பார்த்தால் மிகப் பெரிய அதிசயம் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. இரவு தன்னார்வத் தொண்டர்கள் சந்திப்பில் பார்த்த பலரும் தூங்கப் போகவே இல்லை. அப்படியே இரவு முழுக்க வேலை செய்து கொண்டிருந்தனர். இப்போது என்னை நினைத்து நான் மிகவும் வெட்கப்பட்டேன்.

காலை 6 மணிக்கு ஒரு அக்கா நான் கிளம்புகிறேன் என்று சொன்னார். நான் சரி இவர் இரவு முழுக்க தூங்கவே இல்லை. இப்போது போய் தூங்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டே என் வேலையை தொடர்ந்தேன். ஆனால் அந்த அக்கா தன் யோகப் பயிற்சிகளை முடித்துவிட்டு 8 மணிக்கெல்லாம் மீண்டும் திரும்பி வந்து மிகவும் குதூகலமாக வேலையில் இறங்கினார். இது போன்ற ஒரு சூழலை உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாது. யார் முகத்திலும் களைப்போ, வெறுப்போ, கோபமோ இல்லை.

எல்லோரும் சிரித்துக் கொண்டே ஒரு விளையாட்டு போல ஆனந்தமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். மெல்ல நான் என் உடல் என்ன சொல்கிறது என்று பார்த்தேன். நானும் மிகவும் ஆனந்தமாக புத்துணர்ச்சியுடன் இருந்தேன். சிறிதும் களைப்பில்லை. மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பிறகு சத்சங்கம் நடக்கும் இடத்திற்குச் சென்று எப்படியாவது சத்குருவை அருகில் பார்க்க வேண்டும் என்று முன் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டேன்.

சத்குரு வந்து சத்சங்கம் நடத்தினார். ஆன்மீகம், தியானம் போன்ற முன் முடிவுகளையெல்லாம் விட்டு விட்டு அவரது பேச்சில், நகைச்சுவையில், என்னை மறந்து சிரித்தேன். சத்சங்கம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒரு பாம்பு வந்துவிட்டது. உடனே பயத்தில் அனைவரும் ஓடப் பார்த்தனர். உடனே சத்குரு சொன்னார், “யாரும் ஓடக் கூடாது... அப்படியே உட்காருங்க, அவர் (பாம்பு) கடிச்சா பத்தாயிரம் பேரையும் கடிக்க மாட்டார், யாராவது ஒருத்தரைத்தான் கடிப்பார், அந்த ஒருத்தரை நாங்க பாத்துக்கறோம், நீங்க சும்மா அப்படியே உட்காருங்க!” அவர் சொன்னதும் மிகவும் ஆச்சரியமாய், அனைவரும் அமைதியாய் உட்கார்ந்து விட்டனர். இதைத் தவிர வேறு எந்த இடமாக இருந்தாலும் பத்தாயிரம் பேரும் ஒன்றாக எழுந்து ஒருவர் மேல் ஒருவர் மோதி நெரிசலில் மிகப் பெரிய விபரீதம் நடந்திருக்கும்!

அன்றிரவு சத்சங்கம் முடிந்ததும், சத்குருவைப் பிரிவது பல ஜென்மம் பழகிய ஒரு உயிரைப் பிரிவது போல இருந்தது. அன்று அங்கு நான் பார்த்த அனைவரும் மிகவும் ஆனந்தத்துடன் இருந்தனர். யாருக்கும் வீட்டிற்குச் செல்லவே மனதில்லை. இங்கு கைகளிலிருந்து விபூதி வரவழைப்பது, நிமிடத்தில் நோயைக் குணமாக்கிக் காண்பிப்பது போன்ற அமானுஷ்யங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கூட ஒருவர் முழுதாகத் தன்னை அர்ப்பணிக்கிறார். ஒவ்வொருவரும் புதிதாக சக்தி கிடைத்தது போல் உணர்கின்றனர். “அறிவாளி” என்று நினைத்துக் கொண்டிருக்கும் என்னைப்போல முட்டாள்களும்கூட மிதமிஞ்சிய சக்தியை உணர முடிந்தது.

சத்சங்கம் முடிந்ததும் ஈஷாவின் இசைக்கு அனைவரும் நடனமாடினர். ஆடுபவரை எல்லாம் பைத்தியம் என்று சொன்ன நானும் இப்போது ஆடாமல் இருக்க முடியவில்லை. ஆனந்தத்தால் உள்ளம் நிறைந்திருந்தால் ஆட்டம் தானாகவே வரும் போலும்! தினமும் பயிற்சிகள் செய்து அந்த ஆனந்தம் குறையாமல் பார்த்துக் கொள்கிறேன்.