Question: தனக்காக வாழ்பவன் கெட்டவன், பிறருக்காக வாழ்பவனே நல்லவன் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். கடவுள் என்னிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறாரா?

சத்குரு:

நல்லது, கெட்டது என்பதெல்லாம் உங்கள் கண்ணோட்டம்தான். ஒன்றைக் குற்றம் என்றும், ஒன்றை நல்லது என்றும் நினைக்கும் போதே, மனம் சிதைந்து விடுகிறது. கடவுளைக் கொண்டு வந்து அதில் சேர்க்காதீர்கள்.

கடவுள் நல்லவரா? கெட்டவரா? இரண்டும் இல்லை. அவர் ஆனந்தமானவர். அவ்வளவுதான்!

டாக்டரிடம் போகிறீர்கள். அவர் உங்கள் உடம்பைப் பரிசோதித்து முடிவுகள் சொல்வார் என்று காத்திருக்கும்போது, அவர் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்திக்கத் தொடங்கினால், எப்படி உணர்வீர்கள்? நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யாமல், கடவுளைப்பற்றிக் கவலைப்படுவது அப்படித்தான் இருக்கிறது.

நல்லவனாயிருப்பதாகச் சொல்லிக் கொள்வதே கூட ஒருவித நோய்தான்!

வீட்டுக்குத் தாமதமாகத் திரும்பிய சங்கரன்பிள்ளையிடம், "ஏன் இவ்வளவு லேட்?" என்று கேட்டாள் மனைவி.

அலுவலகத்தில் தாமதமாகிவிட்டது!"

"விசாரித்தேன். நீங்கள் அலுவலகத்திலிருந்து ஐந்து மணிக்கே புறப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள்!"

மறுநாளும் அதே தாமதம். அதே கேள்வி. அதே பதில். அதே எச்சரிக்கை. மூன்றாவது நாள் அவர் மனைவி பொறுமையிழந்து, "நாளைக்குப் பொய் சொன்னால், நாக்கில் சூடு வைப்பேன்" என்றாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதற்கடுத்த நாள் சங்கரன்பிள்ளை வீட்டுக்குத் திரும்பியதும், "அடுப்பு எரிகிறதா?" என்று கேட்டார்.

"இல்லையே.... ஏன்?"

"அப்படியானால், இன்றைக்கும் அலுவலகத்தில் லேட்டாகிவிட்டது" என்றார் சங்கரன்பிள்ளை.

இப்படித்தான், தனக்கு ஆபத்து இல்லாதவரைதான் நல்லவன் நல்லவனாக நடந்து கொள்வான்.

நல்லவர்களுக்குக் கெட்டது எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா? அவர்கள் கெட்டது என்று நினைப்பவற்றைத் தவிர்க்க முயல்கிறார்கள்; அவ்வளவுதான்! ஒன்றைத் தவிர்க்க முயலும்போது அது பற்றிய கவனம்தான் அதிகமாகும். ஒன்றின் மீது கவனம் அதிகமாகும்போது, அதிலிருந்து விடுபடவில்லை என்றுதானே அர்த்தம்?

Question: நான் தேடிப் போய் யாருக்கும் உதவி செய்ய மாட்டேன். அதே சமயம் மனதாலும் பிறருக்கு எந்தக் கெடுதலும் நினைக்க மாட்டேன். நான் நல்லவா? கெட்டவனா?

சத்குரு:

மூன்றுவித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

தன்னைப் பற்றிய பொறுப்பைக்கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒருவகை. அவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.

மற்றவர்களைப் பற்றிய கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவன் அடுத்தவன். இவன் மிருகத்தைப் போன்றவன். மிருகங்கள் பொதுவாக யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை. சிங்கம் பசித்திருக்கும்போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது. மற்றபடி, அது உங்களை எதிரியாகப் பார்த்து அடித்துப் போடவில்லை.

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால், தாமாகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை. இவர்கள்தாம் மனிதன் என்ற பதத்துக்கு அருகதை உள்ளவர்கள். மற்றபடி, யாரோ சொன்னதற்காக, மற்றவர்களுக்கு உதவுகிறவர்கள் இதில் சேர்த்தி இல்லை.

சங்கரன் பிள்ளைக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார் அவர்.

அறைக் கதவு தட்டப்பட்ட போது, டக்கென்று தொலைபேசி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். கம்பெனி முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார். பிறகுதான் உள்ளே வந்தவனை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, "சொல் தம்பி, உனக்கு உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

அவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னான்... "ஐயா, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்!"

மற்றவர்களிடத்தில் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்கு உடைபடுவார்கள். அவர்கள் போலிகள்!

உங்களிடம் மனித குணம் முழு வீச்சில் இயல்பாகவே இயங்கினால், எந்தக் கோட்பாட்டுக்காகவும் காத்திருக்க மாட்டீர்கள். உங்கள் சக்திக்கு உட்பட்டு, இயல்பாகவே அடுத்தவருக்குத் தேவையானதைக் கவனித்து வழங்குவீர்கள். எங்கெங்கு தேவையோ, அங்கெல்லாம் உங்கள் கரங்கள் தாமாகவே உதவியுடன் நீளும்!

Question: என்னால் எப்படி எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு இருக்க முடியும்?

சத்குரு:

உங்களால் முடியாததை நீங்கள் செய்யாவிட்டால், அது தவறில்லை. செய்யக்கூடியதைச் செய்யாமல் விட்டுவிட்டால்தான், நீங்கள் மனிதராக இருக்கவே தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள்.

மனிதன் எட்டக்கூடிய உயரங்களை எட்டாமலேயே இருப்பது எவ்வளவு பரிதாபமான நிலை?

கடவுளை விடுங்கள். அடுத்தவரை விடுங்கள். உங்களைப் பற்றிக் கவனம் கொள்ளுங்கள். நீங்கள் ஆனந்தமாக இருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கும்.

மனிதர்கள் மேம்பட்டால்தான் மனிதத்தன்மை மேம்படும். மனிதத்தன்மை மேம்பட்டால், யாரும் யாருக்கும் எந்த போதனையும் செய்யத் தேவை இருக்காது. அதனால்தான் யோகாவில் கடவுளைப் பற்றிக் கவனிப்பதில்லை. மனிதர்களைப் பற்றியே கவனம் கொள்கிறோம்.