நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.

சத்குரு:

ரமியான் ஆன ராமன்!

என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார்.

"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ரமியான் என்று சொன்னீர்களே, அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.

கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?

நான் திகைத்துவிட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.

"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்றுதானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.

"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர்தான் மாற்றச் சொன்னார்!"

பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு.

விஸ்கிதான் காரணம்

சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக் கலாட்டா செய்தார். நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்பட்டார்.

அவரிடம் நீதிபதி சலிப்பாக, "மறுபடி மறுபடியும் கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!" என்றார்.

உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவது உண்மைக் காரணம் தெரிந்திருக்கிறதே! என் மனைவி விஸ்கியைச் சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்படித்தான் சிலர், பழியை யார் மீது போடலாம் என்று அலைகிறார்கள்.

தோற்றுப் போனால், உடனே ஜாதகக் கட்டங்களையும், எண் ஜோசியத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதா?

உங்கள் கையாலாகாத்தனத்தை அவர்கள் அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்?

தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனமல்லவா?

எந்த எண் முக்கியம்?

என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.

அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?

"சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.

சிரித்தேன். "எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?" என்றேன்.

அவர் குழம்பினார்.

பின்பு போய், தனது ஜோசியரைக் கேட்டுக் கொண்டு வந்தார்.

"பதிவு எண்தான் முக்கியமாம்! ஆங்கில எழுத்துக்கெல்லாம் ஏதேதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிச் சொன்னார்" என்றார்.

ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ரூபாய் பணம் கொடுத்தார்.

பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை" என்றவர், குறைந்த அந்த ஒரு ரூபாய்க்குப் பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார்.

"இதெல்லாம் இருக்கட்டும். முதலில் காரை ஓட்டிப் பாருங்கள். நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியாக இருந்தால் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

தனக்கு ராசியான எண்தான் முக்கியம் என்று காரை கையோடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

ஒரே மாதம்தான்... அவர் அந்தக் காரை விற்றுவிட்டார்.

காரணம் என்ன தெரியுமா?

ஒருமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது, முன் இருக்கையின் ஸ்பிரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டதாம். ஏதோ அமானுஷ்ய சக்திதான் அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து, காரையே விற்றுவிட்டார்.

காரை எடுத்துக் கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண்.

முக்கியமாக, அவருடைய ராசி எண் அவரைக் கைவிட்டுவிட்டதே!

கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?

அவரைப் போல் எதற்கெடுத்ததாலும் ஆரூடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?

மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.

எதையோ செய்ய ஆசைப்பட்டு ஜோசியரிடம் போவீர்கள். வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத்திறமை காட்ட மாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று அவர் சொன்னாலும், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபட மாட்டீர்கள். பின் எதற்கு ஜோசியரிடம் போவது?

அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?

ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள். உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளத் துணியுங்கள்!