ஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்கள்!!

ஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்கள்!!, oru malaiyaiye pasumaiyal porthiya thannarvathondargal

மலைகளில், குகைகளில் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்து வந்தார்கள். பல ஞானிகள் ஞானமடைந்தது கூட மரங்களின் கீழே அமர்ந்துதான்! இதை உணர்ந்துதானோ என்னவோ இந்த கிராமத்தின் தன்னார்வத் தொண்டர்கள் யோகாவுடன் சேர்ந்து பசுமையையும் வளர்த்து ஒரு வறண்ட மலையில் பசுமைப் போர்வை போர்த்தியுள்ளனர்! இந்த அற்புதம் நிகழ்ந்த மலை எங்கே… யார் செய்தது? அறிந்துகொள்ள தொடர்ந்து படித்தறியலாம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவிலுள்ள கருங்குழி கிராமத்திற்கு அருகில் உள்ள ஞானகிரி மலையில் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்துடன் சில தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நிகழ்த்திய ஒரு செயல் அந்த சுற்றுச்சூழலை பசுமை நிறையச் செய்துள்ளது! இந்த தன்னார்வத் தொண்டர்களின் பகிர்வு நமக்கு உத்வேகம் தரும் ஒன்றாய் அமைகிறது!

“இந்த மலையில ரங்கநாதர் கோயில் இருக்குது! மலை அடிவாரத்துல ஆஞ்சினேயர் கோயில் இருக்குது. நான் 2008ல் ஈஷா யோகா வகுப்பு செய்தேன். தொடர்ந்து சத்குருவோட உரைகள கேக்கும்போது சுற்றுச்சூழல் பத்தி அக்கறைய எனக்குள்ள விதைச்சது!” என பூரிப்புடன் பகிர்ந்துகொள்ளும் முருகன் தன் கிராமத்தில் ஈஷா வகுப்புகள் மேற்கொண்டுள்ள இன்னும் சில தன்னார்வத் தொண்டர்களான வெற்றி, கிருஷ்ணமூர்த்தி, செந்தில், ஜெயந்தி ஆகியோருடன் இணைந்து களையிழந்து காய்ந்திருந்த ஞானகிரி மலையை பசுமையாக்குவதென முடிவு செய்தனர். தினமும் காலை யோகப் பயிற்சியை சேர்ந்து செய்வதற்கு அந்த மலையில் காலை நேரத்தில் ஒன்று கூடிய இவர்கள், அந்த மலையில் யோகத்துடன் மரக்கன்றுகளையும் ஊன்றத் துவங்கினர்.

ஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்கள்!!, oru malaiyaiye pasumaiyal porthiya thannarvathondargal

முதற்கட்டமாக நடப்பட்ட 600 மரக்கன்றுகள்!

“ஒரு அறுநூறு மரக்கன்றுகளை முதல்ல வாங்கி, பள்ளம் எடுத்துட்டு அந்த அறுநூறு மரக்கன்னுகளை வச்சு நாங்க தண்ணி ஊத்திட்டு வந்தோம்! நாங்க பத்து பேரு சேந்து, குடங்கள்ல தண்ணி எடுத்துவந்து ஊத்த முடியாதுன்னு பிறகுதான் தெரிஞ்சுகிட்டோம்!” என்று கூறிய முருகன் பின்னர் பக்கத்திலிருந்த கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்ததை தெரிவித்தார்.

காலையில் 5:30 மணிக்கே ஞானகிரி மலையில் ஏறி யோகப்பயிற்சிகளை 7:30 மணிக்கு முடித்துக்கொண்டு, கீழிறங்கி வரும்போது மரக்கன்றுகளை தினமும் பராமரிக்கத் துவங்கியுள்ளனர் இந்த தன்னார்வத்தொண்டர்கள்.
600 மரக்கன்றுகளை தினமும் பராமரிக்க வேண்டுமே?! ஆளுக்கொரு பணியில் இருக்கும் இவர்கள் எப்படி தினமும் இதனை பராமரித்தனர்?

இதுகுறித்து செந்தில்குமார் சொல்லும்போது, “தினமும் காலையில டெய்லி வந்து மரக்கன்னுகளை பாக்கணும். அதுக்கு என்ன பண்ணணும்னு ஒரு முடிவு எடுத்தோம்! எல்லாரும் சேந்து காலையில அந்த இடத்திலேயே யோகா பண்ணுவோம்; அதுக்காக எப்படியும் அந்த இடத்துக்கு வருவோம், அந்த மரக்கன்னுகளையும் டெய்லி பார்ப்போம்! இதுதான் நாங்கள் எடுத்த முடிவு!”

காலையில் 5:30 மணிக்கே ஞானகிரி மலையில் ஏறி யோகப்பயிற்சிகளை 7:30 மணிக்கு முடித்துக்கொண்டு, கீழிறங்கி வரும்போது மரக்கன்றுகளை தினமும் பராமரிக்கத் துவங்கியுள்ளனர் இந்த தன்னார்வத்தொண்டர்கள்.

மரக்கன்றுகள் கடும்பாறையில் துளிர்த்த அனுபவம்!

கடும்பாறையான அந்த மலைகளில் அந்த மரக்கன்றுகள் துளிர்த்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்? திரு.கிருஷ்ணமூர்த்தி சிலாகித்து சொன்னது…

“இந்த மலைய பாத்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்! நடந்தாவே கல்லுதான் காலுல படும். இந்த கல்லுல போயி மரக்கன்றுகளையெல்லாம் வச்சிருக்கோமேன்னு முதல்ல கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது உண்மைதான்! ஆனா இந்த மலையிலயும் கூட சில மரங்கள் செழிப்பா வளர்ந்திருக்கிறத பாத்து நம்பிக்கை வந்தது!” என்று கூறிய அவர், பசுமைக் கரங்களுடன் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது, அவர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் தங்களுக்கு பக்க பலமாக இருந்ததாக கூறுகிறார். அதோடு சத்குருவின் உரைகளைக் கேட்கும்போது, அதில் வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லாமல், நடைமுறை சாத்தியங்களுக்கான வழிமுறைகளை வழங்கும் விதமாக இருப்பதாகவும் பகிர்ந்துகொண்டார். முதன்முதலில் அந்த 600 மரக்கன்றுகளும் துளிர்த்த காட்சியை பார்த்ததில் இருந்த ஆனந்தத்தை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை என்பதை பூரிப்புடன் கூறினார்.

ஒரு பெண்ணாக இந்த முயற்சியில் தங்களால் எப்படி பங்களிக்க முடிந்தது என்று ஜெயந்தி அவர்களிடம் கேட்டபோது, “பெண்களும் சேந்து இதில் செயல்செஞ்சா தான் சிறப்பா இருக்கும். இந்த மாதிரி கோயில்ல வந்து செய்யுறது கூடுதலா சந்தோசமா இருக்கு!” என்று சந்தோஷத்துடன் கூறிய ஜெயந்தி, தனது வீட்டின் மாடியில் மாடித் தோட்டம் போடுவது குறித்து யோசித்து வந்ததாகவும் தற்போது மலையின் மேலேயே ஒரு வனத்தை உருவாக்கும் பணியில் தான் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

என்னென்ன மரங்கள் எப்படி நடப்பட்டன?

சரி… இந்த 600 மரக்கன்றுகளில் என்னென்ன மரக்கன்றுகள் இருந்தன, எப்படி நடப்பட்டன, எனக் கேட்டபோது முருகன் பதிலளித்தார்.

“மரக்கன்றுகள நாங்க கலவையாதான் வாங்கினோம். மா, நாவல், அரச மரம், ஆலமரம், புங்கன், சொர்க்கம்… இந்த மாதிரி பரவலா வாங்குனோம். ஒரு தன்னார்வத் தொண்டருக்கு பறவைகள் மேல ஆர்வம் இருந்தது. அவர் பழ மரம் வச்சா கிளிகள் எல்லாம் வரும்ன்னு நாவல் மரங்கள் வச்சாரு. முறையா குழி வெட்டி, முதல்ல ஜேசிபி இல்லாமலேயே நாங்களே அறுநூறு மரக்கன்றுகளை நட்டுட்டோம். மரக்கன்றுகள் வாடக் கூடாதுங்கறதுக்காக பைப் லைன் போட்டுட்டோம்.”

இந்த 600 மரக்கன்றுகளும் நினைத்தபடி சிறப்பாக வளர்ந்ததை பார்த்ததும் அடுத்ததடுத்து
இவர்கள் மரக்கன்றுகளை வாங்கி நட்டு இந்த மலையையே தற்போது பசுமைப் போர்வை போர்த்தச் செய்துள்ளனர். இந்த செயலுக்கான செலவுகளை இவர்கள் அனைவரும் சேர்ந்து பகிர்ந்துகொள்கிறார்கள்.

முதலில் தாங்கள் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதன்பின்னர் இவர்களின் முயற்சியைப் பார்த்து அந்த கிராமத்து மக்களும் அருகிலிருக்கும் பள்ளியின் மாணவர்களும் இணைந்தனர். கூடவே வனத்துறையின் ஆதரவும் இவர்களின் செயலுக்கு பக்கபலமாய் கிடைத்தது!

ஒரு மலையையே பசுமையால் போர்த்திய தன்னார்வத் தொண்டர்கள்!!, oru malaiyaiye pasumaiyal porthiya thannarvathondargal

தடைகளும் இடர்பாடுகளும்!

அந்த கிராமத்திலிருந்த சுமார் 50 ஈஷா தன்னார்வத்தொண்டர்கள் இந்த செயலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, சில தடைகளும் இடர்பாடுகளும் வராமல் இல்லை! முதலில் இவர்கள் இந்த பணியை மேற்கொள்ள முயன்றபோது, அவர்கள் நிலங்களை ஆக்கிரமிக்க முயல்கிறார்களோ என மக்களிடம் இவர்கள் மீது ஒரு பார்வையிருந்தது! சில விஷமிகள் மது அருந்திவிட்டு பைப் லைன்களை அறுத்துவிடுவர். ஆடு மாடு மேய்ப்பவர்கள் தெரியாமல் மரக்கன்றுகளில் மேய விட்டுவிடுவர். ஆனால் இவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதால் வெற்றி வசப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரியைப் போலவே மாறியுள்ள ஞானகிரி…

நாங்கள் சேர்ந்து யோகா செய்வதற்கு இந்த மலைக்கு செல்வதைப் போலவே நாங்கள் வார இறுதி நாட்களையும் ஒன்றாக சேர்ந்து ஈஷா யோகா மையத்திற்கு பயணித்து சென்று மகிழ்வோம் எனக் கூறும் செந்தில் அண்ணாவும் பிற தன்னார்வத் தொண்டர்களும் தங்களது ஞானகிரி மலை இன்னொரு வெள்ளியங்கிரியாய் மாறியுள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர். வெள்ளியங்கிரி பல ஞானிகளும் யோகிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி என்றாலும், சில வருடங்களுக்கு முன் மரங்களின்றி வறண்டு இருந்தது. பின்னர் சத்குருவின் வழிகாட்டுதலின்படி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அங்கே விதைகளை ஊன்றி வைத்தனர். அதன்பின் வெள்ளியங்கிரி பசுமைப் போர்வை போர்த்திக்கொண்டது! அதைப் போலவே தாங்கள் தற்போது தங்கள் ஊரின் ஞானகிரி மலையை மாற்றியுள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.

இப்போது நடுப்பகல் 12 மணிக்கு ஞானகிரி மலையில் ஏறினாலும் கூட, புங்கன் மரங்களும் பிற மரங்களும் தரும் குளிச்சியால் உடலும் மனமும் குளிர்ந்துவிடுகிறது என்பது அவர்களின் அனுபவம் மட்டுமல்ல, அங்கு செல்பவர் அனைவரின் அனுபவமாக உள்ளது!

சத்குரு பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் மரங்களை மக்கள் மனங்களில் நட்டுள்ளார்!

குறிப்பு:

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம், விவசாயிகளை மரம்நட ஊக்குவிக்கிறது. உங்களுடைய மரம் எவ்விடத்தில் வளர்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஒரு மரத்திற்கு ரூ.100 வழங்குவதன் மூலம், அதன் பராமரிப்பு, தேவைப்பட்டால் மறுநடவு செய்தல் ஆகியவற்றோடு மரம் செழிப்புடன் வளர்வதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்! இதற்கான இணையப் பக்கம்: http://isha.co/2seVnIG
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert