Question: இந்த பிறவியில் நான் ஆனந்தமாக வாழ்வதை என் பூர்வ வாசனைகள் தடுக்க முடியுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதலில் சில விஷயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்றால் என்ன? நான் என்றால் என்ன? கர்மா என்றால் என்ன? இவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். கர்மா என்றால் நீங்கள் இதுவரைக்கும் சேர்த்து வைத்த தன்மை. உடல்நிலையில், மனநிலையில், உணர்ச்சி நிலையில் எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலின் மீதம் உங்களுக்குள் சேர்ந்து விடுகிறது. நீங்கள் ஒரு எண்ணம் உருவாக்கினீர்கள் என்றால், அந்த எண்ணத்தின் சாரம், உங்களுக்குள்ளே தங்கிவிடுகிறது, இல்லையா? ஒரு உணர்ச்சியை உங்களுக்குள் உருவாக்கினீர்கள் என்றால், அந்த உணர்ச்சியின் மீதம் சிறிது இருக்கிறதல்லவா? முழு உணர்வும் இல்லையென்றாலும், சிறிதளவு மீதம் உள்ளே தங்கிவிடும். இவ்விதமாக, நாம் உடல்நிலையில், மனநிலையில், உணர்ச்சிநிலையில் எதைச் செய்தாலும் அதனுடைய மீதம் நமக்குள் சேர்ந்துவிடுகிறது. இதற்குத்தான் கர்மா என்று கூறுகிறோம். இந்த மீதம் சேர்ந்து சேர்ந்து ஒரு பெரிய குவியலாக மாறுகிறது. பலவிதமான மீதம் சேர்ந்து குவியலாகிவிட்டதால் அதற்கென்று ஒரு வாசனை ஏற்படுகிறது. எந்த மாதிரி குப்பை நம்மிடம் சேர்கிறதோ அந்த மாதிரி வாசனைதானே வருகிறது?

உங்களுடைய வாழ்வின் தேடுதல் மட்டுமல்ல. உங்களுடைய வாசனைக்கேற்றாற்போல, சூழ்நிலையும் மாறும். உங்கள் குப்பை ஒரு மாதிரி இருந்தால் ஒரு மாதிரி ஈ உங்களை தேடி வரும். உங்கள் வாசனை வேறு மாதிரி இருந்தால் வேறு மாதிரி ஈ உங்களைத் தேடி வரும். உங்களுடைய வாசனை எப்படி இருக்கிறதோ, அந்த விதமாகவே உங்களைச் சுற்றி சூழ்நிலைகள் நடக்கிறது.

உதாரணமாக நம் வீட்டிற்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கோவிலில் பூஜை நடத்திய பூவையெல்லாம் கொண்டு வந்து கொட்டினால், குப்பைத் தொட்டியிலிருந்து நல்ல வாசனை வீசும். மறுநாளில் சிறிது கெட்டுப்போன மீனைப் போட்டால், அதிலிருந்து இன்னொருவிதமான வாசனை வீசும். வேறுவிதமான அசிங்கங்களைக் கொட்டினால் அதற்கென்று வேறு வாசம் வீசும். குப்பைத் தொட்டியில் எந்த மாதிரி குப்பை இருக்கின்றதோ, அந்த மாதிரியான வாசனைதான் கிளம்பும். ஆகவே, சம்பிரதாயமாக இதற்கு ‘வாசனா’ என்று கூறினார்கள். உங்களுக்கான வாசனா இது என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்னவென்றால், உங்களுடைய குப்பை எப்படியிருக்கிறதோ, அந்த மாதிரி நாற்றம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. உங்களுடைய நாற்றம் எப்படி உள்ளதோ, அந்த நோக்கத்தில்தான் உங்களுடைய வாழ்வின் தேடுதல் நடக்கிறது.

உங்களுடைய வாழ்வின் தேடுதல் மட்டுமல்ல. உங்களுடைய வாசனைக்கேற்றாற்போல, சூழ்நிலையும் மாறும். உங்கள் குப்பை ஒரு மாதிரி இருந்தால் ஒரு மாதிரி ஈ உங்களை தேடி வரும். உங்கள் வாசனை வேறு மாதிரி இருந்தால் வேறு மாதிரி ஈ உங்களைத் தேடி வரும். உங்களுடைய வாசனை எப்படி இருக்கிறதோ, அந்த விதமாகவே உங்களைச் சுற்றி சூழ்நிலைகள் நடக்கிறது. இதைத்தான் கர்மா கர்மா என்று கூறி வருகிறோம். இப்போதுள்ள உங்களின் குப்பைத் தன்மையை நீங்கள் மாற்றிக்கொள்ள வில்லையென்றால், அதே வாசனைதான் வீசிக் கொண்டிருக்கும்.

உங்களுடைய நோக்கத்தின் காரணமாக மேன்மையான ஆர்வங்கள் எழுந்தாலும், இந்தப் பூர்வ வாசனை உங்களை வேறெங்கோ இழுத்துக் கொண்டு போய்விடுகிறது. இப்படி நடக்கிறதல்லவா? இரவில் தயிர்சாதம் சாப்பிட்டீர்கள் என்றால், அது ஒருவிதமான கர்மா. காலையில் 6 மணிக்கு கண் விழித்து எழுந்து ஷாம்பவி செய்ய ஆசைப்பட்டாலும், நம்முடைய நேற்றைய கர்மாவின் வாசனை காரணமாக தூக்கம் கலைய மறுத்துவிடும். ஏனென்றால், நேற்று தயிர்சாதம் உண்ட கர்மாவின் விளைவான வாசனையால் தூக்கம் ஏற்படுகிறது. ஆன்மீகத்தில் வளர வேண்டும். ஷாம்பவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும் நேற்றைய வாசனை உங்களை வேறுபக்கம் இழுத்துக் கொண்டு போகிறது. இதனால்தான் உணவு எப்படி அமைய வேண்டும் என்று வகுப்பில் நாம் சொல்லிக் கொடுக்கிறோம். ஒரு குறிப்பிட்ட விதமான செயல் செய்ய விரும்பினால், அதற்குத் தகுதியாக நம்முடைய உடலை வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

கடிகாரம் அடிக்கும் முன்பே எழுந்துகொள்ள விரும்பினால், முந்தைய நாளின் கர்மாவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலையில் எழுந்தால், வாசனா நம்மை வேறுவிதமாக இழுக்கிறது. இப்பொழுது ‘நீ’ ‘நான்’ என்று கூறிக் கொள்கிறீர்கள். நீங்கள் இதுவரை நினைத்தது, உணர்ந்தது, செய்தது எல்லாமே நம் செயலின் மீதம்தானே, அதைத்தானே ‘நான்’ என்று கூறிக்கொள்கிறீர்கள்? இந்த ‘நான்’ என்பதை அழிக்கவில்லையென்றால், ஆன்மீகம் எப்படி நடக்கும்? நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றால், முந்தைய செயல்களின் மீதத்தினால் உருவாகிய இந்த உருவினை நாம் அழிக்க வேண்டும். இல்லையென்றால், ஆனந்தம் எப்படி நடக்கும்? பழைய கதைதான் தொடரும். என்ன செய்தாலும் அதே வாசனைதான் ஒட்டிக் கொள்ளும். அதனை அழித்தால்தான் ஆனந்தமாக இருப்பதற்கான ஒரு சூழ்நிலையை ஒரு அடிப்படையை நாம் உருவாக்க முடியும்.