ஒரு மனுஷன் பேசினா அவனுக்கு நல்லது... பேசலைனா... சுத்தி இருக்கறவங்களுக்கு நல்லது என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. ஆனால் பலர் பக்தியோடு மௌன விரதம் கடைபிடிக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. மௌன விரதம்... கடினம் தான். ஆனால், உண்மையில் அதனால் என்ன பலன் நமக்குக் கிடைக்கும்? சத்குருவிடம் கேட்ட போது...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிகழ்ந்திருக்கும் படைப்பில், ஐம்புலன்களின் மூலம் ஒருவர் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என எல்லாமே வெவ்வேறு அளவிலான சப்தம் (அ) 'நாதத்தின்' அதிர்வுகள் தான். மனித உடலும் மனமும் கூட ஒரு குறிப்பிட்ட அளவிலான அதிர்வுதான். இருந்தாலும் உடலும் மனமும் அறுதி நிலையல்ல. இவை இரண்டும் ஒரு மாபெரும் வாய்ப்பிற்கான வாசல் மட்டுமே. பெரும்பாலானவர்கள் இந்த வாசலைத் தாண்டி செல்வதில்லை. வாசல் இருப்பது, அதைத் தாண்டி உள்ளே செல்வற்கு என்பதை உணராதவர் போல், வாழ்க்கை முழுவதையும் அவர்கள் உடல்-மன அளவில், இந்த வாசலில் அமர்ந்தே முடித்துக் கொள்கின்றனர்.

நிசப்தம் என்றால், 'சப்தத்தை தாண்டிய ஒன்று' என்று அர்த்தம்.

நம் நாட்டில் காய்கறி வியாபாரிகள், "வாழக்காய்... கத்திரிக்காய்" என்று கூவிக் கொண்டு தெருவில் செல்வார்கள். "வாழக்காய்" எனும் சப்தம் வெறும் வாயிற்கதவு தான். நீங்கள் சுவைக்கக் கூடிய காய் வேறு இடத்தில் உள்ளது. நீங்கள் உணரும் இந்தப் பிரபஞ்சமும் அடிப்படையில் அப்படித்தான். அது ஆயிரமாயிரம் சப்தங்கள், அதிர்வுகளின் மணிமண்டபம்.

இந்த வாயிற்கதவை தாண்டி இருக்கும் ஒன்றை உணர்வதற்கு பலவிதமான முயற்சிகளை மக்கள் மேற்கொள்கிறார்கள். நம் ஆசிரமத்திலும் சிலர் 'சைலன்ஸ்' (Silence) அடையாள அட்டையை அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆங்கில வார்த்தையான, அமைதி என்று பொருள்படக் கூடிய இந்த 'சைலன்ஸ்' என்பது இதற்கான சரியான வார்த்தை அல்ல. உண்மையில் நாம் குறிக்க நினைப்பது 'நிசப்தம்'. நிசப்தம் என்றால், 'சப்தத்தை தாண்டிய ஒன்று' என்று அர்த்தம். இந்த நிசப்தநிலையை உணர்வதற்கு நாம் மேற்கொள்ளும் 'முயற்சி' தான் மௌனம். இதை வெறும் முயற்சி என்று நாம் சொல்லக் காரணம், ஒரு சப்தத்தை போலவே மீண்டும் சப்தம் எழுப்பலாம். ஆனால் இதுவரை நாம் கேட்டறியாத, என்றுமே கேட்கமுடியாத 'நிசப்தத்தை' எப்படி பிரதிபலிப்பது..? இது கடினம்தான்.

ஒருமுறை இது நடந்தது. தமிழ்நாட்டின் மந்திரி ஒருவர் புதுடில்லி சென்றிருந்தார். அங்கு அவர் பீகார் மாநில மந்திரி ஒருவருடன் அமர்ந்து சாவகாசமாய் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் அவரவர் ஏய்த்து ஈட்டிய செல்வத்தை பற்றி கர்வத்தோடு பெருமை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தமிழ்நாட்டின் மந்திரி, தன் ஐ-பேட் (iPad) ஐ வெளியில் எடுத்து, காவேரி நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் படத்தை காண்பித்து, "அங்கே பாலம் தெரிகிறதா? அதிலே 12% என் பைக்கு வந்துவிட்டது. அந்தப் பணத்தில் தான் நான் பென்ட்லி காரையே வாங்கினேன்." என்று பெருமை பட்டுக் கொண்டார். ஆனால் பீகார் மந்திரி சிறிதும் அசரவில்லை. தன் பையில் இருந்து பிரம்மபுத்திரா நதியின் கசங்கிப் போன படத்தை வெளியில் எடுத்தார். அந்தக் கசங்கிப்போன படத்தை விரித்து, "அங்கே பாலம் தெரிகிறதா?" என்று கேட்டார். தமிழ்நாட்டின் மந்திரி, "என்ன பாலமா? அங்கே ஒன்றும் தெரியவில்லையே" என்றார். பீகாரின் மந்திரி, தன் பையைச் சுட்டிக் காட்டி, "100%" என்றார்.

நீங்கள் ஞானமடைந்தாலே அன்றி, நீங்கள் பேசுவதில் பல பொய்கள் இருக்கத்தான் செய்யும்.

நீங்கள் என்ன பேசினாலும் அதில் கொஞ்சம் பொய் கலந்துதான் இருக்கிறது. தெரிந்து சொல்லும் பொய்களின் அளவு மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகிறது. சிலர் மனதறிந்து பொய் சொல்வதில்லை என்றாலும், அவர்களே அறியாமல், அவர்கள் சொல்வதில் 15ல் இருந்து 20% பொய்யாக இருக்கும். இது ஏனெனில், அவர்கள் உண்மையென்று நம்பி பேசும் பல விஷயங்கள் உண்மையாய் இருப்பதில்லை. இப்போது வானை நிமிர்ந்து பார்த்து நீங்கள் "ஷிவா!" என்றால், அது நீங்களே உணராத பொய். ஷிவா என்பவர் யார், அவர் எத்திசையில் இருக்கிறார் என்பதே உங்களுக்குத் தெரியாது. இவ்வளவு ஏன், "என்னைப் பார்" என்று நீங்கள் சொன்னால், அதுவும் கூட பொய் தான். ஏனெனில் நீங்கள் சுட்டிக் காட்டும் உங்கள் உடல் நீங்கள் அல்லவே... அது இம்மண்ணின் ஒரு பாகம் தானே!

நீங்கள் ஞானமடைந்தாலே அன்றி, நீங்கள் பேசுவதில் பல பொய்கள் இருக்கத்தான் செய்யும். மௌனத்தை கடைப்பிடிப்பதன் அழகே, நீங்கள் ஒரு பொய்மூட்டையாய் இருக்கிறீர்கள் என்பதை நீங்களாவது அறிந்திருக்கிறீர்கள் என்பதுதான். இதை நீங்கள் உண்மையிலேயே அறிந்திருந்தால், இந்நிலையைப் பொறுத்துக் கொண்டு உங்களால் வாழமுடியாது... எப்படியாவது இதை மாற்றியே ஆக வேண்டும் என்று நீங்கள் ஏங்க ஆரம்பித்துவிடுவீர்கள். பிரச்சனை சதவிகிதக் கணக்கில் தான் தோன்றுகிறது. இப்போது, நீங்கள் 100% பொய்யாக இருக்கிறீர்கள் என்றால், இதில் பிரச்சனை இல்லை. நீங்கள் அதை விட்டொழித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் நீங்கள் 12% மட்டுமே பொய்யாக இருந்தால், 'ஒருவேளை இந்த நிலை பரவாயில்லையோ...' என்று நீங்கள் எண்ண ஆரம்பித்து விடுவீர்கள்.

நீங்கள் பொய்யின் பிம்பமாய் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் தான் 'உண்மை என்ன' என்கிற தேடல் உங்களுக்கு பிறக்கிறது. இல்லையெனில் எதையும் தேடுவதற்கு அவசியமில்லையே. இவ்வுலகில் பலர் இந்தத் தேடுதலில் இறங்கவில்லை... காரணம் அவர்கள் சதவிகிதக் கணக்கில் சிக்குண்டு போயிருக்கிறார்கள். 'நாமெல்லாம் பரவாயில்லை' என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் முழுமையான பொய்யாய் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், உண்மையைத் தேடுவதற்கு இயற்கையாகவே உங்களுள் ஏக்கம் பிறக்கும். இதற்குத் தான் 'மௌனத்தை' கடைபிடிக்கிறோம். பேசுவதில் தெளிவில்லை என்றால், வாய் மூடி இருப்பதே சிறந்ததல்லவா!