நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் நிகழ்ந்த லிங்கபைரவி தேவி தரிசன நிகழ்ச்சி, சென்னையிலுள்ள தேவி பக்தர்களைப் பரவசப்படுத்தியது. இந்நிகழ்வைப் பற்றிய சில பகிர்வுகள் உங்கள் முன்னே!

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழாக்கள் 9 நாட்களும் பலவித பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடும் தேவி ஊர்வலம் மற்றும் அலங்கார பூஜைகளோடும் கொண்டாடப்பட்டது. ஆனால், சென்னை போன்ற நகரங்களிலுள்ள தேவி பக்தர்கள், நவராத்திரியில் தேவியை தரிசிக்க விரும்பும் போதிலும், பலவித சூழ்நிலைகள் காரணமாக ஈஷா யோக மையத்திற்கு நேரடியாக வந்து தரிசிக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக, இந்த ஆண்டு சென்னையிலேயே லிங்கபைரவி தேவி, தரிசனம் தந்தருளினாள்.

ஆம்...! கடந்த அக்டோபர் 18ஆம் தேதியன்று சென்னை கோடம்பாக்கத்திலுள்ள மீனாட்சி கல்லூரியில், மாலை 5.30 மணியளவில் துவங்கிய தேவி தரிசன நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நிகழ்ந்தேறியது. பிரபல திரைப்பட நடிகையான திருமதி.அமலா பால் மற்றும் டச்சஸ் க்ளப்பின் (Dches Club) நிறுவனர் நீனா ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தனர். சுமார் 1500 பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ஆர்வத்துடன் தேவி தரிசனம் பெற வருகை தந்தனர்.

அங்கு அரங்கேறிய பத்மஸ்ரீ திருமதி.மீனாட்சி சித்தரஞ்சன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியானது, தேவிக்கு ஒரு நாட்டிய அர்ப்பணமாக அமைந்தது. நிகழ்ச்சியில் 11 வகையான சமர்ப்பணங்கள் அர்ப்பணித்து, தேவி ஸ்துதி உச்சாடனை செய்து, தேவியை எழுந்தருளச் செய்தனர் பக்தர்கள். நெய் தீபமேற்றி வழிபட்டு, தேவி தண்டம் செய்த அன்பர்கள், லிங்கபைரவி தேவியின் அருள் மழையில் நனைந்தனர். தேவி பூஜையில் கலந்துகொண்டு, தேவி ஆரத்தியை கண்டு மகிழ்ந்த அனைவருக்கும் தேவி பிரசாதம் வழங்கப்பட்டது.

மஹாசிவராத்திரி அன்று அந்தந்த ஊர்களிலேயே ஈஷா சிவராத்திரி கொண்டாட்டங்கள் நிகழ்வதைப் போலவே, இனிவரும் காலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்களும் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வதற்கான முன்னோட்டமாக சென்னையில் இந்த தேவி தரிசன நிகழ்ச்சியானது நிகழ்ந்தேறியுள்ளது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.