இந்த வார சத்குரு ஸ்பாட்டில் இத்தனை பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும் சென்னை தன் நெஞ்சுரத்தால் உயர்ந்து நிற்பதைப் பற்றி எழுதியிருக்கும் சத்குரு அவர்கள், இந்தப் பேரழிவின் போது ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் தன்னலமில்லா செயலுக்கு நன்றி வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களை பார்க்க சென்னை செல்வதாகவும் சொல்கிறார்... படித்து மகிழுங்கள்!

பாரீஸ் நகரில் சுற்றுச்சூழல் மாநாடு நடந்து கொண்டிருந்தபோது, புவியின் தட்பவெட்பநிலை மாற்றத்திற்கு காரணமாய் இருக்கும் தேசங்கள், கரியமில கழிவுகளை அதிகமாய் கக்கிக்கொண்டிருக்கும் தேசங்கள், ஒரு இந்தியனின் தனிநபர் சராசரி கார்பன் கால்தடம் குறைந்த அளவில் இருந்தும், இந்தியா தன் வளர்ச்சியை கடிவாளமிட்டு அடக்க வேண்டுமென காட்டமாய் பேரம்பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நகரமைப்பு முறையை பொருத்தவரையில், திட்டமிடப்படாத ஒரு நகரமாக சென்னை இருப்பது நிலைமையை சிக்கலாக்கி மக்களுக்கு விவரிக்க இயலா பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தவொரு நிர்வாகமும் இதுபோன்ற ஒரு வெள்ளப்பெருக்கினைக் கையாளும் அளவிற்கு தயார்நிலையில் இருக்காது, ஆனால் மக்களுக்கு ஏற்படும் துயரினைக் குறைக்க முடியும்.

சென்னையல்லாத பிற நகரவாசிகள் இதில் அளப்பரிய பங்காற்றியுள்ளனர். இத்தகைய சூழலில் சென்னையின் நெஞ்சுரம் உயர்ந்து நிற்கிறது. இடைவிடாது பெய்த மழை சில உயிர்களை எடுத்துக் கொண்டது, பல உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டது. இதயத்தை உருக்கும் பல கதைகள், இன்னும் பல காலத்திற்கு சென்னை மக்களின் நினைவலைகளில் வாழப்போகிறது. வீடுகள் உடைந்திருக்கின்றன, வியாபாரங்கள் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் தமிழ் மக்களின் ஊக்கம், உத்வேகம் அவர்களை நிலைநிறுத்தியிருக்கிறது. கருணையின் வெளிப்பாடாய் நிகழ்ந்த செயல்கள், மனஉரத்தின் வெளிப்பாடாய் இன்னும் பல நிகழ்வுகள் - இவை நமக்கு ஊக்கமளிப்பதாகவும், மனிதபந்தத்தின் மேலுள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பதாகவும் விளங்குகின்றன.

தங்கள் சுயநலமில்லா செயல்பாட்டின் தனித்தன்மையினால் உலகளவில் அறியப்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் வற்றியவுடன் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் வண்ணம் ஈஷா 50 இலவச மருத்துவ மையங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்று, அளவிலா துன்பத்தில் உழலும் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அனைத்து ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் நேர்மை உணர்வை வெளிப்படுத்தி, உள்ளார்ந்த பார்வையுடன் உதவ வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் உங்களுடன் இருக்கிறேன். உங்கள் சேவைக்கு, உங்கள் தியாகத்திற்கு நன்றி வெளிப்படுத்தும் வகையில் வரும் வாரம் நான் சென்னைக்கு வருகிறேன்.

மிகுந்த அன்புடனும் ஆசிகளுடனும்,
சத்குரு