நீதியென்று எதுவும் இல்லை

நீதியென்று எதுவும் இல்லை

சத்குருவின் In Conversation with the Mystic லிருந்து…

இந்த பூமியில் நீதி என்று எதுவும் கிடையாது. உங்களுக்கு நீதியாகப் படுவது வேறு சிலருக்கு அநீதியாகத் தெரியலாம். பொதுவாக இந்த “நீதி” என்ற வார்த்தை யாரோ ஒருவரை பழி தீர்க்கத் தூண்டுவதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது – அது சட்டப்பூர்வமான பழிவாங்கலாக இருந்தாலும் சரி, சட்டத்துக்குப் புறம்பான பழிவாங்கலாக இருந்தாலும் சரி. யாரோ ஒருவர் ஒரு கொலையை செய்துவிட்டால், தான் சரியான தீர்ப்பை வழங்கிவிட்டதாக அவர் நினைத்துக் கொள்கிறார். அதனால்தான் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். எனவே நீங்கள் நீதியின் அடிப்படையில் செயல்படாதீர்கள். அதற்கு பதிலாக நாம் சட்டங்களை எளிமையாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவோம். இப்போதைக்கு, யாருக்குமே நீதியைப் பற்றி சிந்திப்பதற்கான உரிமை கிடையாது. முதலில் நாம் சட்டத்தை மதிக்கின்ற ஒரு சமூகமாக மாற வேண்டும்; அதன் பிறகுதான் நமக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சில சமயங்களில் சட்டங்கள் கொடூரமானவையாக இருக்கும்போது, அந்த சட்டத்தை உடைத்து நாம் நியாயம் வழங்கலாம். ஆனால் இப்போதைக்கு நாம் இருக்கும் நிலையில் அது போன்ற வாய்ப்புகள் கிடையாது. இங்கு முதலில் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – இது அநீதியாகத் தோன்றினாலும், நாம் நடைமுறைபடுத்தித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல், எந்த சமுதாயத்திலும் நீதி நிலைத்திட வழி கிடையாது. இப்போது நம்மிடம் எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லை என்னும்போது, நீதியைப் பற்றிய கேள்வி எங்கிருந்து வந்தது? இப்படிப்பட்ட சமுதாயத்தில் பழி தீர்ப்பதுதான் நீதி என்று ஆகிவிடும்.

ஒரு சமூகத்தில் சட்டத்தை எப்படி தீவிரமாக அமுல்படுத்துவது? அதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் ஒரு விஷயம், சட்டங்களை எளிமைப்படுத்துவதுதான். இந்த நாட்டில் வாழ விரும்பும் அனைவருமே இந்த நாட்டின் அடிப்படைச் சட்டங்களைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த நாட்டில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படைச் சட்டங்கள் கூடத் தெரியாது. ஒவ்வொரு முறை நீங்கள் ஏதாவது ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்கும்போதும், தெரியாது என்று அவர்கள் கைவிரித்து விடுவார்கள். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லித்தர வேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. இந்த நாட்டில் நீங்கள் வாழ வேண்டுமானால், குறைந்தபட்சம் இத்தனை அடிப்படை சட்டங்களாவது தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட வேண்டும். தெருவில் வண்டி ஓட்ட வேண்டுமென்றால், அதற்கான சட்டங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இல்லையா? அதே போல, இந்த நாட்டில் நீங்கள் வாழ வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட சில சட்டங்களெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளும் விஷயம் இல்லை இது. இதற்கு சரியான கல்வி தேவை. இதுதான் சட்டம், இதை மீறினால் இது தண்டனை என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்தானே?

அதன் பின்னர் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்துவது அத்தனை சுலபம் அல்ல. சட்டத்தை இயற்றுவதே மிகவும் சிக்கலான விஷயம், அதை நடைமுறைப்படுத்துவது அதைவிட சிக்கலான விஷயம்… ஏனென்றால் இங்குதான் நீதியும், அநீதியும் புகுந்துவிடுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, நாம் இந்த நீதி, நியாயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டத்தை அப்படியே பின்பற்ற வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் சில நேரங்களில் அநீதியான வழிகளிலும் நடைமுறைப்படுத்தலாம். இதை மக்கள் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுத்துக் கொள்ளவில்லை என்றால், பிறகு ஒரு ஒழுங்கில்லாத, சட்டங்களில்லாத சமுதாயம்தான் அமையும். . பிறகு பழி வாங்குவதே உங்கள் பாதையாகிவிடும். ஆனால் அதை நாம் ‘நீதி’ என்று அழைப்போம். ‘நீதி’ என்று முத்திரை குத்தி, ஒருவரை ஒருவர் பழிவாங்கிக் கொண்டு இருப்போம். மக்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்வது போன்ற பல விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்றால், இதுதான் நீதி வழங்குவது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் இப்போதிருக்கும் சட்டங்கள் விவேகமானதாக இல்லை.

எனவே சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் ஒரு ஒழுங்குள்ள சமுதாயத்தை உருவாக்கி முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் ஒரு மனப்பூர்வமான தியாகத்தை செய்ய வேண்டும். “நான் நீதி கேட்க மாட்டேன். என் மேல் சட்ட, திட்டங்களை சுமத்துங்கள். அது எந்தவிதமான சட்டமாக இருந்தாலும், அதை நான் கடைபிடிப்பேன். என்னைப் பொறுத்தவரை அது நியாயமில்லாததாகத் தோன்றினாலும் இப்போதைக்கு சட்டத்தின்படியே நான் நடப்பேன்”. அது மட்டுமில்லாமல், இப்போதிலிருந்தே அந்த சட்டத்தின்படி நான் நடப்பேன்” என்பதுதான் அந்த மனப்பூர்வமான தியாகம். அந்த சட்டம் மிகவும் அநீதியானதாக இருந்தால், அதை மறுசீரமைப்பதைப் பற்றி நாம் யோசிக்கலாம், ஆனால் சட்டம் இல்லையேல் நீதியும் இல்லை. தாமாக நீதி வழங்குவதற்கு யாருக்கும் தன்னிச்சையான அதிகாரம் கிடையாது என்பதை நாம் நிலைநாட்டிட வேண்டும். இந்த ஒரு விஷயத்தை நாம் இதுவரை செய்யவில்லை.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert