நீங்க சிங்கமா? நரியா?

நீங்க சிங்கமா? நரியா?

ஆடு-புலி கதை கேள்விப்பட்டிருப்பீங்க, ஆடு-புலி ஆட்டமும் ஆடி இருப்பீங்க… சிங்கம்-நரி கதை கேட்டதுண்டா? இதோ சத்குரு சொல்லும் குட்டிக் கதை இந்தப் பதிவில்…

சத்குரு:

ஒருமுறை ஒரு சன்னியாசி காட்டுக்குள் சென்றார். அங்கு, வேடனின் பொறியில் ஏற்கனவே சிக்கி, தன் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்த ஒரு நரியை பார்த்தார். நடக்கவே முடியாத அந்த நரி, எப்போதும் ஒரே மரத்தின் அடியிலேயே படுத்திருந்தது. முடங்கிப் போயிருந்த அந்த நரி ஓரளவு நன்றாகக் கொழுத்திருந்தது. இதை கவனித்த சன்னியாசியால் அதனை நம்ப முடியவில்லை. அவர் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய மிருகத்தின் மாமிசத்தை எடுத்து வந்து நரி முன்னால் போட அந்த நரியும் அதைச் சாப்பிட்டது.

சன்னியாசியால் தன் கண்களை நம்ப முடியவில்லை. ‘ஓ, இது கடவுள் எனக்கு அனுப்பியிருக்கும் சேதி. ஊனமுற்று, முடங்கிப் போன நரிக்கு அது உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே உணவு தேடி வருகிறதென்றால், தெய்வீகத்தின் பாதையில் நடக்கும் சன்னியாசியான எனக்கு, உணவு ஏன் தானாகக் கிடைக்காது? இனி நானும் ஒரே இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறேன்’ என்று நினைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்தார் அந்த சன்னியாசி.

மூன்று நாள் ஓடிற்று ஒன்றும் கிடைக்கவில்லை. நான்காவது நாளிலிருந்து பசி மிகுதியால், தியானம் செய்ய முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு காத்துக் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யோகியிடம் நடந்தவற்றை சன்னியாசி கூறி, ‘இது தெய்வீகத்தின் செய்திதானே? எனக்கு மட்டும் உணவு ஏன் தானாக வரவில்லை?’ என்று கேட்டார். அதற்கு அந்த யோகி, ‘நிச்சயம் இது கடவுளின் செய்திதான். ஆனால் நீங்கள் ஏன் அந்த ஊனமுற்ற நரியைப் போல நடந்து கொள்கிறீர்கள்? தாராள மனப்பான்மை கொண்ட அந்த சிங்கத்தைப் போல நடந்து கொள்ள முயற்சிக்கலாமே?’ என்று கேட்டார்.

Javier Corbo @ flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert