நம் மீது பிறர் வைக்கும் எதிர்பார்ப்பு… நல்லதா?

நம் மீது பிறர் வைக்கும் எதிர்பார்ப்பு... நல்லதா?, Nam meethu pirar vaikkum ethirparppu nallatha?

சத்குரு:

வெவ்வேறு வகையான மக்கள் உங்கள் மீது பலவிதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். உங்கள் மனைவி மாலை 5.30 மணிக்கே வீட்டிற்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார், முதலாளியோ மாலை 7.30 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உங்கள் பெற்றோர், குழந்தைகள், முதலாளி, உங்கள் வாழ்க்கைத் துணை என இவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உங்களிடம் இருப்பதென்னவோ வெறும் 24 மணி நேரங்கள் மட்டுமே. ஆனால், யதார்த்தமாய் கணக்குப்போட்டு பார்த்தால், தேவைப்படுவது என்னவோ 60 மணி நேரங்கள். “எங்கிருந்து அத்தனை நேரத்தைப் பெற?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

மக்கள், உங்கள் திறமையையும் மீறி உங்கள் மீது எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். உங்களை மீறின விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு வரம்தானே? “அவனிடம் எதையும் எதிர்பார்த்து பிரயோஜனமில்லை,” என பிறர் நினைத்தால் அது சாபம் அல்லவா? உங்கள் மேலதிகாரிக்கு உங்கள்மேல் எதிர்பார்ப்பு இல்லாத பட்சத்தில், வேலை பறிபோகத்தானே செய்யும்? இவர்கள் அனைவரும் உங்கள் மேல் பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பது, உங்களைச் சுற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டுள்ள எல்லைகளை கடந்து வளர உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பல்லவா?

அனைவரும் உங்கள் மேல் பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பது, உங்களைச் சுற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டுள்ள எல்லைகளை கடந்து வளர உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பல்லவா?
அப்படியென்றால், அவர்கள் விருப்பத்தையெல்லாம் பூர்த்தி செய்து நீங்கள் பரிபூரண மனிதராய் ஆவீர்கள் என்று அர்த்தமா? அதற்கு சாத்தியமே இல்லை. ஆனால், உங்கள் திறமையை மீறி பிறர் எதிர்பார்த்தால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு கிட்டியிருக்கும் நல்வாழ்வினை ருசியுங்கள், புகார் சொல்லாதீர்கள். உங்களால் எதைச் சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.

சிறப்பாக எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்று சொன்னால், நீங்கள் செய்யும் செயல் குறையில்லாதிருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. குறையில்லாத நிலை என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. குறையில்லாமல் நிகழும் ஒரே சமாச்சாரம் இறப்பு மட்டுமே. விழிப்புணர்வில்லாமல், குறையில்லா நிலையை நீங்கள் தேடினால், மரணத்தை தேடிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். குறையில்லா நிலையை நீங்கள் தேட வேண்டாம். நீங்கள் செய்யும் செயலை குறைவில்லாமல் செய்வதனால் உங்கள் வாழ்க்கை அழகு பெறுவதில்லை, மாறாக நீங்கள் செய்யும் செயலை முழு இதயத்துடன் செய்வதன் மூலம் வாழ்க்கை அழகுபெறும். நீங்கள் எதைச் செய்தாலும், அதில் சிறப்படைந்து கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வாழ்க்கை என்றுமே முழுநிறைவு அடையப் போவதில்லை. உங்கள் மேல் அபரிமிதமான எதிர்பார்ப்பு இருக்கும்போதுதான் உங்களையும் மீறின செயல்களைச் செய்வீர்கள். உங்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாத பட்சத்தில் உங்கள் முழு ஆற்றலையும் நீங்கள் வெளிப்படுத்த மாட்டீர்கள்.

யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுடைய முழு திறனுக்கு உங்களைச் செலுத்துவதற்கு முற்றிலும் வேறு வகையான விழிப்புணர்வு தேவை. அதற்கு நீங்கள் வேறுவிதமான நிலையில் இருப்பது அவசியம். தற்சமயம் நீங்கள் அவ்வாறு இல்லை. மக்கள் உங்கள் மேல் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கேற்றபடி உங்களை நீங்களே உந்திச் செலுத்தும் நிலையிலேயே தற்போது இருக்கிறீர்கள். அதனால், பிறர் உங்கள் மீது அபாரமான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கட்டும், உங்களால் எவ்வளவு கையாள முடியுமோ அதனை கையாளக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகளைக் கையாளுங்கள்.

உங்கள் வாழ்வின் தரம், வாழ்வின் வெற்றி, ஒரு விஷயத்தை நிறைவுசெய்வதைக் கொண்டு நிர்ணயிக்கத் தேவையில்லை. நீங்கள் முழு ஈடுபாட்டுடன் ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறீர்களா என்பதே உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்க வேண்டும்.
சில விஷயங்கள், கைமீறி கட்டுப்பாடில்லாமல் போகலாம். பல்வேறு விஷயங்கள் சிறப்பாக நடக்கவும் செய்யும். உங்கள் வாழ்வின் தரம், வாழ்வின் வெற்றி, ஒரு விஷயத்தை நிறைவுசெய்வதைக் கொண்டு நிர்ணயிக்கத் தேவையில்லை. நீங்கள் முழு ஈடுபாட்டுடன் ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறீர்களா என்பதே உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்க வேண்டும். எது நடக்க வேண்டுமோ அது உங்கள் தகுதிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப நடைபெறும். ஆனால், நீங்கள் அக்கறை கொள்ளும் விஷயத்திற்காக உங்களை நீங்கள் நூறு சதவிகிதம் கொடுக்கப் போகிறீர்களா என்பதே கேள்வி.

வேலைக்கு செல்வதும், குடும்பத்தைக் கையாள்வதும் பிழைப்பிற்காக நீங்கள் செய்யும் செயல்கள், இதில் சாதித்துவிட்டேன் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அசாதாரணமான செயலை ஒன்றும் நீங்கள் தேர்ந்தெடுத்துவிடவில்லை. இவற்றைச் செய்வதற்கு அற்புதமான திறமை ஒன்றும் தேவையில்லை. ஆனால், பெரும்பாலான மனிதர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக மட்டும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தன் வாழ்நாளை வெறுமனே வாழ்ந்து, எப்படியோ உயிர்வாழ்வதற்காக கடந்தோடிவிடுகிறது. அப்படி வாழ வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மனிதன் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட திறமையைக் கொண்டவன். அந்த திறன் வெளிப்பட அவனது மனம் தெளிவு பெறுவது அவசியம். அதற்கு சில எளிமையான கருவிகளும், ஆன்மீகப் பயிற்சிகளும் உள்ளன. அதனைச் செய்து வந்தால், சிறிது காலத்திலேயே மனம் தெளிவடைவதையும், தெளிவுடன் விஷயங்களைப் பார்க்க முடிவதையும் நீங்களே உணர முடியும். ஏனெனில், இதுபோன்ற ஒரு பரிமாணம் உங்கள் தகுதியை மீறியது அல்ல, உங்களால் செய்யக்கூடிய ஒரு விஷயமே!
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert