12 வயது மாணவர் இளவரசன், பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் சேர்ந்து ஒரே வருடத்தில் 2000 மரக் கன்றுகளை வளர்த்திருக்கிறார்! அது மட்டுமல்லாமல் எப்படி மரக்கன்றுகளை வளர்த்து பராமரிப்பது என்பதைப் பற்றி மற்றவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்! இது எப்படி சாத்தியமானது? மேலும் படிக்க...

"இந்த திட்டம் துவங்குவதற்கு முன்பு, மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் நாங்களெல்லாம் ஏதாவது விளையாடிக் கொண்டோ அல்லது அரட்டை அடித்துக் கொண்டோ இருப்போம். எங்கள் பள்ளியில் மரக் கன்றுகள் வளர்க்கப் போவதாக அவர்கள் சொன்னபோது எங்களுக்கு தாளாத உற்சாகமாகிவிட்டது.

நாற்றுப்பண்ணை உருவாக்குவதில் இருக்கும் பலவிதமான செயல்பாடுகளைப் பற்றி எங்கள் பள்ளியின் பசுமைப் பள்ளி இயக்க ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் சார் தெளிவாக விளக்கி புரிய வைத்தார்.

நாங்கள் கவர்களில் மண் நிரப்பி, அவற்றில் விதை நட்டு, சீரான இடைவெளிகளில் தண்ணீர் ஊற்றி, களையெடுத்து மரக்கன்றுகளைப் பராமரித்தோம். பிறகு ஒரு நாள் நான் நட்ட விதை ஒன்று முளைவிட்டதைப் பார்த்ததை என்னால் மறக்கவே முடியாது. அன்று நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். எங்களுக்குள் குழு அமைத்து வேலைகளைப் பிரித்துக் கொண்டு, மரக்கன்றுகளைப் பராமரித்தோம்.

எங்கள் பள்ளியில் அனைவரும் ஆளுக்கொரு மரக்கன்று நட்டிருக்கிறோம். மீதமிருந்த மரக்கன்றுகளை மற்ற குழந்தைகளுக்கும், அக்கம்பக்கத்து கடைகளுக்கும் கொடுத்துவிட்டோம். அடுத்த வருடம் இந்தப் பணி எப்போது துவங்கும் என்று மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறோம். இன்னும் நிறைய மரங்களை நட வேண்டும்"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோவையில் ஆதரவற்ற சிறார்களுக்கான சத்குரு சேவா ஆசிரமத்தில் இருக்கும் 20 சிறுவர்களில் ஒருவரான 12 வயது இளவரசன், தேவாங்க உயர்நிலைப் பள்ளியில் தன்னுடன் படிக்கும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஒரே வருடத்தில் 2000 மரக் கன்றுகளை வளர்த்திருக்கிறார்!

அது மட்டுமல்லாமல் எப்படி மரக்கன்றுகளை வளர்த்து பராமரிப்பது என்பதைப் பற்றி மற்றவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்! அவருடைய பகிர்வைத்தான் நீங்கள் மேலே படித்தீர்கள்...

இயற்கையைப் பாதுகாப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய, அதைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பெரியவர்களுக்கே எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள் இளவரசனைப் போன்ற பள்ளி செல்லும் பல சிறார்கள். இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்திட்டமான பசுமைப் பள்ளி இயக்கம்.

சத்குரு அவர்களின் வழிகாட்டுதலோடு துவங்கப்பட்டிருக்கும் இந்த பசுமைப் பள்ளி இயக்கம், பள்ளிக் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது மற்றும் மரம் நடுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை வெறுமனே பாடபுத்தகத்தில் இருக்கும் மனப்பாடப் பகுதியாக நிறுத்திவிடாமல், அவற்றை நேரடியாக அறிந்து உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் விளங்கி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு, அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் இவற்றைப் பற்றியெல்லாம் குழந்தைகளின் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.

தற்போது கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 200 பள்ளிகளுடன், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் கைகோர்த்து, பசுமைப் பள்ளி இயக்கத்தைத் துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதுவரை இந்த இரு மாவட்டங்களில் மட்டும், பசுமைப் பள்ளி இயக்கத்தின் நாற்றுப்பண்ணைகளில் உருவாக்கப்பட்ட 8.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன! இந்த வருட இறுதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுடனும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் இணைந்து செயலாற்ற உள்ளது.

தமிழகத்தில் மாநில பள்ளிக் கல்வித்துறையில் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த பசுமைக் கரங்கள் திட்டத்தைத் துவக்க முடியும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று, மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த பசுமைப் பள்ளி இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் பசுமைப் பள்ளி இயக்கத்தின் பணிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டு, மிகச் சிறந்த மரக்கன்றுகளை உருவாக்கும் பள்ளிகளுக்கு ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் சார்பில் பசுமைப் பள்ளி விருது வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் இந்த விருதினைப் பெறுவதற்காக 500 பள்ளிகள் போட்டியிடுகின்றன.

வரும் வருடங்களில் இந்த இயக்கத்தினை 1500 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி, 1500 நாற்றுப்பண்ணைகளை உருவாக்கி, மரம் நடுதலில் 75000 மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, 7.5 லட்சம் மாணவ, மாணவியரின் உதவியுடன் 30 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஈஷா பசுமைக் கரங்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

"மனித சக்தி மகத்தான சக்தி", "சிறுதுளி பெருவெள்ளம்" என்றெல்லாம் நாம் பழமொழிகளைப் படித்திருந்தாலும், மழை இல்லையேல் சிறுதுளியும் இல்லை, பெருவெள்ளமும் இல்லை, மனிதனுக்குச் சக்தியும் இல்லை. எனவே நாமாக முன்வந்து முயற்சி எடுத்து இயற்கையைப் பாதுகாக்க எதுவும் செய்ய முடியாவிட்டாலும், இந்த இளம் சிறார்களின் இமாலய முயற்சிக்குக் தோள் கொடுக்கலாமே!

"மரம் வளர்ப்பதற்கு எனக்கு அதற்குப் போதுமான நேரம் இல்லையே, அதற்கான சரியான சூழ்நிலை இல்லையே" என்று நினைப்பவர்கள் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு: ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் - http://www.giveisha.org/pgh

அலைபேசி: 94425 90062