Question: பைபிளில் இருக்கிற ஒரு வரி 'பலருக்கு அழைப்பு வந்தாலும், அதில் வெகு சிலரே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்'. - இது ஆன்மீகப் பாதையில் மிகவும் நியாயமற்றதாகத் தெரிகிறது. 'அனைவரும் ஒன்றே' என்ற மதக் கோட்பாடுகளுக்கு இது புறம்பாகத் தெரிகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

சத்குரு:

ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதை விட ஒரு சிலர்தான், சூழ்நிலைகளின் கட்டாயங்களையும் மீறி அப்பாதையை ஏற்கிறார்கள் என்று சொல்லலாம். என்னைக் கேட்டால் 'எல்லோரும் அழைக்கப் படுகின்றனர், ஆனால் வெகு சிலரே அந்த அழைப்பை ஏற்கின்றனர்' என்றே சொல்வேன். (சிரிக்கிறார்).

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வெளியுலகை நோக்கி ஆயிரமாயிரம் அடிகள் எடுத்து வைக்கிறீர்கள்... உள்நோக்கி ஒரே ஒரு அடி எடுத்து வையுங்கள், அதுவே போதுமானது.

இதற்கு எத்தனை அடிகள் எடுத்து வைக்க வேண்டும்..? எடுத்து வைக்க வேண்டியது ஒரு அடிதான், ஒரு அடி மட்டும்தான். வெளியுலகை நோக்கி ஆயிரமாயிரம் அடிகள் எடுத்து வைக்கிறீர்கள்... உள்நோக்கி ஒரே ஒரு அடி எடுத்து வையுங்கள், அதுவே போதுமானது.

இப்போது உங்கள் கவனம் வெளிநோக்கி இருக்கிறது. இந்தத் திசையில் இருந்து உள்நோக்கி அடியெடுத்து வைப்பது சாத்தியமல்ல. உள்நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டுமெனில், உங்கள் கவனம் முதலில் உள்நோக்கித் திரும்பவேண்டும். வெளியில் உங்கள் முதலீடு அதிகமாக இருப்பதால், உள்நோக்கித் திரும்ப உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. ஒருவேளை, உள்நோக்கித் திரும்பினால், வெளியிலுள்ளவற்றை இழந்திடுவோமோ? என்ற பயம். இது அநாவசியமான பயம். உள்நோக்கித் திரும்புவதால் நீங்கள் எதையும் இழக்கமாட்டீர்கள். ஆன்மீகம் குறித்த தவறான புரிதல்கள்தான் இந்த பயத்தை ஊட்டி வளர்த்துள்ளது.

நீங்கள் ஆன்மீகவாதியாக மாறினால், எல்லாவற்றையும் விட்டு விலகிவிடுவீர்கள் என்று மக்கள் கூறி வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆன்மீகத்திற்கு மாறினால் நீங்கள் மும்பையில் இருக்கமுடியாது, இமயமலையின் குகையில் எலிகளுடன்தான் வசிக்கவேண்டும் என்றும் கூடக் கூறுவர். உள்நிலை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கும், இமயம் அல்லது மும்பையில் இருப்பதற்கும் சம்பந்தமில்லை. இருப்பிடம் இமயமா அல்லது மும்பையா என்பது வெளிப்புற விஷயம், அது உங்கள் ஆன்மீகத்தன்மையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாது. நீங்கள் மலைகளில் வாழ விரும்புவதும், விரும்பாததும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அதேபோல் நீங்கள் மும்பையில் வாழ விரும்பினாலும், அதுவும் உங்கள் விருப்பமே. அதிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

இந்தத் தவறான புரிதல் ஏற்படக் காரணம், இந்தியாவில் முன்காலத்தில் விவாகரத்து என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. அதனால் குடும்பத்தை விட்டு விலக விரும்பிய எத்தனையோ மக்கள், அதற்கு ஆன்மீக வழியில் செல்வதை ஒரு காரணமாக்கிக் கொண்டனர் (சிரிக்கிறார்). இல்லறத்தை விட்டு விலகுவதற்கு வேறு எந்த கௌரவமான காரணத்தையும் கூற முடியவில்லை. எனவே அக்காலத்தில் பலரும், இந்தக் காரணத்தை சமாதானமாகச் சொல்லி வந்துள்ளனர்.

Question: ஆனால், எனக்குள்ளே நான் நன்றாக இருப்பதாகத் தெரியவில்லையே?

சத்குரு:

ஆம்! ஏனென்றால் இதுவரை உங்களுக்குள்ளே நீங்கள் பார்க்கவே இல்லை. இப்போது உங்களது உள்ளே என்று நீங்கள் அழைப்பது உங்கள் மனதை மட்டுமே. உங்கள் மனம் என்பது உள்ளே இருப்பதல்ல. உங்கள் மனம் என்பது சமூகத்தின் குப்பைத்தொட்டி தான், இல்லையா? உங்கள் மனதில் இருக்கும் ஒவ்வொன்றும், வெளியிலிருந்து நீங்கள் சேகரித்தது. எனவே உங்கள் மனம் என்பது உள்ளே இருப்பதல்ல, வெளியில் இருப்பது.