பல சத்சங்கங்களில் பலர் தங்களுக்கு தெரிந்த கேள்விகளை சத்குருவிடம் கேட்கின்றனர். அது ஆன்மீகமாகட்டும் இல்லை சமூகம் சார்ந்ததாகட்டும், அதற்கான பதில் கேட்போரை தெளிவுபடுத்துவது நிச்சயம். அப்படி கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கான பதில்கள் இங்கே...

Question: ஓரினச் சேர்க்கைப் பழக்கம் ஒருவருடைய முன்வினைப் பயனால் ஏற்படுவதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இன்று இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரும் பெரும்பாலும் சமூகச் சூழ்நிலைவாதிகள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, உடல் ரீதியிலான தேவையாலோ அல்லது உள்நிலையிலான தேவை இருப்பதாலோ அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை என்று சொல்லலாம். குறிப்பிட்ட விதமான மனநிலையில் அவர்கள் இருப்பதால் இன்று இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது. இயற்கை விதிப்படி பார்த்தால், மனிதனுக்குள் ஏற்படும் இச்சை குழந்தைப் பேற்றிற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், பிள்ளைப் பேற்றுடன் வலியும் சேர்ந்து வருவதால், இயற்கை அதனுடன் சுகத்தையும் இணைத்தது. உடலளவில் ஒரு மனிதனுக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவனுக்கு வேண்டிய உதவியை நாம் செய்யலாம், ஆனால் இதுபோன்ற விஷயங்கள் சமூக காரணங்களுக்காக ஏற்பட்டு விடுகின்றன. நீங்கள் ஓரினச் சேர்க்கையாளரோ அல்லது ஈரினச் சேர்க்கையாளரோ, நீங்கள் இச்சையில் சிக்கிக் கொண்டிருந்தால் இரண்டும் ஒன்றுதான். அதனை நெறிபிறழ்வு என்றுதான் சொல்ல வேண்டும்.

Question: என் நண்பரின் மனைவி அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். பிறந்தபின் அது இறந்துவிட்டது. துர்மரணங்கள் ஏற்பட காரணமென்ன?

சத்குரு:

ஒரு தவளை 10, 15 ஆயிரம் முட்டைகளைப் போடலாம். அவற்றில் ஒரு 100, 200 முட்டைகள் மட்டுமே தவளைக் குஞ்சுகளாக மாறலாம். பிற குட்டிகளை வேறு மிருகங்கள் தின்றுவிடும் அல்லது சூழ்நிலை சரியில்லாமல் மடிந்துபோகும். இது இயற்கை. மீதியிருக்கும் குஞ்சுகள் வளர்வதற்குள்ளும் தாய் தவளை ரோட்டில் நசுங்கி செத்துப் போகும். இப்படிப் பல விஷயங்கள் நிகழத்தான் செய்கின்றன. இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் தனக்கு விதிக்கப்பட்டது படியே வாழ்ந்து போகின்றன. ஆனால், சற்றே அறிவு, பொருள் வசதி பெற்ற மனிதன் மட்டும் தன் வாழ்வை மாற்றியமைக்கப் பார்க்கிறான். அந்த குழந்தையை இழந்த பெற்றோருக்கு இது வருத்தமளிக்கும் விஷயம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இயற்கையின் செயல்பாட்டில் சில உற்பத்தி பிழைகள் நடந்தேறத்தான் செய்கின்றன. இது உடல்நிலையில் ஒரு மனிதருக்குள் நடக்கும் செயல்பாட்டு பிழையினால் என்றுதான் சொல்ல முடியும்.

Question: கவனக் குறைபாடு பிரச்சனையை சரிசெய்வது எப்படி?

சத்குரு:

பத்து வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் படமொன்றை பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்றும் அபிஷேக் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ ஐஸ்வர்யா பசுமையாய் நினைவில் இருக்கிறார் அல்லவா? அவரை நீங்கள் நேரில் பார்த்திருக்க வேண்டாம், படத்தில் மட்டுமே அவர் அதுபோல் காட்சி அளிக்கலாம், நிஜத்தில் தோற்றம் வேறுவிதமாய் இருக்கலாம். அப்படியொரு மனிதர் இல்லாமல் கூட போகலாம். ஆனால், நீங்கள் கண்ட அந்த திரைப்படம் இன்றும் நினைவில் நிற்பதில்லையா? எதனால்? அத்தனை கவனம் செலுத்தி அந்தப் படத்தை பார்த்திருக்கிறீர்கள். இன்றும் நிஜமாய் உங்களுக்குள் வாழுமளவிற்கு திரைப்படத்தை ஈடுபாட்டுடன் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் எதன்மேல் கவனம் செலுத்துகிறீர்களோ அது உயிர்பெறும். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் அதனுடன் ஒன்றிப் போய்விடுவதில்லையா? அவ்வளவுதான் சமாச்சாரம்.