"எனக்கு எதற்கு யோகா, நான் நல்லாதானே இருக்கேன்...?!" என மார்தட்டிக்கொள்பவர்கள் இங்கே ஏராளம். யோகா செய்யாமல் இருப்பவர்கள் யோகா செய்யும்போது, அவர்கள் சக்திநிலையில் என்ன நடக்கிறது. சக்திநிலையில் ஆளுமை கொண்டுவரும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இதோ சத்குரு சொல்கிறார்...!

சத்குரு:

யோகா என்று சொல்லும்போது உங்களில் பலருக்கு உடலை வளைத்து செய்கிற சில ஆசனங்கள் அல்லது சாத்தியமே இல்லாத கோணங்களில் உடலை வளைத்துக்கொண்டிருப்பது போன்ற விஷயங்கள்தான் நினைவுக்கு வரும். நாம் ‘யோகா’ என்று சொல்வது அதையல்ல. யோகா என்றால் முற்றிலும் பொருந்தியிருப்பது என்பது பொருள். உங்கள் உடல், மனம், ஆன்மா இந்த பிரபஞ்சத்தின் இருப்பு அனைத்தும் முழுமையாக ஒன்றோடு ஒன்று பொருந்தியிருப்பதுதான் யோகா. அந்த நிலைக்கு உங்களை நீங்கள் சீரமைத்துக் கொள்கிறபொழுது அனைத்து இயக்கங்களும் மிக அற்புதமாக நடைபெறுகின்றன. உங்கள் திறமைகளிலேயே தலைசிறந்த அம்சங்கள் தானாகவே வெளிப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
யோகா என்பது உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவை தங்கள் திறமையின் உச்சத்தில் செயல்படும்விதமாக உள்நிலை சக்திகளை தூண்டிவிடுகிற அறிவியல்.

பொதுவாகவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறபொழுது எல்லையில்லாத சக்தியோடு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் உண்ணாவிட்டாலும் உறங்காவிட்டாலும் உங்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது. இதைப் பார்த்திருக்கிறீர்கள் தானே! எனவே ஒரு துளி மகிழ்ச்சி கூட, உங்கள் சக்திநிலைக்கும் திறமைக்கும் இருக்கிற சராசரித் தன்மையிலிருந்து உங்களை விடுவிக்கிறது.

யோகா என்பது உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவை தங்கள் திறமையின் உச்சத்தில் செயல்படும்விதமாக உள்நிலை சக்திகளை தூண்டிவிடுகிற அறிவியல். இரண்டு நாட்கள் உறங்காவிட்டாலும் கூட என்னிடம் எந்த வித்தியாசத்தையும் உங்களால் காண முடியாது. என்னால் அந்த நாளின் செயல்பாடுகளை முழுமையாகச் செய்ய முடியும். உங்கள் உடலும், மனமும் முற்றிலும் வேறு ஒரு இயல்புநிலையில் இயங்குகிறபோது, ஒருவிதமான ஆனந்தம் உங்களுக்குள் நிகழ்கிறபோது, பெரும்பாலான மக்கள் பாதிப்பிற்குள்ளாகிற விஷயங்களிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் அலுவலகத்தில் வந்து அமர்கிறீர்கள், தலைவலி அதிகமாயிருக்கிறது. தலைவலி என்பது பெரிய நோயல்ல என்றாலும், அந்த நாளின் செயல் திறமை முழுவதையும் அது அகற்றிவிடுகிறது. அந்த வழியே, உங்கள் வலிமையைக் குறைத்து விடுகிறது. யோகப் பயிற்சியின் மூலம் உங்கள் உடலும், மனமும் அதன் உச்சபட்ச சாத்தியத்தில் திகழும்.

இதற்கு வேறு சில பரிமாணங்களும் உண்டு. உங்கள் சக்திநிலைகளை நீங்கள் தூண்டிவிடும் பொழுது முற்றிலும் புதியவிதமாக நீங்கள் செயல்பட முடியும். இங்கே உட்கார்ந்திருக்கிற பொழுது நீங்கள் உங்களை ஒரு மனிதராக கருதிக் கொள்கிறீர்கள். பல விஷயங்களோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால், ‘நான்’ என்று நீங்கள் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒரு சக்திநிலையைத்தான் என்பது உங்களுக்கு தெரியுமா? நவீன அறிவியல் இப்பொழுது சொல்கிறது, இந்த பிரபஞ்சமே சக்தியின் வெவ்வேறுவிதமான வெளிப்பாடுகள் தான் என்று. இது உண்மையானால், இயங்கிக் கொண்டிருக்கும் சக்தியில் நீங்கள் ஒரு பாகம், அவ்வளவுதான். அறிவியலைப் பொறுத்தவரையில், ‘நீங்கள், நான்’ என்று குறிக்கப்படுகிற அதே சக்தி இங்கு ஒரு பாறையாக இருக்கலாம், மணலாகக் கிடக்கலாம், மரமாக நிற்கலாம், நாயாகக் குரைக்கலாம், அல்லது நீங்களாக இங்கு அமர்ந்திருக்கலாம். எல்லாமே ஒரே சக்திதான், ஆனால் வெவ்வேறு விதமான செயல்பாடுகள் அதற்கு உள்ளது.

அதேபோல மனிதர்களுக்கிடையே நாம் எல்லோரும் ஒரேவிதமான சக்திநிலையால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் அதே அளவிலான திறமைகளில் இயங்குவது இல்லை. நீங்கள் உங்கள் திறமை என்று எதைச் சொல்கிறீர்கள்? நீங்கள் திறமை என்று சொல்வதும், உலகில் சில விஷயங்களைச் செய்வதற்கான செயல்திறன் என்பதும், படைப்பாற்றல் எனக் குறிப்பிடுவதும், உங்கள் சக்தி இயங்குகிற விதத்தைத்தான். இந்த சக்தி, ஒரு செடியை இயக்கி ரோஜாவை மலரச் செய்கிறது. அதே சக்தி, இன்னொரு செடியில் இயங்கி மல்லிகைப் பூக்களை மலர்த்துகிறது. ஆனால் ஒரே சக்திதான் இப்படி விதவிதமாக வெளிப்படுகிறது.

உங்கள் சக்திநிலையின் மீது உங்களுக்கு ஆளுமை இருக்குமேயானால் சாத்தியமே இல்லையென்று நீங்கள் கருதியவற்றை எல்லாம் செய்து முடிப்பீர்கள். இந்தப் பயற்சியை செய்யத் துவங்கியிருக்கும் ஏராளமானவர்களின் அனுபவம் இது. யோகா என்பது தேவையான சூழலை உருவாக்கிக் கொள்வதற்கான உள்நிலை தொழில்நுட்பம். அந்தக் காலத்தில் சின்னஞ்சிறு குடிசைகளை உருவாக்கியிருந்தனர். அந்த மணலை வைத்துக்கொண்டு அவ்வளவுதான் செய்யமுடியும் என்று கருதினார்கள். நாம் பெரும் கட்டிடங்களை கட்டியுள்ளோம். இதே பூமியில்தானே நாம் கணினிகளை உருவாக்கியிருக்கிறோம். கணினி என்பது இந்த பூமியின் உருவாக்கம். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று கருதுகிறேன். மண்ணைத் தோண்டி பானைகளும், செங்கற்களும் தான் செய்யமுடியும் என்று நாம் கருதினோம். இப்போது இந்த பூமியிலிருந்து தான் கணினிகளை, கார்களை, ஏன் விண்வெளி ஆய்வுக்கலன்களைக்கூட உருவாக்கினோம். இந்த ஒரே சக்தியைத் தான் இன்னும் உயர்ந்த லட்சியங்களுக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம்.

நம்முடைய உள்நிலை சக்திகளும் அப்படித்தான். அந்த சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கும், உயர்ந்த விஷயங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கும் ஒரு தொழில்நுட்பம் உண்டு. ஒரு அறிவியல் நுட்பம் உண்டு. எல்லா மனிதனும் இதை முயன்று பார்க்க வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கை மிகவும் குறுகியதாகவும், தற்செயலானதாகவும் அமைந்திருக்கும். உங்களுக்கு என்ன தெரியுமோ அதை செய்துகொண்டு இருப்பீர்கள். உங்கள் உள்நிலை சக்தியைத் தூண்டத் தொடங்கிவிடுவீர்களேயானால், உங்கள் செயல்திறன் முற்றிலும் புதிய கோணத்தில் நிகழும்.