Question: என் உறவுகளில் எனக்கு சற்றே மனக் கசப்பு வருகிறது. அது போன்ற நேரங்களில் நான் காலையில் அமர்ந்து தியானம் செய்தால், ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு எனக்கு தீர்வு கிடைக்கிறது. இந்தத் தீர்வுகள் எனக்கு எங்கிருந்து கிடைக்கிறது? இது ஏதேனும் அசரீரியா? தெய்வ சங்கல்பமா? அல்லது என் மனமே தான் இத்தீர்வுகளை எனக்கு வழங்குகிறதா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எது தெய்வ சங்கல்பம்?

வாழ்வின் புதிர்களாய் இருக்கும் மறைஞானத்தையும் ஆன்மீகத்தையும் மக்களுக்கு புரியும் வண்ணம், எளிமையாக வழங்குவதையே என் வாழ்வின் பயனாகக் கொண்டுள்ளேன். ஆனால் இங்கிருக்கும் பலரோ, சாதாரணமாய் இருப்பதையும் புதிராய் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மணி அடிப்பதையும், பூ உதிர்வதையும், 'பவர்-கட்' ஆவதையும் கூட தெய்வ சங்கல்பமாய் எடுத்துக் கொள்கிறார்கள். மனிதர்களுக்கு எட்டாத மறைஞான பரிமாணத்தை மனிதர்களுக்கு எட்டும் வகையில் கொண்டுவருவதற்கு பதிலாக, சாதாரண விஷயங்களையும் மற்ற பரிமாணங்களுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தியானம் செய்தால் மட்டுமே உங்களுக்கு தெளிவான சிந்தனை பிறக்கிறது, மற்ற நேரம் எல்லாமே குழம்பியகுட்டையாய் இருக்கிறீர்கள் என்றால் இது துரதிர்ஷ்டம் தான்.

முதலில், உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வடிகாலாய் தியானத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இது வாழ்வை கையாள்வதற்கான வழியல்ல. இது முட்டாள்த்தனம். ஏனெனில், இது சாதாரண சளித்தொல்லைக்கு 'கீமோதெரபி' (chemotherapy) செய்வதற்கு ஒப்பாகும். சாதாரண சளித்தொல்லைக்கு ஒருசில நாட்கள் மூக்குச் சளியை சிந்தி, மிளகு அல்லது இஞ்சி டீயை குடித்தால், அது தானாகவே சரியாகிவிடும். நீங்கள் தியானம் செய்யும் போது, வாழ்வின் மிகமிக ஆழமான அடிப்படையான விஷயங்களை அணுகுகிறீர்கள். இப்படிப்பட்ட தியானத்தை வாழ்வின் மிக சாதாரணமான அற்ப விஷயங்களுக்கு பயன்படுத்தாதீர்கள்.

பிரச்சனைகள் எப்படி விலகும்?

வாழ்வின் மிக அடிப்படையான விஷயங்களை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டால், மற்ற எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு முட்டாள்த்தனமாகவே தோன்றும். இப்போது அந்த புரிதல் உங்களிடம் இல்லை. அது பரவாயில்லை. ஆனாலும், சளித்தொல்லைக்கு கீமோதெரபி செய்வது சரியல்லவே! தியானம் செய்தால் மட்டுமே உங்களுக்கு தெளிவான சிந்தனை பிறக்கிறது, மற்ற நேரம் எல்லாமே குழம்பியகுட்டையாய் இருக்கிறீர்கள் என்றால் இது துரதிர்ஷ்டம் தான். என்றாலும் இதுபோன்ற குழப்பங்களில் இருந்து விடுபட்டு, தெளிவான சிந்தனையைப் பெறுவதற்கே ஈஷா க்ரியா தியானத்தை உங்களுக்கு வழங்கி இருக்கிறோம். இந்த தியானம் உங்களுக்கு வாழும் அனுபவமாய் மாறும்போது, இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வெயிலைப் பார்த்த பனிபோல இருந்த சுவடில்லாமல் மறைந்துவிடும்.

இன்று குடும்பத்தில் நீங்கள் மனவருத்தம் கொள்ளுமாறு ஏதோ சிறிய பிரச்சனை நடக்கிறது என்றால், அதற்கு தீர்வு காணும் வடிகாலாய் தியானத்தை உபயோகிக்க முயலாதீர்கள். காற்றாற சிறிது தூரம் நடந்து செல்லுங்கள், அல்லது குளத்திற்குச் சென்று சற்று நேரம் நீந்துங்கள்... இழந்திட்ட நிதானத்தை மீண்டும் பெற்றிடுங்கள். நீங்கள் குடும்பம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டதே உங்கள் நல்வாழ்விற்குத்தானே. உங்கள் நல்வாழ்விற்கென நீங்கள் உருவாக்கிக் கொண்ட குடும்பமே உங்களுக்கு இன்று துயரம் அளித்தால், நீங்கள் எதை தவறாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

எதற்காக தியானம்?

பாவப்பட்டு, போனால்போகிறது என்றா நீங்கள் கல்யாணம் செய்து கொண்டீர்கள்? உங்களால் தனியாக வாழமுடியாது என்பதால் தானே உங்களைச் சுற்றி உறவுகளை சேர்த்துக் கொண்டீர்கள்? உங்களுக்கு ஊன்றுகோல் என ஒருவரை சேர்த்துக் கொண்டு, பின் அந்த ஊன்றுகோலையே எட்டி உதைத்தால், நீங்கள் தான் கீழே தள்ளாடி வீழ்வீர்கள். "அய்யோ சத்குரு, உங்களுக்கு புரியமாட்டேன் என்கிறது... தினசரி எங்கள் வாழ்வில் நடப்பவை எல்லாம் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சாதாரணமானதல்ல". அதெல்லாம் எனக்கும் தெரியும் தான். இருப்பினும் வாழ்வை நீங்கள் அணுகும் முறை, அதை எதிர்கொள்ள வேண்டிய கண்ணோட்டத்தை நீங்கள் இழந்துவிட்டதால் தான், இவை பிரச்சனைகளாக உருவெடுக்கிறது. நீங்கள் செய்யும் தியானம் இந்த மேலோட்டமான பிரச்சனைகளுக்கானதல்ல. இவ்வுலகில் உயிர், வாழ்க்கை என மிக அடிப்படையான விஷயங்களை அணுகுவதற்காக.

இவ்வுலகில் நீங்கள் ஏன் தோன்றினீர்கள், உங்கள் வாழ்க்கையின் அடிப்படை இயல்பென்ன என எதுவுமே உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்வின் அடிப்படை இயல்பை நீங்கள் உணர்ந்திருந்தால், இதுவெல்லாம் ஒரு நாடகம் போல் இருந்திருக்கும் உங்களுக்கு. இந்த நாடகத்தை உங்கள் விருப்பம் போல், உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் நடத்திக் கொள்ளலாம். எல்லோரும் ஒரே அளவிற்கு இதில் பங்குபெற வேண்டும் என்று கட்டாயமில்லை. சிலர் அதில் லயிக்கலாம், சிலர் அவ்வப்போது ஆங்காங்கே தலைகாட்டிவிட்டு ஒதுங்கிடலாம். இது அவரவர் விருப்பம். 'என்ன! என் குடும்பம், என் வேலை, என் தொழிலை நீங்கள் நாடகம் என்கிறீர்களா?' ஆம். நீங்கள் இதை இப்போது உணரவில்லை எனில், திரை வீழும் போது, உங்கள் வாழ்க்கை முடிவிற்கு வரும்போது அதை நிச்சயம் உணர்வீர்கள். அதனால் இதை இப்போதே உணர்ந்திடுங்கள். குறைந்தபட்சமாய் அதை ஆனந்தமாக ரசிக்கவேணும் செய்யுங்கள். இல்லை... இல்லை, நான் துன்புற்று வேதனையில் தான் உழல்வேன் என்றால், இது முழுவதும் வீண்தான்.