‘உழந்தும் உழவே தலை’ என்கிறார் வள்ளுவர், அதையே சத்குருவும் ‘விவசாயி நமது வளர்ப்புத்தாய்’ என தனது வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். பல்வேறு காரணங்களால் இன்று நசிந்து வரும் விவசாயத்தை கைபிடித்து அழைத்துச் செல்ல, ஈஷா முன்னெடுத்துவரும் இயற்கை வேளாண்மை பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை!

“விவசாயம் என்பது ஒரு தொழிலல்ல; அனைவர் வீட்டிலும் ஒரு தாய் இருக்கிறாள். தாயாய் இருப்பது ஒரு தொழில் ஆகாது. அதைப்போலவே விவசாயியாக இருப்பதும் ஒரு தொழிலல்ல.” இப்படிக் கூறும் சத்குரு அவர்கள் விவசாயி என்பவர் நமக்கெல்லாம் ஒரு வளர்ப்புத்தாய் போன்றவர் எனக் கூறுகிறார்.

செலவே இல்லாத ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால், பயிர் உற்பத்தி செய்வதற்கென எந்தவித பொருட்களையும் வெளியிலிருந்து வாங்காமல், உற்பத்தி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் விவசாய நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் முறையாகும்.

கடந்த 50 ஆண்டுகாலமாக விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையும் வெகுமானமும் கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டும் சத்குரு, இந்நிலை தொடர்ந்தால் அது சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவூட்டுகிறார்.

விவசாயம் செய்வது என்பது ஒரு பெருமைப்படத்தக்க விஷயமாக இருந்த காலம் மாறி, தற்போது எந்த வேலைக்கும் போக வழி இல்லாதவர்களே விவசாயம் செய்துகொள்ளும் நிலை வந்துள்ளது. திறமை இருப்பவர்களும் படித்தவர்களும் நகரத்திற்கும் வெளிநாடுகளுக்கும் வேலை தேடிச் சென்றுவிடுகிறார்கள்; எஞ்சியிருக்கும் திறமையற்ற மனிதர்கள்தான் விவசாயம் செய்கிறார்கள் என்பது போன்றதொரு பார்வை, இன்று சமூகத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த மனப்பான்மையானது சமுதாயம் நன்மை பெறும் வாய்ப்பை இல்லாமல் செய்துவிடுமென எச்சரிக்கிறார் சத்குரு.

நஞ்சில்லா உணவு...

தற்போது பெருகி வரும் புதிய புதிய நோய்களுக்கும், உடல்நல பாதிப்புகளுக்கும் இரசாயன கலப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது முக்கிய காரணமாக உள்ளது. நஞ்சில்லா உணவை உண்ண வேண்டுமென்ற எண்ணம் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமும் நுகர்வோரிடமும் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வழிமுறைகளும் செயல் திட்டங்களும் விவசாயிகளை இன்னும் சென்று சேரவில்லை. இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தி தங்கள் நிலங்களை தாங்களே மலடாக்கிக்கொள்ளும் அவலநிலையை கைவிட விவசாயிகள் பலர் நினைத்தாலும், அதற்கான வழிமுறைகள் தெரியாததால் வேறு வழியில்லாமல் மீண்டும் அதே இரசாயன விவசாயமுறையை தொடர்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உற்பத்தி செலவை குறைப்பது எப்படி என்பதைப் பார்க்காமல், நல்ல விலை கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே விவசாயிகளிடம் பொதுவாகக் காணப்படுகிறது. அதிக விலை நிர்ணயம் கிடைக்க வேண்டும் என நினைப்பதற்கு பதிலாக, குறைந்த செலவில் உற்பத்தி அளவை அதிகரிப்பது எப்படி என்று பார்த்தோமானால், அது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் என இருவருக்குமே பலனளிப்பதாய் இருக்கும் என்பதை சத்குரு முன்வைக்கிறார். உதாரணமாக தேங்காய் விளைச்சலை எடுத்துக்கொள்வோம்! அதாவது, தேங்காயின் விலை ரூ.5 எனும்போது விவசாயிகள் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டால்தான் அது தங்களுக்கு லாபம் என கருதுவதை விடுத்து, அதே உற்பத்தி செலவில் ஒரு மரத்தில் 10 காய்கள் விளைவிப்பதிலிருந்து 20 காய்கள் விளைவிக்கும் உத்தியை அறிந்துகொண்டால், பின் ரூ.5 என்பது போதுமான லாபம் தரக்கூடியதாக ஆகிறது.

விவசாயிகள் ஒன்றிணைய...

வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என விவசாயிகளை இணைக்கும் வகையில் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கொண்டு பருவநிலைக்கேற்ற விவசாயம் குறித்தும், சந்தைக்கு தேவையான பயிர் உற்பத்தி குறித்தும் தகவல்களைப் பரிமாறுவது, விவசாயிகள் சரியான பயிர்களை அதிக அளவில் உற்பத்தி செய்து, லாபம் ஈட்டுவதற்கு துணைபுரியும் என சத்குரு ஆலோசனை வழங்குகிறார். மேலும், விவசாயிகள் அனைவரும் விவசாய உற்பத்தியில் பட்டம் ஒன்றும் வாங்கத் தேவையில்லை என்றாலும், குறைந்த செலவில் அதிக உற்பத்தி எடுக்கக் கூடிய இயற்கை விவசாய முறைகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் விதமாக ஆங்காங்கே பயிற்சிப் பள்ளிகளை அமைக்க வேண்டுமென்பதும் சத்குருவின் நெடுநாள் கனவாக உள்ளது.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், சத்குருவின் வழிகாட்டுதலின்படி ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பல கோடி மரங்களை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நட்டு வளர்த்து வருகின்றனர். தற்போது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமானது தமிழக விவசாயிகளை இயற்கை வேளாண்மைக்கு திரும்பச்செய்யும் தனது முதற்கட்ட முயற்சிகளைத் துவங்கியுள்ளது.

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண் முறைகளை தமிழகமெங்கும் கற்பித்து இயற்கை விவசாயத்திற்கு வழிகாட்டினார். அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் துவங்கிய “வானகம்” அமைப்பு தொடர்ந்து செய்துவருகிறது. நம்மாழ்வார் ஐயாவைப் போலவே மஹாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள், இயற்கை வேளாண்மையை முன்னெடுத்து, இரசாயன இடுபொருட்களினால் விளையக் கூடிய பாதிப்பிலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் முறையை பாரதம் முழுக்க சுமார் 40 லட்சம் விவசாயிகள் இவரிடமிருந்து கற்றுக்கொண்டு, பயன்பெற்று வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம்

செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழில்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையைக் கற்றுக்கொடுக்க ஈஷா பசுமைக்கரங்களின் அழைப்பின் பேரில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் வருகிறார்.

செலவே இல்லாத ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால், பயிர் உற்பத்தி செய்வதற்கென எந்தவித பொருட்களையும் வெளியிலிருந்து வாங்காமல், உற்பத்தி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் விவசாய நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் முறையாகும். இந்தமுறையைப் பின்பற்றுகையில் உரத்திற்காகவோ விதைக்காகவோ நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இயந்திர பயன்பாடு இல்லாமல், அதற்கு மாற்றாக நாட்டுக் கால்நடைகளை பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இருப்பதை இம்முறை முன்னிறுத்துகிறது.

ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கடைபிடிக்க முடியுமா? இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம்! உங்கள் சந்தேகங்களை எல்லாம் போக்கும் வகையிலும், இதன் நடைமுறை சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த வகுப்பின் தன்மையானது அமையும். நிகழ்ச்சியின் 8 நாட்களும் முழுமையாகக் கலந்துகொள்பவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளும் ஆதரவும் வழங்கப்படும். இதன் மூலம் இயற்கை விவசாயம் குறித்த தெளிவான பார்வையை நீங்கள் பெறுவது உறுதி!

நிகழ்ச்சி குறித்த விபரங்கள்

பல்லடம் திருச்சி மெயின் ரோடு, ஸ்ரீ விக்னேஷ் மஹால் (இலட்சுமி மில்ஸ் பஸ் நிறுத்தம்)ல் 10.12.2015 முதல் 17.12.2015 வரை, 8 நாட்கள் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்! எட்டு நாட்களும் பயிற்சியில் கலந்துகொள்வது அவசியம்!

ஜீரோ பட்ஜெட் சேனாதிபதி (பயிற்றுநர்) சிறப்பு பயிற்சி வகுப்பு எனப்படும் இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பத்தை http://www.projectgreenhands.org/ZBT/ என்ற வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து ஈஷா நர்சரிகளிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு: 94425 90068, 94425 90036.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை info@projectgreenhands.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பசுமைக் கரங்கள் திட்டம், ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலைச்சாரல், ஈஷான விஹார் அஞ்சல், கோவை - 641114, செல்: 94425 90062 என்ற முகவரிக்கோ அனுப்பவும்.