திருமணத்திற்கு பொருத்தம் பார்த்துப் பார்த்தே ஓய்ந்து போனவர்களின் பட்டியலில் உள்ளவரா நீங்கள்? திருமணத்திற்கு மனப் பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் பார்க்கும் இந்த சமூக அமைப்பு, தனி மனிதனுக்கு திருமணத் தேவை உள்ளதா என்பதை எந்த மீட்டரை கொண்டு அளக்கிறது? இத்தொடரின் முதல் பாகத்தில் திருமணம் தனிமனித தேர்வு என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறார் சத்குரு...

திருமணம் எதற்கு என்பதை முதலில் புரிந்துகொள்வோம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மனிதராய் பிறந்த எவருக்கும் சில தேவைகள் இருக்கின்றன. உங்களுக்கு எட்டு வயதாக இருந்தபோது, திருமணம் தேவையா எனக் கேட்டிருந்தால், இந்த கேள்விக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது.

உங்களுக்கு பதினான்கு வயதாக இருந்தபோது இந்த கேள்வியைக் கேட்டிருந்தால், சிறிது வெட்கப் பட்டிருப்பீர்கள், சற்று யோசித்தும் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் உங்கள் உடல் ஒருவிதமாக வளரத் தொடங்கியிருக்கும், ஹார்மோன்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பாதிக்கத் துவங்கியிருக்கும். அதனால் சிறிது யோசித்திருப்பீர்கள். பதினெட்டு வயதில் கேட்டிருந்தால்? பதினாலு வயதிலிருந்து பதினெட்டு வரை நடந்ததைக் கொண்டு தெளிவாக, "எனக்கு வேண்டும்," "வேண்டாம்," "இப்பொழுது தேவையில்ல்லை," அல்லது "எப்பொழுதுமே இல்லை" என்று பதில் அளித்திருப்பீர்கள்.

எனக்குத் திருமணம் தேவையா?" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது. நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கவில்லை, உங்கள் பெற்றோரும் கேட்கவில்லை, நீங்களே உங்களைக் கேட்க வேண்டும்.

சுதந்திரம் பற்றி சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் சில இடங்களில் நிலவுகிறது. அவர்கள் திருமணத்தை எதிர்மறையானதாக நினைக்கிறார்கள். சில சமூகங்களில் இளைஞர்கள் திருமணத்தை தவறான செயலாகப் பார்க்கிறார்கள். இளமையில் உங்கள் உடல் செயல்படும் விதத்தால், அச்சமயத்தில் நீங்கள் திருமணத்தை எதிர்க்கிறீர்கள். இவ்வயதில் திருமணம் ஒரு கட்டுப்பாடாக, உங்களைப் பிணைக்கும் சங்கிலியாகத் தோன்றுகிறது. உங்கள் உடல் மெல்ல பலவீனமடையத் துவங்கும் காலத்தில் சேர்ந்து வாழ 'எனக்கொரு துணைக் கிடைக்காதா' என ஏங்குகிறீர்கள்.

"நான் நல்லபடியாக உள்ளபோது யாரும் தேவையில்லை, பலவீனம் அடையும்போது துணைக்கு யாராவது தேவை" என்பது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை. உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்போதே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். நீங்கள் வீழ்ச்சியில் இருக்கும்போது தவறான துணையைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். கட்டாயத்தின் பேரில் தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் சிறப்பாக இருக்கும்போது, நல்வாழ்வின் உச்சத்தைத் தொட்டிருக்கும்போது, உங்கள் துணையைத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் அவ்வுறவு உங்களுக்கு துணை நிற்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இத்தனை நிலைகளையும் தாண்டின பின், "எனக்குத் திருமணம் தேவையா?" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது. நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கவில்லை, உங்கள் பெற்றோரும் கேட்கவில்லை, நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனாய் உங்களுக்கு உடல் நிலையில், உணர்ச்சி நிலையில், மன நிலையில், சமூக நிலையில், பொருள் நிலையில் தேவைகள் உள்ளன.

பலவகையில் இன்றைய சமூக சூழ்நிலை பெண்களுக்குத் தோதாய் அமைந்திருக்கிறது. சமூக சூழ்நிலைக்காகவோ, பொருளாதாரத் தேவைக்காகவோ கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணுக்கு அவசியம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தேர்ந்தெடுப்பது அவள் கையில் இருக்கிறது. இன்று ஒரு பெண் தன்னுடைய பொருளாதார நிலையையும், சமூக நிலையையும் அவளே பார்த்துக் கொள்ள முடியும். 100 வருடங்களுக்கு முன்னர் சூழ்நிலை இப்படி இருக்கவில்லை. இதுவே ஒருவகையில் சுதந்திரம்தான். நீங்கள் கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய சமூக மற்றும் பெருளாதார கட்டாயங்கள் இனி உங்களுக்கு இல்லை. உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி நிலையிலுள்ள தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டால்போதும்.

நீங்கள் ஒரு ஆணோ பெண்ணோ, வாழ்வில் உங்களுக்கு மனோரீதியாக துணை தேவையா?

உணர்வுரீதியாக துணை தேவையா?

உடலளவில் உங்களுக்கு தேவைகள் எவ்வளவு வலிமையாக உள்ளது?

இக்கேள்விகளை, நீங்கள் தனிமனிதனாக உங்களுக்குள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சமூகத்தில் அனைவருமே திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்றோ, யாருமே திருமணம் செய்து கொள்ளத் தேவையில்லை என்றோ நாம் மொத்தமாக ஒரு நியதியை உருவாக்க இயலாது.

இது நீங்கள் சுலபமாக கடந்து போகும்படியான தேவையா? இக்கேள்விக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் சொன்னால், நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே நான் சொல்வேன். அதையும் மீறித் திருமணம் செய்துக் கொண்டால் திருமணம் பந்தத்தில் ஈடுபடும் அந்த இருவர் மட்டுமில்லாமல் குடும்பம் முழுவதுமே அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். திருமணம் தவறானதென்று நான் சொல்லவில்லை. ஆனால் திருமணம் உங்களுக்கு தேவையா என்பதே என் கேள்வி. இதை சமூக நியமங்களின்படி யோசிக்காமல் ஓவ்வொரு தனிமனிதனும் ஆணோ, பெண்ணோ - இது தனக்குத் தேவையா என்பதைப் பார்க்கவேண்டும்.

சரி, திருமணம் தனிமனித தேர்வு என்று பார்த்தோம், ஆனால் எனக்கு திருமணம் தேவையா, இல்லையா என்பதை எதை வைத்து தீர்மானிப்பது? அடுத்த வாரம் வரை காத்திருங்கள், விடைச் சொல்லும் இரண்டாம் பகுதி விரைவில் உங்களுக்காக