இந்த வாரம் சத்குரு ஸ்பாட்டில், நடிகர் சித்தார்த் சத்குருவிடம் "நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்கும்போது கண்ணாடி என்ன சொல்கிறது?" என்று குறும்பாகக் கேட்க, சத்குரு சிந்திக்கவைக்கும் விதமாக தோற்றத்தைப் பற்றிய ரகசியங்களை நம்முடன் பகிர்கிறார்.

என் வாழ்க்கை எந்நேரமும் மக்களுடன் ஈடுபாடு கொள்ளும்படியாகவே அமைந்திருக்கிறது. நான் எங்கிருந்தாலும் பல வழிகளில் மக்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்வது மிகக் கடினம்தான். இதனால்தான் நான் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை கூட குளிக்க வேண்டியிருக்கிறது. அது என் செயல்பாட்டின் அளவைப் பொறுத்தது - குறைந்தது இரண்டு முறை, அதிகபட்சம் ஐந்து முறை. நான் மக்களைத் தொடுவதால் என்னைக் கழுவிக்கொள்ள இப்படிச் செய்யவில்லை, ஆனால் இது தேவைப்படுகிறது.

நான் என் கைகளால் மக்களைத் தொடாவிட்டாலும், என் வேலையின் அடிப்படை அம்சமே, ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்துடன் நான் வைத்துக்கொள்ளும் சக்தித் தொடர்புதான். பல்வேறு மக்களின் பல்வேறு அம்சங்கள் என்னோடு ஒட்டிக்கொண்டு விடுவதால் குளியல் அவசியமாகி விடுகிறது. சரி, குளித்தபின் நான் கண்ணாடியில் பார்க்கிறேனா என்றால் இல்லை. நான் தினமும் ஒரே மாதிரிதான் தோற்றமளிக்கிறேன். பெரும்பாலான ஆண்களுக்கு வெவ்வேறு அளவில் முகத்தில் முடி பிரச்சனை உள்ளதால், அதனை நேர்த்தியாக்கவோ சவரம் செய்யவோ வேண்டியிருக்கிறது.

ஆனால் எனக்கோ என் தாடியை ஒழுங்குபடுத்தினாலே போதும். அதற்கு கண்ணாடி தேவையில்லை. தாடி எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும் - என் வேலையை முடித்து விடுவேன். முழுவதும் கலைத்து விட்டு மீண்டும் கண்ணாடி பார்க்காமலேயே ஒழுங்குபடுத்திவிடவும் என்னால் முடியும். என் வாழ்க்கையில் கண்ணாடி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏனென்றால் என் தோற்றம் நிலையானது. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தோற்றம் எனக்குக் கிடையாது. என் கண்களை சற்றுநேரம் மூடிக்கொண்டு, உணர்வுகள் மூலம் பார்க்கும்போது நான் எப்படித் தோற்றமளிக்கிறேன் என்பது  எனக்குத் தெரிந்துவிடும். நான் பிரகாசமாக இருக்கிறேனா இல்லையா என்பது அப்போது எனக்குத் தெரிந்துவிடும். என் தோற்றம் பிரகாசமாக இல்லை என்றால் இன்னும் சற்று நேரம் கண் மூடினால் போதும், எல்லாம் சரியாகி விடும்.

முக்கியமான கேள்வி எதுவென்றால் நன்றாக தோற்றமளிப்பது முக்கியமா அல்லது உங்களுக்குள் நல்ல நிலையில் இருப்பது முக்கியமா? நீங்கள் நன்றாக தோற்றமளிக்கிறீர்களா என்பதைவிட உங்களுக்குள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் உண்மையாகவே உங்களுக்குள் அற்புதமாக உணர்கிறீர்கள் என்றால் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் தங்களுக்குள் அற்புதமாக உணர்வார்கள். நீங்கள் பேரானந்தத்தை உணர்ந்தவர் என்றால், உங்களுடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் அந்த பேரானந்தத்தை உணர ஆரம்பிப்பார்கள்.

எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமே அழகான முகம் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பேரானந்தத்தைப் பிரதிபலிக்கும் முகமே பிரகாசமான முகம். நீங்கள் நன்றாகத் தோற்றமளித்தால் ஒரு அழகிய கலைப்பொருளாக  இருக்க முடியும், அதற்கு மேல் எதுவும் நடக்காது. சிற்பங்கள், ஓவியங்கள் இவைகள் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றன. அழகாகத் தோற்றமளிப்பது தவறு என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதற்காக எவ்வளவு நேரம் முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் யாரென்பதைத் தீர்மானிக்கிறது.

உங்களுக்குள்  நிலையாக ஏதோவொரு தன்மை இருக்குமெனில், உங்கள் தோற்றம் உங்களுக்கு முக்கியமாகத் தெரியாது. அதற்காக, நான் என் தோற்றத்திற்காக சிறிதும் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்லவில்லை. கண்டிப்பாக கவனம் செலுத்துகிறேன். 'நன்றாக தோற்றமளிக்கிறேனா' என்பதைவிட 'எனக்குள் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா' என்பதற்கு நீங்கள் எவ்வளவு நேரமும் கவனமும் செலுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

நான் நன்றாகத் தோற்றமளிக்க வாய்ப்பே இல்லாததால், இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும் என்று இப்படி தத்துவம் பேசுகிறேனோ என்னவோ! அப்படி யோசித்தால், தோற்றத்தை சரி செய்வதற்கு டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒன்றும் அது அதிமுக்கியமானது அல்ல. அதனால், இதோ இங்கே உங்கள் முன் இந்த நிலையில் இருக்கிறேன்!

இன்றைக்கு மக்கள், கைகளை எந்நேரமும் தங்கள் முடியிலேயேதான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுக்குள்  நிலையான தன்மை எதுவும் இல்லாததே இதற்கு காரணம். உங்களுக்குள் தகுந்த பண்புகளை உருவாக்கிவிட்டால், உங்கள் தலைமுடி எப்படி இருந்தாலும் சரி, மக்கள் உங்களைக் கொண்டாடவே செய்வார்கள். ஒரு நடிகனாகவோ அல்லது யாரோ ஒருவராகவோ இந்த உலகில் நீங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தால், அந்தத் தாக்கம் உங்கள் தீவிரத்தாலும் பண்பாலும்தான் உருவாகுமே தவிர உங்கள் முடியின் அமைப்பால் அல்ல.

அறிவாற்றல், தீவிரம், ஒழுக்கம், குணம், நடத்தை, நடையுடைத் தோற்றம், நளினம், அன்பு, ஆனந்தம், ஆரோக்கியம், சமநிலை, உற்சாகம், ஆகியவற்றின் கலவையே ஆழகும் நேர்த்தியான தோற்றமும். இதனுடன் சில உடல் உறுப்புக்களின் அளவும் வடிவமும் கூட கண்டிப்பாக உள்ளடங்கும். ஆனால், முதலில் குறிப்பிட்ட அனைத்தையும் நீங்களாகவே அடைந்துவிடலாம். கடைசியாக குறிப்பிட்டதற்கு மட்டும் பரம்பரை மரபணுக்களின் உதவியும் கொஞ்சம் பிளாஸ்டிக் சர்ஜரியின் உதவியும் தேவைப்படலாம்.  அழகைப் பற்றிய ஏதோவொரு குறிப்பிட்ட கருத்தால் கவரப்படாமல், உங்களைக் காண்பவர்கள் அனைவரையும் கவரும் விதமாக நீங்கள் மாறிவிட வேண்டும் என்பதே என் விருப்பம்.

Love & Grace