நம்மாழ்வார் கொடுத்த தைரியம்!

இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்… பகுதி 9

தனது வாழ்க்கைப் பாதை, நம்மாழ்வார் ஐயாவின் வழிகாட்டுதலால் மாறியது எப்படி என்பதையும், அவரிடம் தான் கற்றுக்கொண்ட உறுதியையும் பகிர்ந்துகொள்கிறார் திரு.ஆனந்த். நம்மாழ்வாருக்கு வந்த மிரட்டல் கடிதங்களை அவர் எப்படி அணுகினார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

இளமையில் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இயல்பானததுதான். எனக்கும் அப்படித்தான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது பக்கத்து வீட்டிலிருந்த பெட்டிக்கடையின் மீது ஆர்வம் வந்தது. ஆம்! நான் பெட்டிக்கடை வைத்து அதில் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். என் தந்தையிடம் என் விருப்பத்தைக் கூறினேன். என் ஆர்வக் கோளாறு அவருக்குப் புரிந்தது. “சரி, நீ இந்த ஆண்டு விடுமுறையில் அந்தப் பெட்டிக் கடையில் வேலை செய்து கற்றுக்கொள். அதன்பிறகு நான் உனக்கு கடை வைத்து தருகிறேன்.” என்று அவர் கூறினார். விடுமுறை முழுக்க பெட்டிக்கடையில்தான் இருந்தேன். அங்கு நடக்கும் விற்பனை, வரவு-செலவு, என அனைத்தையும் புரிந்துகொண்டேன். விடுமுறை முடிந்த பின் அப்பாவிடம் சென்று “எனக்கு பெட்டிக்கடை வைக்க விருப்பமில்லை” என்றேன். அவர் “சரி போய் படி!” என்றார்.

இயற்கை விவசாயத்திற்காகவும் இயற்கை வளங்களைக் காப்பாற்றவும் அவர் சமூகத்தில் பல துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதானால் பாதிக்கப்பட்ட சில சமூக விரோதிகள் அவருக்கு அவ்வப்போது மிரட்டல் விடுப்பர்.
ஒன்பதாம் வகுப்பு விடுமுறை முழுக்க பைக் மெக்கானிக் கடையில் வேலை செய்தேன். அங்கு வேலை செய்தேன் என்பதை விட வண்டிகளை கழுவுவது, துடைப்பது போன்ற வேலைகளைச் செய்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு கடைசி வரை தொழில் கற்றுக்கொடுக்கவே இல்லை. பிறகு பைக் மெக்கானிசத்தை நான் எப்படியோ கற்றுக்கொண்டேன். ஆனால், நான் மெக்கானிக்காக வாழ்க்கை முழுக்க இருக்க முடியாது என முடிவுக்கு வந்தேன். இப்படி என் ஆர்வம் எல்லா திசையிலும் அலைபாய, அந்த நேரத்தில்தான் நம்மாழ்வார் ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேச்சும் விவசாயத்தின் மேல் அவருக்கிருந்த பேரார்வமும் என் வாழ்க்கைக்கு நல்ல அர்த்தத்தை கொடுத்தது. இனி விவசாயமே என் வாழ்க்கை என முடிவெடுத்தேன். அதிலிருந்து இன்றுவரை என் மனம் மாறவில்லை.

நம்மாழ்வார் ஐயாவுடன் வாழ்ந்த நாட்களில், அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவரது ஓய்வறியா உழைப்பைத்தான் சொல்ல வேண்டும். எப்போதும் அரசு பேருந்தில்தான் பயணிப்பார். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு ஊருக்காவது பயணம் செய்வார். அங்கு நடக்கும் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவார். அவர் எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த ஊரிலேயே ஒரு விவசாயி வீட்டில் தங்கிக்கொள்வார். இரவில் அவர் இன்னும் அதிகமாக வேலை செய்வார். தனது எழுத்துப் பணிகளை பெரும்பாலும் இரவில்தான் மேற்கொள்வார். இடையிடையே இருபது நிமிட குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, மீண்டும் எழுந்து பணியாற்றுவார். அதிகாலையில், விவசாயிகளின் வயல்களுக்குச் சென்று அவர்களுடன் சிறிது நேரம் வேலை செய்துவிட்டுத்தான் தனது பிற பணிகளைத் துவங்குவார்.

இயற்கை விவசாயத்திற்காகவும் இயற்கை வளங்களைக் காப்பாற்றவும் அவர் சமூகத்தில் பல துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதானால் பாதிக்கப்பட்ட சில சமூக விரோதிகள் அவருக்கு அவ்வப்போது மிரட்டல் விடுப்பர். மிரட்டல் கடிதங்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கும். அவற்றைப் படித்துவிட்டு புன்னகைப்பார். அதன் பின்னர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார். இதுபோன்ற விஷயங்கள் வாழ்க்கையில் எனக்கு உறுதியோடு எதையும் சந்திக்கும் தைரியத்தை வழங்கியது. தொடர்ந்து நம்மாழ்வார் ஐயாவுடன் பயணித்து அவருக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளர் போல் செயல்பட்ட நான், ஈஷா பசுமைக்கரங்களுடன் இணைந்தது என் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு திருப்பம். சொல்கிறேன், காத்திருங்கள்!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert