இந்த வார ஸ்பாட்டில், கடந்த சில வாரங்களாக தான் மேற்கொண்டிருக்கும் மிகப் பரபரப்பான பயணம் பற்றி சத்குரு பகிர்கிறார். நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என எல்லைகள் பல கடந்து பற்பல நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்து கொண்டிருக்கிறார். கனடா - அமெரிக்கா - ஹாங்காங்க் - இந்தியா - ரஷ்யா - ஜெர்மனி - இங்கிலாந்து என இவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு கீழே. அந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை "ஸ்லைடு" செய்து பார்க்கத் தவறாதீர்கள்.

லண்டன், 15 நவம்பர் 2017

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நதிகளை மீட்போம் பேரணி முடிந்தபின் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ச்சிகள், பரபரப்பான பயணம் என்று 7 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறேன். கனடா நாட்டில் ஒரு மாபெரும் ஷாம்பவி மகாமுத்ரா தீக்ஷை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மேலும் சில சிறுநிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து அமெரிக்காவிற்கு பயணமானேன். அமெரிக்காவில் பாவஸ்பந்தனா... வழக்கம்போல் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி மிகப் பிரமாதமாக, அற்புதமாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் 750 பேர் பங்கேற்றார்கள். பதிவுகளைத் திறந்த பதினைந்தே நிமிடங்களில் 750 முன்பதிவுகளும் நடந்துவிட்டது! ஆம், 15 நிமிடங்களில்... நாட்களில் அல்ல!

சான் ஃபிரான்சிஸ்கோவில் 1 நாள் தங்கிவிட்டு, லாஸ்-ஏஞ்சலஸ் நகரில் "மோ-டவுன்" புகழ் பெர்ரி கார்டி அவர்களின் (Berry Gordy of Motown fame) இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அந்நிகழ்ச்சியின் தனிப்பட்ட தன்மையாலும், ஸ்மோகீ ராபின்சன் (Smokey Robinson), ஸ்டீவி வன்டர் (Stevie Wonder) போன்ற பலர் பங்கெடுத்ததாலும் இந்த 2 நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்தது. அன்பிற்குரிய ஸ்டீவி, தனது தனித்துவமான பாணியில், தனித்துவமான குரலில் மிகப் பிரமாதமான இசைவிருந்தை வழங்கினார்.

ஹாங்காங்கிற்கு முதல்முறையாக செல்கிறேன். இங்கு 3-நாள் ஈஷா யோகா நிகழ்ச்சி. ஈஷா யோகா வகுப்பை நானே முழுவதுமாக எடுத்து சிறிது காலம் ஆகிவிட்டது. இதில் கலந்துகொண்ட 2700 பேரில், 1600க்கும் மேற்பட்டவர்கள் சீன தேசத்தில் இருந்து இதற்காக வந்திருந்தார்கள். பங்கேற்பாளர்களின் ஈடுபாடும், "தெரிந்துகொள்ளும்" ஆர்வமும் நம்பற்கரியதாக இருந்தது.

நடுவில் ஒருநாள் புதுடில்லி வந்திருந்தேன். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு "நதிகளை மீட்கும்" பணியை முன்னெடுத்துச் செல்லும் தேசிய குழுமம் ஒன்றை அமைப்பதற்காக. மிகப் பிரபலமான, உறுதி படைத்த 5-பேரின் குழு இது. 16 கோடி மக்களின் பங்கேற்போடு, தேசத்தின் அனைத்து அங்கங்களும் பங்கேற்ற "நதிகளை மீட்போம்" பேரணிதான் இவ்வுலகில் நடந்திருக்கும் பேரணிகளிலேயே மிகப் பெரியது என்று ஒரு ஊடகம் தெரிவித்திருக்கிறது. வறண்டு வரும் நம் நீர் நிலைகளை மறுசீரமைக்க நாம் மேற்கொண்ட இந்த "நதிகளை மீட்போம்" முயற்சி, ஒரு நிலையான தீர்வை நோக்கி உறுதியாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பல நிகழ்ச்சிகளின் இடையே டில்லியில் அந்த ஒரு நாள் பரபரப்பாக நடந்துமுடிந்தது. அங்கிருந்து கிளம்பி ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரை வந்தடைந்தோம்.

1980களில் மாஸ்கோவில் ஒலிம்பிக்ஸ் நடந்தபோதிருந்தே மாஸ்கோவிற்கு செல்லவேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தது. மாஸ்கோ நகர் நமக்குப் பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் வழியாகவே பரிச்சயமாகி இருப்பதால், தெருவில் செல்லும் ஒவ்வொருவரும் ரஷ்யாவின் இரகசிய ஒற்றர்படை முகவராக (KGB agent) இருப்பாரோ என்று எதிர்பார்க்கத் தோன்றும். ஆனால் அப்படி எதிர்ப்பார்த்துச் சென்றால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

இன்றைய மாஸ்கோ மிக உயிரோட்டமான, அழகான நகரம். அது தனக்கென ஒரு கம்பீரத்துடன் மிளிர்கிறது. பொது நிகழ்ச்சிகள், தனிப்பட்ட நிகழ்ச்சிகள் என்று இங்கு 3-நாள் தங்கியிருந்தோம். ரஷ்ய சமுதாயத்தில் தேடுதலும், தெரிந்துகொள்ளும் ஆர்வமும் மக்களிடையே பரவலாக இருக்கிறது. பொதுவுடைமைக் கொள்கை மக்களை கற்பனையான நம்பிக்கைகளிலிருந்து விடுபட வைத்திருப்பது போலத் தோன்றினாலும், அது, மக்களை, தங்கள் அடிப்படைத் தேடலுக்கான தீர்வுகளை இழந்தவர்களாய் நிற்க வைத்திருக்கிறது. "ஆன்மீகப் பயிர்செய்ய" இது வளமான பூமி.

அங்கு ஒரு மாலைப் பொழுதில் பாலே நடனம் காணச் சென்றிருந்தோம். அதை மிகப் பிரமாதம் என்று சொல்வதும்கூட குறைவுதான். இதை முடித்துக்கொண்டு ஜெர்மனியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றோம். ஜெர்மனியில் 24 மணிநேரம்தான். அங்கிருந்து கிளம்பி, இதோ லண்டனில் சயின்ஸ் மியூசியத்தில் "இன் கான்வர்சேஷன்" நிகழ்ச்சிக்கு வந்துவிட்டோம். கடந்த சில மாதங்களாகவே சரியான ஓய்வும், உணவும் இன்றி நலிவடைந்திருந்த என் உடலுக்கு, வெம்பிளி மைதானத்தில் ஒரு ஆனந்தமான மாலைப் பொழுதும் (கால்பந்து போட்டியைப் பார்வையிட்டார்) இரு கோல்ப் சுற்றுக்கள் விளையாடியதும் பெரும் நிவாரணியாக அமைந்தது.

பேரானந்தமும் அருளும்,
SadhguruSignature