Question: நான் ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக சமீபத்தில் இணைந்தேன். இப்பணிக்காக நான் தொழில் ரீதியாக பயிற்சி பெற்றிருக்கிறேன். என் சந்தேகம் என்னவென்றால் என் பணியிடத்தில் நான் ஒரு புத்தர் போல் நடந்துகொண்டால், பணியாளர்களிடம் நான் வேலை வாங்க முடியாது என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு நிலையில் நான் கோபத்தை ஒரு ஆயுதமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

யாரோ ஒருவர், ஒரு செயலை, எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் செய்யும்போதுதான் அவரை "தொழில்ரீதியாக பயிற்சி பெற்றவர் அல்லது நிபுணத்துவம் பெற்றவர் (professional) என்று குறிப்பிடுவோம். ஒருவர் எதில் பயிற்சி பெற்றாரோ அதை அப்படியே செய்யும்போது, அதில் கோபப்படுவதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது? "அவரின் அணுகுமுறை தொழில்ரீதியானது" என்று ஒருவரைப் பற்றி சொல்லும்போது, பொதுவாக, எதற்காகவும் அவர் உணர்ச்சிவசப்படாமல், எது தேவையோ அதை மட்டும் செய்கிறார் என்றுதானே அர்த்தம்?

நீங்கள் செய்யும் செயல்களை மிகுந்த விருப்பத்துடன் செய்வதை உங்களைச் சுற்றியிருப்பவர்கள் பார்த்தால், அவர்களும் ஏன் அதில் பங்கேற்காமல் இருக்கப் போகிறார்கள்?

ஒரு நிபுணராக பணியாற்றுவதை விட நிபுணத்துவம் இல்லாமல், ஆர்வத்தினால் (amateur) பணி செய்வதே நல்லது. பொதுவாக 'அமெச்சூர்' என்று யாரையாவது குறிப்பிடும்போது, உண்மையில் அவருக்கு ஒரு செயலை தகுந்த முறையில் செய்யத் தெரியாது என்பதைத்தான் நாம் அப்படிக் குறிப்பிடுகிறோம். அடிப்படையே தெரியாமல், ஒரு வேலையில் ஈடுபடும் கற்றுக்குட்டிகளைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. தொழில்ரீதியான நிபுணத்துவம் பெறாமல் ஆர்வம் காரணமாகப் பணியாற்றுபவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். நிபுணத்துவம் இல்லாதவர் விருப்பம் காரணமாக அந்த விஷயங்களில் ஈடுபடுகிறார், தான் செய்யும் செயல்களில் ஒரு அர்த்தத்தைக் காண்கிறார். ஒரு நிபுணர் அல்லது தொழில் வல்லுனர், தான் செய்பவற்றில் பெரிய அர்த்தங்கள் எதையும் காண்பதில்லை. ஏதோ ஒன்றைச் செய்தால், அதிலிருந்து ஏதோ ஒன்று நிகழும் என்றுதான் பார்க்கிறார். அது போன்ற வாழ்க்கை மிகவும் வறட்சியானது. நீங்கள் செய்யும் செயலில் ஈடுபாடு இல்லாவிட்டால், அந்த செயல் உங்களுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்காவிட்டால், அப்படிப்பட்ட வேலை, உங்களுடைய, உங்களைச் சுற்றியிருப்பவர்களுடைய நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கும் செயல்தான்.

குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்வதனால் மட்டும் ஈடுபாடு வந்துவிடாது. ஈடுபாடு இருந்தால், சில விஷயங்கள் தானாகவே உங்களிடமிருந்து வெளிப்படும் - அது மிகவும் அழகானது. அதே வேலையை நீங்கள் ஈடுபாடு இல்லாமல் செய்தால், அது அசிங்கமாகத்தான் இருக்கும், இல்லையா?

நீங்கள் அமெச்சூராக இருந்தால், அது பரவாயில்லை. அதுவே நீங்கள் ஒரு தொழில்முறை நிபுணராக இயங்கினால், உங்கள் வாழ்க்கை அசிங்கமானதாக இருக்கும். ஆனால் நீங்கள் இந்த உலகில் ஒரு தன்னார்வத் தொண்டராக இருந்தால், அது மிகவும் அற்புதமானது. எதைச் செய்ய வேண்டுமோ அதை மிகுந்த விருப்பத்துடன் செய்யும்போது, அது மிகவும் அற்புதமானதாக இருக்கும். அந்த செயலின் முடிவு என்ன, யாரெல்லாம் இருக்கிறார்கள், யார் உங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள், யார் தொல்லை தருகிறார்கள் - எதுவும் அப்போது ஒரு பொருட்டாக இருக்காது. நீங்கள் செய்பவை எல்லாம் மிகுந்த ஈடுபாட்டோடு செய்யப்படுவதால், அவை அத்தனையுமே மிக அழகானதாகவே இருக்கும்.

எனவே உங்களுக்கு இப்போது இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், நீங்கள் ஒரு தொழில்ரீதியான நிபுணர். இன்னொன்று, உங்களுக்கு இருக்கும் கோபம். உங்களுக்கு கோபம் எதனால் வருகிறது? நீங்கள் எதையாவது சொல்லும்போது மக்கள் அதை சட்டை செய்வதில்லை, அப்படித்தானே? நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டுமென்றால், அதற்கு உங்களிடமிருந்து ஈடுபாடு தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் செயல்களை மிகுந்த விருப்பத்துடன் செய்வதை உங்களைச் சுற்றியிருப்பவர்கள் பார்த்தால், அவர்களும் ஏன் அதில் பங்கேற்காமல் இருக்கப் போகிறார்கள்? அனைத்தையுமே நீங்கள் பெருவிருப்பத்துடன் செய்யும்போது, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் அதனால் ஈர்க்கப்படுவார்கள்.