ஆறாம் நவராத்திரி திருவிழாவான இன்றைய நிகழ்ச்சி பற்றி ஒரு பார்வை, உங்கள் முன்னே!

9 நாட்கள் திருவிழாவான நவராத்திரி திருவிழாவின், இன்றைய ஆறாம் நாள் கொண்டாட்டத்தில் சுக்ரா நாட்டிய அகாடமியைச் சேர்ந்த திரு.சுந்தரமூர்த்தி மற்றும் குழுவினரின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இளமையும் துடிப்பும் மிக்க நாட்டியக் கலைஞராகவும் நாட்டிய ஆசிரியராகவும் திகழ்ந்துவரும் சுந்தரமூர்த்தி அவர்கள், சென்னையிலும் சென்னையைச் சுற்றியும் எண்ணற்ற சிஷ்யர்களைக் கொண்டவராவார். பல்வேறு விருதுகளை தனதாக்கிக்கொண்ட திரு.சுந்தரமூர்த்தி அவர்கள், பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களுக்கு தனது நடன அமைப்பினை வழங்கியுள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், பெரிய கொம்பாட்டம், சிலம்பாட்டம், சாட்டை குச்சியாட்டம், பொய்க்காலாட்டம், கரகாட்டம் என பல்வேறு நாட்டுப்புற நாட்டிய வடிவங்களை கண்முன் நிறுத்திய திரு.சுந்தரமூர்த்தி மற்றும் குழுவினர், பார்வையாளர்களையும் துள்ளி எழுந்து ஆடச்செய்தனர். பக்க வாத்தியங்களாக நையாண்டி மேளமும், மங்கள நாயனமும் முழங்க, பறை இசைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

கரகாட்டத்தில் கரகத்தை தலையில் வைத்து சமன் செய்தபடி, பல்வேறு சாகசங்களில் ஈடுபட்ட குழுவினர் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றனர்.

அந்த அற்புத கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். ஆறாம் நாளான இன்று, மஞ்சள் அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.

நாளை...

ஏழாம் நாள் திருவிழாவான நாளை, சின்மயா சகோதரிகள், உமா மற்றும் ராதிகா அவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது!