‘எல்லாம் என் தலைவிதி!’ எனச் சொல்லி அலுத்துக்கொள்ளும் நபர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், விதியை தன் கையிலெடுத்து அதனை வென்றுகாட்டிய பெரியோர்களும் நம்மிடையே உண்டு! ஆனால், இது எல்லோர்க்கும் சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ‘சாத்தியமே’ என்கிறது சத்குருவின் இந்த வார்த்தைகள்!

Question: விதி என்பது பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விதி என்பது, விழிப்புணர்வின்றி, நீங்களே எழுதிக் கொண்ட ஒரு மென்பொருள் போன்றது. ஏதோ ஒன்றை விழிப்புணர்வின்றி எழுதமுடியும் என்றால், அதை விழிப்புணர்வோடும் எழுதமுடியும். தூக்கத்தில் உங்களால் நடக்கமுடியும் என்றால், கண்விழித்தும் உங்களால் நடக்க முடியும் தானே? இந்த மென்பொருளை நீங்கள் உங்களுக்கு உருவாக்கிக் கொண்டுவிட்டதால், இயல்பாகவே, ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்கிறீர்கள். ஆனால் தேவையான விழிப்புணர்வு இருக்கும்பட்சத்தில், இந்த ‘மென்பொருளை’ நீங்கள் முழுவதுமாய் மாற்றி எழுதிக் கொள்ளலாம்.

‘நான் ஆன்மீக பாதையில் செல்கிறேன்’ என்று சொல்லும்போது, ‘நான் என் விதியை என் கையில் எடுத்துக் கொள்கிறேன், மற்றபடி என் ஜாதகம் என்ன சொல்கிறது, என் மரபணு என்ன சொல்கிறது, என் கர்மா என்ன சொல்கிறது, ஏன், அந்த கடவுள் என்ன சொல்கிறார் என்பது பற்றிக்கூட எனக்கு அக்கறை இல்லை’ என்று சொல்வதாகத்தான் பொருள். அதாவது, உங்களுக்கு எத்திசையில் பயணிக்க விருப்பமோ, அத்திசையில் உங்கள் வாழ்க்கையை செலுத்த நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். வெளி சூழ்நிலைகளோ, வெளி மனிதர்களோ உங்கள் வாழ்க்கைத் திசையை நிர்ணயிப்பதை நீங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை.

ஆன்மீகம் என்றால் பயணியாக இருப்பதை விடுத்து, உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்திற்கு, நீங்கள் ஓட்டுனராக ஆகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் விதியை, உங்கள் தலையெழுத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். இதற்கு அடிப்படைத் தேவை, உங்கள் உடல், மனம், மற்றும் சக்திநிலை உங்களுக்கு வேண்டியவாறு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட ஆரம்பிக்கும்போது, நீங்கள் முதல்படியை எடுத்துவிட்டீர்கள்.

Question: நம் விதியை நாமே கையில் எடுத்துக் கொள்ள முடியுமா?

விதி என்று சொல்லும்போது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் நடக்கும் என்று வேறு ஏதோ ஒன்று நிர்ணயிக்கிறது என்றும், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இல்லை என்றும் தான் சொல்கிறீர்கள். நான் சொல்வதெல்லாம், உங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பது நீங்கள் மட்டும் தான். உதாரணமாக, தமிழ்நாட்டில் மட்டுமே பல்லாயிரம் குழந்தைகள் தங்கள் கண்பார்வையை இழக்கின்றனர், அதிலும் எளிதாக தவிர்க்கக் கூடிய காரணங்களினால். பத்து வருடங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு, உலகில் இலட்சக்கணக்கான குழந்தைகள் ‘போலியோ’வால் முடமாகினர். ஆனால் இன்று போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. முன்பெல்லாம், யாரோ ஒருவர் முடமாகிறார், ஒருவர் கண்பார்வை இழக்கிறார் என்றால் அதெல்லாம் அவரது விதி என்று நாம் காலம்காலமாய் எண்ணி வந்தோம். ஆனால் இன்று அதை நம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டோம். ஆம், ஒரேயொரு சொட்டு தடுப்பு மருந்தைக் கொடுத்து ஒருவரின் விதியையே மாற்றி விடுகிறோம்.

எந்த ஒன்றிற்கும் உடனடியாக அல்லது நிர்பந்தத்தின் பேரில் எதிர்செயல் செய்யாமல் அதற்கு சற்று அதிக கவனம் செலுத்தினால், உங்கள் விதியை வெகு சுலபமாக உங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

இன்று வாழ்வு மற்றும் சாவை நம் கையில் எடுத்துக் கொண்டு விட்டோம். 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஒரு இந்தியரின் சராசரி வாழ்க்கைக் காலம் இருபத்தி எட்டு. இன்றோ அது அறுபத்தி நான்கு. இறந்திருக்க வேண்டியவர்கள் பலரை நாம் பிழைக்கச் செய்திருக்கிறோம்.

எவையெல்லாம் உங்களுக்குப் புரியவில்லையோ அவற்றை விதி என்று சொல்கிறீர்கள். ஆனால் புரிந்துவிட்டால், அடுத்த கணம், அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்கிறீர்கள். ஒரு மனிதனாக, படைப்பு என்ற வகையில் உங்களைப் பற்றியும் மற்றும் உங்கள் வாழ்வின் தற்போதைய நிலை குறித்தும் ஒவ்வொன்றையும் அறியும் திறன் உங்களுக்கு உண்டு. அப்படித்தான் நீங்கள் உருவாக்கப் பட்டிருக்கிறீர்கள். நீங்கள் எப்போது ஒன்றை புரிந்து கொள்கிறீர்களோ, அப்போது அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்கிறீர்கள். புரிந்து கொள்ளாமல் யார் இருக்கிறாரோ, இன்னும் அறியாமையிலேயே யார் அமிழ்ந்திருக்கிறாரோ, அவர்தான் விதி என்று நினைப்பார். வாழ்வின் செயல்முறையை புரிந்து கொண்டுவிட்டவரோ, தன் வாழ்க்கையின் கடிவாளத்தை தன் கையில் ஏற்று, தன் வாழ்வை தானே நடத்திக் கொள்வார். வாழ்வின் அடித்தளங்களான பிறப்பு, இறப்பு, ஏன், நீங்கள் யாரின் கருவில் பிறக்க வேண்டும் என்பதையுமே கூட, உங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் சாத்தியம் உங்களுக்கு இருக்கிறது. இப்போதும் கூட, உங்களுக்கு எது வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள், ஆனால் விழிப்புணர்வின்றி.

எந்த ஒன்றிற்கும் உடனடியாக அல்லது நிர்பந்தத்தின் பேரில் எதிர்செயல் செய்யாமல் அதற்கு சற்று அதிக கவனம் செலுத்தினால், உங்கள் விதியை வெகு சுலபமாக உங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம். விதி என்பது ஒருவர் சுயமாக உருவாக்கிக் கொண்டுவிட்ட குழப்பம், பிரச்சினை. ஆனால் யாருமே ‘நான் தான் இந்த முட்டாள்தனத்தை எல்லாம் உருவாக்கிக் கொண்டுவிட்டேன்’ என்று ஒத்துக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அனைவரும் கடவுளை இதற்குப் பொறுப்பாக்கவே விரும்புகின்றனர்.

ஒருமுறை இப்படி நடந்தது. ஒரு விருந்தில், பகட்டான ஒரு மனிதர் ‘பெர்னார்ட் ஷா’ வை நெருங்கி, “நான் சுயமாய் உருவானவன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம். அதற்கு பெர்னார்ட் ஷா அவரைப் பார்த்து, “நல்ல வேளை, கடவுள் மேல் பழி போடவில்லை” என்றாராம். இதை நீங்கள் எல்லோரும் கூடச் செய்யவேண்டும். கடவுள்தான் உங்களை இப்படி உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் இருந்து அவரை நீங்கள் விடுவிக்க வேண்டும். நீங்கள் தான் உங்களை இப்படி உருவாக்கிக் கொண்டுவிட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இப்படியிருப்பதற்கு வேறொருவர்தான் காரணம் என்று நீங்கள் நினைத்துவிட்டால், அத்தோடு உங்கள் கதை முடிந்துபோகும். ‘நான் இப்படி இருப்பதற்கு என் தந்தை சரியில்லாதது தான் காரணம்’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் தந்தையை இன்று நாம் மாற்ற முடியாது, காலம் கடந்துவிட்டது. ஆனால் நீங்கள் இப்படி இருப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று நீங்கள் பார்த்தால், பிறகு உங்களுக்கு வேண்டிய வகையில் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்.