சாப்பாடு, உணவு, திண்பண்டம், பலகாரம், பதார்த்தம்... இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலருக்கு பசியெடுக்கிறது. சிலர் உழைப்பதால் பசிக்கிறது. சிலருக்கோ சும்மா இருந்தாலும் பசிக்கிறது. சிலருக்கு பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாப்பிடுவது பழக்கமாகி விட்டது. எது எப்படியோ... 'உணவு' நாம் உயிர் வாழ முக்கியமான காரணி. 'எதைச் சாப்பிடுவது? எப்படி சாப்பிடுவது?' தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா?! இத்தொடரில் உன்னதமான சில உணவுகளைப் பற்றிய தகவல்களை வாரா வாரம் பதிய உள்ளோம். அறிந்து உண்ணுங்கள்...

எதை நாம் உண்ணலாம், எதைத் தவிர்க்க வேண்டும்?

நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையின் தன்மை அப்படித்தான் இருக்கிறது. தாவரங்களின் தன்மையைவிட விலங்கின் தன்மை மனிதனுக்கு நெருக்கமாய் இருப்பதால்தான், விலங்குகளைத் துன்புறுத்துவதை ‘அஹிம்சை’ என்றும் கருதுகிறோம். ஏனெனில் விலங்குகள் நம்மைப் போல் வாழ்கின்றன. நீங்கள் என் கையை அறுத்தால் ரத்தம் வருகிறது. ஒரு கோழிக்குஞ்சை அறுத்தாலும் ரத்தம் வருகிறது. எனவேதான் நாம் விலங்கின் தன்மைக்கு நெருக்கமாய் இருப்பதாகக் கருதிக்கொள்கிறோம்.

உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் விலங்கு, தாவரம் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும்.

இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றி உணர்வுடன் சாப்பிடலாம்.

உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றி உணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம், நன்றி உணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றி உணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான் - நன்றி.

வெள்ளைப் பூசணி!

வெள்ளைப் பூசணிக்காயில் உள்ள கொள்ளை ஆரோக்கியம்!

புதுவீடு கட்டினால் வாசலில் வெள்ளைப் பூசணியை தொங்கவிடுவது வெறும் சாஸ்திரம் அல்ல. அதில் உள்ள அதிக பிராண சக்தி புது இடங்களில் ஏதேனும் எதிர்மறை சக்தி இருந்தால் அவற்றைக் கரைத்துவிடுகிற சக்தி வாய்ந்தது.

இதைச் சாப்பிடுவதால் வருகிற பலன்களோ ஏராளம். பூசணிக்காய் சாறு, ஓர் அற்புதம். இதைப் பருகுவதால் நாள் முழுதும் சக்தியும் உற்சாகமும் கிடைக்கும். உடலுக்கு இது தரும் குளிர்ச்சியால், உஷ்ணத்தால் வரும் பல நோய்களைத் தடுக்க முடியும். மூளையை விழிப்பாக வைக்கவும் இது உதவுகிறது. ஒரு வாரம் தினமும் காலையில் பூசணிக்காய் சாறு அருந்தி வந்தால், அதன் ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம்.

இந்த சாறுடன் எலுமிச்சையும் தேனும் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைக் கொடுப்பதால், ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் சாறுடன் குளிர்ச்சியைச் சமன்செய்ய மிளகு, தேன் போன்ற உஷ்ணம் சேர்க்கும் பொருள் சேர்த்து உட்கொள்ளலாம்.

இப்படி அகமும் புறமும் ஆரோக்கியம் சேர்க்கும் வெள்ளைப் பூசணிக்காய், நமக்குக் கிடைத்த அருமருந்து!

அடுத்த வாரம்...

'தேன்' பற்றிய சில அரிய தகவல்கள் இடம்பெறுகின்றன. 'தேனை எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக் கூடாது?' தெரிந்துகொள்ள காத்திருங்கள்...!

நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்