நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 1

இயற்கையெல்லாம் செயற்கையாய் நாம் மாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதுகளில் வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், உண்மையில் நம் உள்ளங்களை ஆள்பவர் தான். இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, நாம் இயற்கைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அச்சுறுத்தல் என்று பல பரிமாணங்களை வரும் வாரங்களில் நம்முடன் அலசுகிறார். இந்தப் பக்கத்தில் எங்களுடன் தொடர்பில் இருங்கள்...

ஒவ்வொரு வாரமும் நாம் என்ன செய்ய முடியும், தனியொரு மனிதராய் இந்த சமுதாயத்தில் நம்மால் என்ன மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்பதனை இங்கே கமென்டுகளாக எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஆம் நாம் கை கோர்போம், நம் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மனிதன் துணிந்தால், அற்புதங்கள் சாத்தியமே!

நம்மாழ்வார்:

பாரம்பரியமாக நமது தேசத்தில் இருந்து வந்த மருத்துவ முறைகளுக்கு பெரும் உதவி புரிந்தவை மூலிகைகள். அவை மிகவும் புனிதமானதாகப் போற்றப்பட்டன. தற்போது தீராத நோய்களாகக் கருதப்படும் நோய்களை போக்கும் சக்தி கொண்டவை இந்த மூலிகைகள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விளை நிலங்களில் இறைத்து, மண்ணின் தன்மையையே மாசுபடுத்தி விட்டோம். இதனால் நிலங்களில் விளையும் பயிர்களும் வேலியோரங்களில் வளரும் மூலிகைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
அதேபோல நாம் விளைவித்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

உதாராணமாக மாடுகள்... மனிதர்களின் வாழ்வில் மாடுகளின் பங்களிப்பு மிக இன்றியமையாதது. வயற்காட்டில் ஏர் உழ, நீர் இறைக்க, வண்டியை இழுக்க எனப் பலவிதங்களிலும் உழைப்பதோடு
விளைச்சலுக்குத் தேவையான எருவினையும், உண்ண உணவினையும் (பாலாக) மாடுகள் வழங்குகின்றன.

ஒவ்வொரு உயிரும் பிறவற்றைச் சார்ந்தே வாழ்கிறது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல்ரீதியாக மட்டுமே பார்த்தால் அது அழிவினை நோக்கியே இட்டுச் செல்லும். அறிவியலின் உச்சம் அழிவுதான். அணுகுண்டு அப்படித்தான் உருவானது. ஆன்மீகரீதியில பார்க்கும்போது மனிதர்களின் நலனை மட்டும் பார்த்தால் போதாது. அது மிகவும் குறுகலான பார்வை. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என மனிதனை மட்டும் உயிராகப் பார்க்காமல் எல்லாவற்றையும் நம்மோடு அரவணைத்துக் கொள்வதே... ஆன்மீகப் பார்வை.

மனிதனைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளும், கால்நடைகளும், பறவைகளும் என அனைத்தும் நலமாய் வாழ்வதற்குரிய சூழல் இந்த பூமியில் இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றின் நலவாழ்வும் மற்ற உயிரினங்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தவை என்பது விஞ்ஞானரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஆந்தைக்கு உணவாக மூன்று எலிகள் தேவை. அந்த எலிகளை ஆந்தை சாப்பிடுவதால்தான் நீங்கள் சேகரித்து வைத்துள்ள உணவு பாதுகாக்கப்படுகிறது. பூமியில் பல நுண்ணுயிர்கள் இருப்பதால்தான், நிலம் வளமாகி விளைச்சல் பெருகுகிறது. இவ்வாறாக அனைத்தையும் ஒரே சமூகமாகப் பார்க்கும் பார்வை நமக்குத் தேவை.

நம்மாழ்வார் கூறும் சமூகப் பார்வையின் தொடர்ச்சியை வரும் வாரங்களில் பதிவோம்.

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

Photo Courtesy: VinothChandar @ Flickr