முக்திநாத் மலையேற்றம்!

இவ்வருடத்திற்கான கைலாஷ் மானஸரோவர் யாத்திரை இனிதே துவங்கியது. இந்த வார சத்குரு ஸ்பாட்டில், காட்மண்டுவில் இருந்து ‘ஹூம்டே’விற்கு பயணித்த தன் அனுபவத்தை இங்கே வார்த்தைகளாகவும், கவிதை வடிவிலும் பகிர்கிறார் சத்குரு.

காத்மாண்டுவில் தரை இறங்கி இன்னும் 48 மணி நேரம் கூட ஆகவில்லை. வரவிருக்கும் கடினமான மலையேற்றத்திற்கு ஒரு ஆயத்தமாக கோகர்ண மலையின் உள்ளகத்தில் 45 குழிகள் வெட்டினோம். சிக்கலான மலை முகடுகளின் நடுவே வளைந்து நெளிந்து, பருவமழை மேகக் கூட்டங்களின் புகைமண்டலத்துள் நுழைந்து வெளிவந்து, ஒருவழியாக எங்களில் சிலர் ஹும்டே (Humde) வந்தடைந்தோம். AS350 எனும் ரோட்டரி விங் அற்புதம் எங்களில் 17 பேரை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. மற்றவர்களால் இந்த சொர்க்கலோக மேகக் கூட்டங்களின் வாயிற்கதவுகளை தாண்டி வரமுடியவில்லை என்றே சொல்லவேண்டும். இவர்கள் எல்லாம் போகஹராவில் (Pokahara) இருந்து கிளம்பி, நாளை மதியம் மனங் (Manang) வந்து சேர்வார்கள்.

பிரமிக்கவைக்கும் இந்த பிரம்மாண்ட மலைத் தொடர்களின் நடுவே செல்லும் இப்பயணத்தை, யாத்திரையின் நிமித்தம் மேற்கொண்டாலும், இது நம் உள்நிலை திடத்தை பரிசோதிப்பதாகவும் அமைகிறது. மனிதர்களின் அகங்காரத்தை பெரிதளவு ஒடுக்குவதோடு, வாழ்வின் பொய்யான அளவுகோள்களை அடிக்கோடிட்டு, மரணத்தின் அருகாமையையும் இது உணர்த்துகிறது. மூடிவிலகி விளையாடும் மேகங்கள், போதையில் தடுமாறும் மனம் போல், மலையின் வெவ்வேறு அம்சங்களையும், பாவங்களையும் ‘தோன்றிமறையும் காட்சியாய்’ சித்தரிக்கின்றன. அஜானுபாகுவாய் வீற்றிருக்கும் அன்னபூர்ணா சிகரத்தின் பின்னே ஆதவன் மறையும்போது, மனங் பள்ளத்தாக்கின் மீது ஒருவித அமைதி படர்கிறது. ரம்மியமான பலவண்ண ஆடையை உடுத்தியது போன்று காட்சியளித்த பள்ளத்தாக்கு, சூரியன் மறைந்ததும் ஆடைகளைக் களைந்ததுபோல் இப்பிரபஞ்சத்தின் நிறத்தோடு ஒன்றுகலக்கிறது.

முக்திநாத் அடைவதற்கு இம்மலைகள் வழியே இன்னும் பற்பல மைல்கள் செல்ல வேண்டியிருக்கிறது!

வலிமிகுந்த சொர்க்கம்

பனிபடர்ந்த அன்னபூர்ணா மலைசிகரங்கள்

அனைத்தையும் மடுவாக்க

அழகான மனங் பள்ளத்தாக்குடன்

என் மலைப்பித்தும் ஒன்றுசேர

குறைவான பிராணவாயு கொண்ட

குளுமையான மலைக்காற்று போதையேற்ற

.

உடலின் ஒவ்வொரு தசைஇழையும்

நீட்டப்பட்டு வலிநிரம்பினாலும்

அதுவும் சொர்க்கமாகவே தோன்றும்

அனுபவத்தை எதிர்நோக்கி

.

முக்திக்கான பயணமல்ல இது

எனக்கு…

தூய காற்றும், இந்த வலியும்

தரும் இன்பத்தை உணர

என் உள்திடத்தை பரிசோதிக்க

.

என்னை இழுப்பது…

இம்மலை, அதன் மூடுபனி,

அதைச் சூழ்ந்துள்ள மாயம்.

.

அதற்கும் மேலாக…

‘நானாக’ இருக்கும் இது எல்லாவற்றிலும்

என் பரவசப்பித்து உண்டுவிக்கும்

மாயச் சிலிர்ப்பு

மதிமயக்கும் வெற்றுணர்வு

.

பிறப்பென்ன? இறப்பென்ன?

ஏதொன்றும் வழிமறிக்காமல் தொடர்கிறேன்

முக்திநாத் நோக்கி…

.

  மிக்க அன்பும் அருளும்,

Sadhguru
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert